சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 651-660
651. Action, penal | தண்டனைக்குரிய நடவடிக்கை அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். |
652. Action, Remedial | மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான குறைகளைக் களையும் நடவடிக்கை தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. மறுசீரமைப்பு நடவடிக்கை மீட்புத் தீர்வு – சுற்றுச்சூழல் தரத்தை நீண்டகாலமாக மீட்டெடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை (விரிவான சுற்றுச்சூழல் எதிர்வினை, இழப்பீடு, பொறுப்புச் சட்டத்தின் கீழ்/ under the Comprehensive Environmental Response, Compensation, and Liability Act) தீர்வு /மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது (அ) எந்த வகையிலும் உட்புற அல்லது வெளிப்புறச் சூழலில் உள்ள அஞ்சத்தக்க பொருட்களைத் தூய்மை செய்தல், அகற்றுதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல், பண்டுவம் செய்தல், கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், கணக்கிடல் அல்லது (ஆ) ஒரு வெளியீட்டைத் தடுக்கவும் அல்லது குறைக்கவும் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆகும். அப்பொழுதுதான், பேரிடரான பொருட்களின் அச்சுறுத்தல் வெளியிடப்படுவதால், அவை இடம்பெயர்வதில்லை அல்லது பொது நலவாழ்வு அல்லது நலன் அல்லது உட்புற அல்லது வெளிப்புற சுற்றுச்சூழலுக்குப் பேரிடரை ஏற்படுத்தாது; (இ) இயற்கை வளங்கள் அல்லது சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது அல்லது மீளமைப்பது; (ஈ) ஏதேனும் முன்-தீர்வு ஆய்வுகள், புலனாய்வுகள் , அல்லது பிந்தைய மறுசீரமைப்பு செயல்பாடு, பேணுகை நடவடிக்கைகள், அல்லது (உ) சுற்றுச்சூழல் சட்டங்களால் தேவைப்படும் பேரிடர் பொருட்கள் தொடர்பாக வேறு ஏதேனும் செயல்களைச் செய்தல். மேற்குறித்த மூன்று பொருள்களும் சரிதான். எனினும் சுருக்கமான மீட்புத் தீர்வு என்பதைப் பயன் படுத்தலாம். |
653. Action. Class | சார் வழக்கு வருக்கச் சார்பு வழக்கு தனியரால் அல்லது குழுவால் பெரிய குழுவிற்கிணங்கத் தொடங்கப்படும் வழக்கு. இவர்கள் அனைவருமே ஒரே எதிர்வாதிக்கெதிரான சட்ட நடவடிக்கையை முன்னிறுத்தலாம் |
654. Actionable | நடவடிக்கைக்குரிய தொடர்தகு வழக்காடத் தக்க போதுமான காரண அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரியது. சட்டப்படி நடவடிக்கை தொடர்வதற்குத் தக்கது. |
655. Actionable Claim | தொடர்தகு பாத்தியம் வழக்குறு கோரல் வழக்காடுரிமை, தொடர் தகும் உரிமை, வழக்கு தொடர்தகு உரிமை, வழக்காடத்தக்க உரிமை. 1990 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் 2 மூலம் சொத்து மாற்றச் சட்டத்தில்(Transfer of Property Act) பிரிவு 3 இல் செயல்படக்கூடிய உரிமைகோரல் வரையறுக்கப்பட்டுள்ளது. செயல்படக்கூடிய உரிமைகோரல் என்பது அசையாத சொத்து, அதன் பரிமாற்றம் இச் சட்டத்தின் 8 ஆவது அத்தியாயத்தில் கையாளப்படுகிறது. செயல்படக்கூடிய உரிமைகோரல்களின் எடுத்துக்காட்டுகள் : வாடகை பாக்கியைக் கோருவதற்கான உரிமை. விலை அல்லது முன்பணத்திற்காக ஒப்பந்தத்தின் கீழ்ச் செலுத்த வேண்டிய பணம். ஒப்பந்தத்தின் பலனைக் கோருவதற்கான உரிமை. கடல் காப்பீடு தவிர பிற காப்பீட்டுக் கோரிக்கை. பரிசுச் சீட்டு. வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் உரிமை. தொடர்தகு பாத்தியம் என்பது பாத்தியதையைக் கோருவதைத்தான் இங்கே குறிக்கிறது. Claim என்பதற்கு அக்கு, அதிகாரம், அவகாசம், ஈட்டும் உரிமை, உரிமை கேள், உரிமைக் கோரிக்கை, உரிமைப் பொருள், உரிமை கொண்டாடு, உரிமை கோரு, கேட்பு உரிமை, கோருதல், கோருரிமை, செலவுக் கோரிக்கை, சொத்துவம், பாத்தியம், கேள், பாத்தியதையைக் கோருதல், வில்லங்கம் எனப் பல பொருள்கள் உண்டு. பொதுவாக நமக்கு உரியவற்றைக் கோருதல், செலவழித்தவற்றை மீளக் கோருதல், செலவழிப்பதற்காகக் கோருதல், உரிமை கொண்டாடிக் கோருதல் என்பனவற்றைக் குறிக்கிறது. வழக்கு தொடுப்பதற்குத் தகுதியுடைய கோரிக்கையை – வழக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்குத் தக்க கோரல் > வழக்குறு கோரல் என்கிறோம். 1990 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் 2 மூலம் சேர்க்கப்பட்டுள்ள சொத்துப் பரிமாற்றச் சட்டத்தின் பிரிவு 3 இல் வழக்குறு கோரல், வரையறுக்கப்பட்டுள்ளது. வழக்குறு கோரல் என்பது எளிதில் உணரஇயலா அசையாச் சொத்து; சொத்துப் பரிமாற்றச் சட்டம் 7 ஆம் இயலில் இது கையாளப்படுகிறது. மற்றொரு தரப்பார் வைத்திருக்கும் பங்குகளில் பயன்களைப் பெறுவதற்குரிய உரிமையைப் பயனுறு நன்மை குறிப்பிடுகிறது. பொதுவாக அறக்கட்டளைகள் தொடர்பானவற்றில் அறக்கட்டளை உடைமைகளில் ஒருவர் ஆர்வம் காட்டும் பொழுது குறிக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினருடனான ஒப்பந்தத்தில் குறிக்கப்பெறும் உரிமை பயனுறு நன்மை எனப்படுகிறது. சட்டப்பிரிவு 3 இல் வழக்குறு கோரல் பாதுகாப்பற்ற கடனுக்கு உரிமை கோருதல், 2.) அசையும் சொத்தில் நலன் பயக்கும் ஈடுபாடு முதலியவற்றைக் குறிக்கிறது. இவை இரண்டும் நீதி மன்றங்களில் துயர் தணிப்பிற்கு ஏற்கப்பெற்ற கோரிக்கைகள் ஆகும். அவதூறு முதலிய கொடுந்தொல்லைகள், இடையூறுகள் தொடர்பானவற்றில் துயரீடு பெறுதல் போன்ற, துயர் தணிப்பிற்கான வேறு வகைக் கோரல்களும் உள்ளன. என்றாலும் இவை, வழக்குறு கோரல்களாக வகைப்படுத்தப் படவில்லை. வழக்குறு கோரல் என்பது மேலே குறிப்பிட்ட இருவகையான கோரல்களைமட்டுமே உள்ளடக்கியது |
656. Actionable per se | தனித்தனியாகச் செயல்படக்கூடியது சட்டப்பூர்வ வழக்கு ஒன்று நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருந்தால், நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்ல இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டது என்பதை மெய்ப்பிக்க வேண்டியதில்லை. அவதூறு போலல்லாமல் தனித்தனிச் செயல்பாட்டிற்குரியது. இலத்தீன் தொடர் |
657. Actionable Wrong | தொடர்தகு தீங்கு செயல்வழித் தவறு இஃது அரசியல் யாப்பினை மீறுவது. இது குற்றமா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா எனப் பார்ப்பதில்லை. வழக்குறு தீங்கு வழக்கு தொடர்வதற்குரிய தீங்கு என்னும் பொருளில் தொடர்தகு தீங்கு என்கின்றனர். வழக்கு தொடர்வது என்பதை விட வழக்கு தொடுப்பது என்பதுதான் சரியாக இருக்கும். எனவே, வழக்கு தொடுப்பதற்குரிய தீங்கினைச் செய்யும் பொழுது அது வழக்குறு தீங்கு எனப்படுவது சரியாக இருக்கும். ஒரு செயல், நிகழ்வு, நடப்பு, இதன்/இவற்றின் மீது வழக்கு தொடுப்பதற்குரிய காரணங்கள் உள்ளன என்னும் பொழுது வழக்குறு தீங்கு எனப்படுகிறது. எடுத்துக்காட்டாகத் தாக்குதல் என்பது வழக்குறு பொல்லாங்காகும். பொல்லாங்கு அல்லது அரசமைப்பு உரிமை மீறல் செயல், குற்றச்செயலா இல்லையா எனப் பார்க்காமல் அல்லது உள்நோக்கம் உள்ளதா இல்லையா என ஆராயாமல் வழக்கு தொடுப்பதற்கு உரியது எனக் கருதி வழக்குறு தீங்கு எனப் படுகிறது. வழக்குறு தீங்கு என்பது, தீங்கியல் சட்டத்தின்படித் தீர்வு காண்பதற்குரிய தீங்கான செயலுடன் முதன்மையாகத் தொடர்புடையதாகும். இதன் மீது உரிமை வழக்கு தொடுக்கலாம்; சேதத்திற்கு இழப்பீடு கோரலாம். அவதூறு , ஒப்பந்த மீறல், குறிப்பிட்ட செயலாக்கத்தை மீறல் முதலியனவற்றிற்கான வழக்குகள் எடுத்துக் காட்டுகளாகும். குற்றம் என்பது மன்பதைக்கு எதிரான தவறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தண்டிப்புச் சட்டங்களின் கீழ்க் குற்றமாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் தண்டனை உண்டு. இங்கே தண்டத் தொகையும் இழப்பீடும் மாநில அரசால் விதிக்கப் படுகிறது. வழக்குறு தீங்கின் மீதான சேத ஈடுகளை, இதற்கு எதிராக வழக்கு தொடுத்துக் கோரலாம். மரண நேர்ச்சிகள் சட்டம் 1855(முழுமையான சட்டம்) பிரிவு 1.அ. (Section 1A in The Fatal Accidents Act, 1855 [Complete Act]) இன் கீழ் வழக்குறு தீங்கால் மரணம் நிகழ்கையில் அல்லது மரணமின்றி ஊறு நேர்கையில் பாதிக்கப்பட்ட தரப்பாருக்கு அதற்கான இழப்பீடுகளைப் பெற உரிமையுண்டு. [பொருட்கள், பணிகள் சட்டத்தில்( GST Act) உரிமை கோரல் என்பது கடனைக் குறிக்கும். கடன் என்பது, அசையாச் சொத்தின் அடைமானம் அல்லது அசையும் சொத்தின் ஒற்றி(ஒத்திக்கு விடல்) அல்லது அடைமானம் அல்லது நீதிமன்றத்தின் ஆதாரமான தணிதொகையாக(நிவாரணமாக)அமையும் கோருநரின் உள்ளபடியான அல்லது ஆக்கமுறையான உடைமையில் இல்லாத உரிமையியல் மன்றங்களில் பயன் நுகர்வில் உள்ள இருப்பு, திரட்டு,கட்டுப்பாடு, தற்செயல் முறையில் இல்லாத கடனை மட்டுமே குறிக்கும்.] |
658. Activate | செயல்திறன் ஊட்டு முடுக்கிவிடு தூண்டிவிடு செயற்பாங்கு சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, கிளர்வூட்டு, எதிர்மின் உமிழ்வு மிகுத்தல், செயலூக்கு, செயல்திறன் ஊட்டு, முடுக்கிவிடு, தூண்டிவிடு என்பன இச்சொல்லின் பொருள்கள். எனினும் வணிகச் சட்டத்தில் செயற் பாங்கிற்கு வரும் நிலை அல்லது நாளைக் குறிப்பதால் செயற்பாங்கு எனலாம். கூட்டாண்மை நிறுவனத்தில் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை உருவாக்கப்பட்ட நாள், உற்பத்திக் கூட்டாண்மையில் முதலீட்டுப் பங்கைச் செலுத்திய நாள் ஆகியவற்றைக் குறிக்கும். இவ்வாறு செயல்பாட்டிற்கு வரும் நாளைக் குறிப்பதால் செயற்பாங்கு என்பது இங்கும் பொருந்தும். |
659. Active Complicity | குற்றச் செயலில் முனைப்பாக இருத்தல் குற்றச் செயலில் உடந்தையாக இருத்தல் |
660. Active concealment | மறைப்புச்செயல் ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் சொல்லாலோ செயலாலோ மறைத்தல். ஒரு தரப்பார், மறு தரப்பாரை ஏமாற்ற அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் எதையாவது மோசடியாக மறைத்தல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply