(வெருளி நோய்கள் 1396 -1400:  தொடர்ச்சி)

தோறணையரைக் கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தோறணை வெருளி.
Euax என்பது இலத்தீன் வியப்பிடைச்சொல். அதிலிருந்துதான் Euaxo உருவானது. தோற்றச்சிறப்பு கண்டு வியப்பதைக் குறிக்கிறது.
தோரணம் > தோரணை என்பதுபோல் தோற்றம் > தோறணை(Posh) எனக் குறிக்கலாம். தோறணையுடன் திகழும் மக்களைத் தோறணையர் (Posh People) எனலாம்.
00

நகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நக வெருளி.
ஒருவரின் நகத்தைக் கொண்டே அவருக்குள்ள நோய்பற்றிக் கூறலாம் என்பர். எனவே, நகத்திற்குப் பாதிப்பு என்றால் உடலுக்குப் பெருங்கேடு என எண்ணி மிகுதியும் கவலைப்படுவர். நகத்தைத் தூய்மையாக வைத்திருக்க முயல்வர். நகத்தில் அழுக்கு சேர்ந்தலோ அளவுக்கு மீறி வளர்ந்தாலோ பெரிதும் கவலைப்படுவர். இந்தக்கவலையால் பேரச்சம் கொள்வர்.
Karfi என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நகம் எனப் பொருள்.
00

நகரக அகராதி(Urban Dictionary) குறித்த வரம்பற்ற பேரச்சம் நகரக அகராதி வெருளி.
இணையவழி அகராதியான நகரக அகராதி(Urban Dictionary)யில் பிற அகராதிகளில் காணப்டாத கொச்சைச் சொற்களும் தரப்படுத்தப்பட்ட அகராதிகளில் இல்லாத மரபுத் தொடர்களும் உள்ளன. இவற்றை விரும்பாதவர்களுக்கு இவ்வகராதி மீது பகுத்தறிவிற்குப் பொருந்தாத தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதுண்டு.
00

கணிணி எழுத்து அல்லது உரு விற்கான நகர்த்தி (computer mouse) குறித்த வரம்பற்ற பேரச்சம் நகர்த்தி வெருளி.
இணையக்கருத்தரங்கம் ஒன்றில் கணிணியியலில் நேர்பெயர்ப்புச் சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும் என்னும் தலைப்பில் அளித்த கட்டுரையில்(2009) குறிப்பிட்டதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
Mouse என்றால் சுண்டெலி என்றும் எலி என்றும் நேர்பெயர்ப்பாகப் பலரும் சுட்டி, நகர்த்தி எனத் தமிழில் சிலரும் குறிக்கின்றனர். அதே நேரம் cursor என்றால் கர்சர் என்றே பெரும்பான்மையரும், நகர்த்தி, சுட்டி, காட்டி என வெவ்வேறுவகையாகச் சிலரும் கூறுகின்றனர். pointer என்றால் பாயிண்டர் என்று பலரும், சுட்டி, காட்டி என்று சிலரும் குறிக்கின்றனர். ஒரே சொல்லையே ஒவ்வொருவர் வெவ்வேறு பொருளில் கையாளுவதால் படிப்பவர்க்குக் குழப்பம் ஏற்படும். mouse என்பதைச் சுட்டி என முதலில் புரிந்து கொண்ட ஒருவர், மற்றொருவரால் cursor என்பதைச் சுட்டி என்று குறித்து விளக்கியுள்ளதைப் படிக்கும் பொழுது பொருள் குழப்பம் வருவது இயற்கைதானே! எனவே, சொற்பொருள்களை வரையறை செய்து, ஒரே வகையான கலைச்சொல்லையே குறிப்பிட்ட பொருளில் கையாள வேண்டும். நகர்ந்து செல்லும் இயக்கம் கொண்ட cursor என்பதை நகரி என்றும் அதனை நகர்த்தும் இயக்கம் கொண்ட mouse என்பதை நகர்த்தி என்றும் வேறோரிட முகவரியைக் காட்டும் pointer என்பதைக் காட்டி என்றும் சொல்லலாம்.
00

நகரும் படிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நகர் படி வெருளி.
நகரும் படியில் இருந்து பிறர் தடுமாறி விழுந்ததைப் பார்த்ததாலோ ஏறும் பொழுதோ இறங்கும் பொழுதோ தடுமாற்றம் வந்ததாலோ படியில் சிக்கிப் படுகாயம் அடையப் போவதாக அல்லது இறக்க நேர்வதாக அஞ்சுவோர் உள்ளனர்.
இயல்பாகவே, நகர்படியில் சென்றால் விழுந்துவிடுவோம் எனக்கருதிப்பெருங்கவலை கொள்வோர் உள்ளனர்.
scala என்னும் இலத்தீன் சொல்லிற்குப் படிகள் என்று பொருள். இங்கே நகரும் படிகளைக் குறிக்கிறது.
00