சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 611-620
611. Act of terrorism | வன் செயல் பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம். இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம். தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது அரசியல், சமயம், குமுகம், இனம் அல்லது சுற்றுச்சூழல் இயல்பு போன்ற உள்நாட்டுத் தாக்கங்களிலிருந்து மேலும் கருத்தியல் இலக்குகளுக்காக தனியர்கள், குழுக்களால் செய்யப்படும் வன்முறை, குற்றச் செயல்கள். பன்னாட்டு வன்முறை என்பது வெளிநாட்டு வன்முறைக் குழுக்களால் அல்லது வன்செயல் ஆதரவு நாடுகளால், ஈர்க்கப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய தனியர் அலலது குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்செயல்கள்; பிற நாட்டு வன்முறைக் குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வன் செயல்கள். வன்செயல்களுக்கான திட்டமிடல், பரப்புரையும் குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, தொடரிகளைக் கவிழ்த்தல் போன்ற வன்முறைகளை விளைவிப்பதால் வன் செயலே. |
612. Act of war | போர்ச் செயல் போரைத் தூண்டும் நோக்கத்துடன் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்லது அறிவிக்கப்பட்ட போரின் போது அல்லது பிற நாட்டு ஆயுதப்படைகளுக்கிடையேயான ஆயுத மோதலின் போது ஏற்படும் செயலாகும். அமைதியாக இருக்கும் மற்றொரு நாட்டை அல்லது அதன் பகுதியைக் கவரும் வன் செயல். படைகளைப் பயன்படுத்தி மற்றொரு நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது. இப்பெயரில் புதினம், காணொளி முதலியன உள்ளன. |
613. Act Or Omission | செய்கை அல்லது விடுகை செய்யக் கூடாததைச் செய்வதும் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதும் குற்றமாகும். இதனையே திருவள்ளுவர், செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் (திருக்குறள் 466) என்கிறார். ஒருவரின் செயலால் பிறருக்குத் தீங்கு நேர்கையில் அச்செய்கை குற்றச் செயலாகிறது. விடுபாடு/ விடுகை/ செய்வன செய்யாமை – ஒரு பொருள் குறித்த இவை சட்டத்தில், தனியருக்கு அல்லது பொதுமக்களுக்குச் செய்யப்பட வேண்டிய கடமையை அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செயலைச் செய்யத் தவறுவது என வரையறுக்கப்படுகிறது. புறக்கணிக்கப்படுகின்ற அல்லது முறையற்ற செயலைப் போலவே வழக்கு தொடுப்பிற்கு விடுபாடும் உள்ளாக்கப்படலாம். மறுபுறம் ஏற்கப்பெற்ற பொறுப்பினை அல்லது கடமையைச் சட்டத்திற்கு இணங்க நிறைவேற்றப் படாமையும் குற்றமாகிறது. இந்தியத் தண்டிப்புச்சட்டம் 1860, தவிர்த்தல்/விடுபாடு குறித்து வரையறுக்க வில்லை. ஆனால், இந்தியத் தண்டிப்புச் சட்டப்பிரிவு 33, செய்கை செய்யாமை குறித்து வரையறுத்துள்ளது. குற்றச் செயலைச் செய்வது குற்றமாவதுபோல், செய்யவேண்டிய கடப்பாட்டைச் செய்யாமையும் குற்றமாகிறது. |
614. Act or regulation having the force of law, an | சட்டத்தின் வலிமையைக் கொண்ட சட்டம் அல்லது ஒழுங்குமுறை ஒரு சட்டம் நாடாளுமன்ற ஈரவைகளாலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன், அரசுப் பதிவிதழில் வெளியிடப்படுகையில் நடைமுறைக்கு வருகிறது. |
615. Act preparatory to commit murder | கொலை ஆயத்தச் செயல் கொலை புரிவதற்காக அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்து ஆயத்தமாக அல்லது அணியமாக இருப்பது. |
616. Act subversive | அழி செயல்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் செயல்கள் அழி செயல்கள் ஆகும். மேலும் தேசத்துரோகம், நாசவேலை, தேசத்திற்கு எதிரான கலகம், நாட்டிற்கு எதிரான இரண்டகச் செயல் நாட்டைக் கவிழ்க்கும் வஞ்சகச் செயல், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வன்முறையைப் பயன்படுத்தல் ஆகியன யாவும் அழி செயல்கள் ஆகும். |
617. Act to consolidate and amend the law, an | சட்ட ஒருங்கிணைப்பு, திருத்தச் சட்டம் நிலைச்சட்டங்களின்(Statutes)திருத்தம், ஒருங்கிணைப்பு, குறியீடாக்கம் என வகைப்படும். திருத்தம் என்பது தற்போதுள்ள சட்டங்களில் அல்லது விதியங்களில் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்வதாகும். ஒருங்கிணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சட்டப் பொருள் தொடர்பான சட்ட விதிகளை ஒன்றிணைக்கும் செயல்முறையாகும். |
618. Act to provide, an | வகைசெய்தற்குரிய சட்டம் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொண்டு பாதுகாப்பும் விளக்கமும் வழங்கும் சட்டம். |
619. Act towards the commission of such offence | அத்தகைய குற்றத்தைச் செய்வது நோக்கிய செயல் இந்தியத் தண்டிப்புத் தொகுப்பின்படி, தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைச் செய்ய முற்படும் எவரும், அத்தகைய முயற்சியில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் வகையில் ஏதேனும் செயலைச் செய்தாலும், அவர் தண்டிக்கப்படுவார். |
620. Act under the direction of (so and so) | (அத்தகைய) வழிகாட்டுதலின்படிச் செயற்படல் தகுதி வாய்ந்த மருத்துவப் பயிற்சியாளர், தொடக்கத்திலும் பண்டுவத்தின்(சிகிச்சையின்) பொழுது இடையிடையேயும் தன் வழிகாட்டுதலில் கற்பிப்பது. பிற பயிற்சி முறைகளுக்கும் வழிகாட்டுதலில் பயிற்சி வழங்கலைக் குறிக்கும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply