(வெருளி நோய்கள் 1436 -1440: தொடர்ச்சி)

நாடா(ribbon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாடா வெருளி
Ligament என்றால் விசி=இறுகக்கட்டு எனப் பொருள். உடலியலில் எலும்புகளைப் பிணைக்கும் மெய்ம்மி(திசு) நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு எனப் பொருள்கள். இது நாடா போன்ற அமைப்பாகும். நாடா அல்லது நாடா போன்ற ஒன்றைப் பார்க்கும் பொழுது அல்லது அதனுடன் தொடர்பு ஏற்படும் பொழுது தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாவதை இது குறிக்கிறது.

 பரிசுப்பொருள் கட்டு அல்லது பொதிவு மீது  சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் நாடா-வைக் காணும் பொழுது அல்லது அதனை அவிழ்க்கும் பொழுது கட்டடம், அலுவலகம், அமைப்பு முதலான எதையவாது தொடங்கி வைப்பதற்காகத் திறப்பு விழாவின் பொழுது கட்டப்பட்டிருக்கும் நாடாவைப் பார்க்கும் பொழுது அல்லது அதனை வெட்டும் பொழுது தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாவதுண்டு.

00

நாடாப் புழு(tapeworm) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாடாப் புழு வெருளி.

குமட்டல், தீவிர வயிற்று வலி, தொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்கு, பசியிழப்பு, உடல் எடை குறைதல், ஊட்டச்சத்து குறைபாடு,தலைச்சுற்று, வலுவிழத்தல் போன்றவை நாடாப்புழுவால் ஏற்படும் விளைவுகளின் அறிகுறிகளாகும். எனவே, இது கண்டு சிலருக்கு அளவற்ற பேரச்சம் ஏற்படுகின்றது.

taenia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நாடாப்புழு. இச்சொல்லில் இருந்து உருவானவையே Tenio/Taenio
00

நாடுகள், கண்டங்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாடுகள் வெருளி.

பல நாடுகளின் கலை, பண்பாடு, மொழி, இலக்கியம், வணிகம், மக்கள் மீதான தேவையற்ற பேரச்சம், பெருங்கவலை ஏற்படுவோருக்கு நாடுகள் மீதான வெருளி வருகிறது.

சில நாடுகள் போரில் ஈடுபட்டும் பிற வகையிலும் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்நாடுகள்பற்றிய செய்திகளைப் படித்தாலும் கேள்விப்பட்டாலும் தேவையில்லாத பெருங்கவலையும் பேரச்சமும் சிலருக்கு உண்டாகின்றன.

00

1444. நாட்காட்டி வெருளி – Imerologiophobia     

நாட்காட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாட்காட்டிவெருளி.
காலத்தின் சிறு கூறாகிய நாள் என்பது வாணாள் காலத்தை அறுக்கும் வாள் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்

( திருக்குறள் 334) என உணர்த்துகிறார்.
அத்தகைய நாளைக் காட்டும் நாட்காட்டி மீதான பேரச்சத்தை இது குறிக்கிறது.
00

அற்பப்பொருள் நாட்டம் குறித்த வெருளி (அற்ப) நாட்ட வெருளி.
அற்ப வெருளி என்றால் வெருளியையே அற்பமாகச் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம். நாட்டம் என்பது எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். இங்கே அற்பப்பொருள் மீதான நாட்டம் என்று பொருள் கொள்வோம்.
Deditophobia என்பதைத் தோல்வி வெருளி(Deditophobia is a fear of failure) என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தோல்வி வெருளி எனத் தனியாக உள்ளது.
Dedito என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சரணடைவு எனப் பொருள்.
00