(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7 தொடர்ச்சி)


இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர்களுள் இராமராய நிம்கார், பார்த்தசாரதி இராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாசையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஅசுத்தி சமசுதானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய இராமராய நிம்கார் பானகல் இராச பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி இராய நிம்கார் தற்காலம் பானகல் இராசாவாகி சீவிய திசையில் இருக்கிறார்.

மற்றெருவர் வே. பா. இராமேசம். இவர் பிற்காலம் உயர்நீதிமன்ற நீதிபதியாகி சர் பட்டம் பெற்றார். இவர் 1958 ஆவது வருடம் மரணமடைந்தார். இவர் அபாரமான ஞாபக சத்தி உடையவர். நாங்கள் பரிட்சைக்குப் போனபோது இன்ன மதிப்பெண்கள் (marks) வாங்கினோம் என்று மறவாது சொல்வார்.

என் புதிய சிநேகிதர்களுள் மற்றெருவர் சிங்காரவேலு முதலியார். இவர் கணிதத்தில் மிகுந்த கெட்டிக்காரர். பிற் காலத்தில் சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் பிரதம உபாத்தியாயராக இருந்தார். இவர் நடுவயதிலேயே இறந்து போனார் என்று நான் சொல்ல வேண்டும்.

மற்ற சிநேகிதர்களுள் செகதீச ஐயர், மண்டயம் திரு நாராயணாச்சாரி, திரு. பிண்டோ முதலியவர்களை குறிக்க வேண்டும். இவர்களுள் கடைசியாகக் குறித்த பிண்டோ என்பவர் மாத்திரம் மங்களூரில் உயிர் வாழ்ந்து வருகிறார்.

மாநிலக்கல்லூரியில் நான் சேர்ந்ததினால் அடைத்த முக்கியமான இலாபம் என்னவென்றால் அதுவரையில் இல்லாதபடி புதிதாய் பல சாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்.
இங்கு சற்று நிதானித்து அக்காலத்து எப். ஏ. பரிட்சையில் நாங்கள் படிக்க வேண்டுய பாடங்களைப்பற்றி சற்று எழுத விரும்புகிறேன். முதலில் தற்காலத்து எசு. எசு. எல். சி. [S. S. L. C.) பரிட்சைதான் பழைய மெட்ரிகுலேசன் எனலாம். இரண்டாவது இடைநிலை(இண்டர் மீடியட்டு) பழைய எப். ஏ. பரிட்சையாகும். அக்காலத்தில் எப். ஏ. பரிட்சைக்கு போகும் ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயமாய்த் தேற வேண்டிய பிரிவுகள் ஆங்கிலம், தமிழ், தருக்கம், உடற்கூறு சாத்திரம், சரித்திரம், கணித சாத்திரம், இவை ஒவ்வொன்றிலும் பிரத்தியேகமாக வாங்க வேண்டிய மதிப்பெண்கள் வாங்காவிட்டால் தேற முடியாது. இந்த வகுப்பில் முக்கோணவியல்(trigonometry) என்னும் கணித நூல் வந்து சேர்ந்தது. வாசுத்தவமாய் இது என் மூளையில் ஏறவேயில்லை. இன்றைக்கும் சைன் தீடா, கோசைன் தீடா என்றால் என்ன என்று யாராவது என்னைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்படி இருக்கும்போது எப். ஏ. வகுப்பில் பள்ளிக் கூடத்து வருடாந்திர பரிட்சையில் நான் கணக்கில் கடைசி பிள்ளையாக நின்றது ஆச்சரியமில்லை. இந்தப் பரிட்சையில் கணக்கில் எங்கள் வகுப்புப் பிள்ளைகள் மதிப்பெண்களை யெல்லாம் சக்கரவர்த்தி ஐயங்கார் என்னும் கணிதப் பேராசிரியர், பேராசிரியராகிய பூண்டி இரங்க நாத முதலியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டார். அவர் தன் வகுப்பில் நாங்கள் எல்லாரும் சேர்ந்த பொழுது ஒரு தினம் பிள்ளைகளுடைய மதிப்பெண்களை யெல்லாம் படித்துக் கொண்டு வந்தார். நன்றாக மதிப்பெண் வாங்கின சகதீசன், திருநாராயணாச்சாரி, சிங்காரவேலு முதலிய பிள்ளைகளுடைய மதிப்பெண்களைப் படித்தபோது மிகவும் நல்லது (Very good) என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அப்போதே தெரியும் எனக்கு என்ன வரப்போகிறதென்று! அவர் படித்த பட்டியில் கடைசி பெயர் என்னுடையது. நூற்றிற்கு 23 மதிப்பெண்ணோ என்னவோ வாங்கினேன். (இதுவும் யூக் லிட் பேபர் போலும்), “சம்பந்தம் 23 மதிப்பெண்” என்று படித்து விட்டு “சம்பந்தம்! உன் சிறு வயதில் நன்றாய் படித்துக் கொண்டிருந்தாயே” என்று தான் சொன்னார். உடனே வகுப்பில் என்னையுமறியாதபடி கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.

அன்று சாயங்காலம் வீட்டிற்குப் போனவுடன் இது உதவாது இப்படியிருந்தால் நான் எப். எ. (F.A) பரிட்சையில் தேறவே முடியாது. இதற்கென்ன செய்வது என்று யோசித்த முக்கோணவியல் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த புக்வர்க் (Book work) என்னும் பாகத்தையெல்லாம் ‘ஈயடித்தான் ரைடர்’ மாதிரி காபி பண்ண ஆரம்பித்தேன் தினம் இப்படியே செய்து எனக்கு ஞாபகமிருக்கிறபடி வருடத்தின் பரிட்சைக்கு போகுமுன் பதினோறு முறை காபி செய்தேன்! இதன் பயனாக நான் எழுதி வந்ததொன்றுக்கும் அர்த்தம் தெரியாவிட்டாலும் அப்புத்தகத்தில் எந்த புக்வர்க் கேட்ட போதிலும் குருட்டுப் பாடமாக தப்பில்லாமல் ஒப்பித்து விடுவேன். ஆல்சீப்ராவிலும் புக்வர்க் எதையும் ஒப்பித்துவிடும் சக்தி பெற்றேன். திசம்பர் மாதம் சர்வகாலசாலை எப். ஏ. பரிட்சைக்கு நான் போன போது இப்பரிட்சையில் புக்வர்க் எல்லாம் எழுதிவிட்டு என் பதில் பேப்பரை சீக்கிரம் கொடுத்து விட்டு எழுந்திருந்து வந்து விட்டேன். தெய்வாதீனத்தால் பரிட்சைக்கு வேண்டிய மதிப்பெண் கிடைத்தது. பி. ஏ. வகுப்பிற்கு போனபிறகு தான் ஒவ்வொரு பிள்ளையும் தனக்கு விருப்பமான பாடம் (optional subject) எடுத்துக் கொள்ளலாம். இது அக்காலத்திலிருந்த பெருங்குறையாகும், வைத்தியனாகவோ வக்கீலாகவோ ஆகவேண்டுமென்று விரும்பும் ஒரு பிள்ளை எதற்காக எப். ஏ. வகுப்பில் சியாமெட்ரி, ஆல் சீப்ரா, டிக்னாமெட்ரி முதலிய கணித புத்தகங்களை படிக்க வேண்டும். நான் கல்லூரிக்கு வந்தவுடன் வழக்குரைஞர் பரிட்சைக்குப் போய் தேறி வழக்குரைஞராக வேண்டுமென்று ஏறக் குறைய தீர்மானித்தேன். அப்படியிருக்க மேற்கண்ட கணித புத்தகங்களை யெல்லாம் படித்ததின் பயன் எனக்கென்ன? என் மூளைக்குச் சிரமம் கொடுத்ததேயொழிய அவற்றால் ஒரு பயனுமடையவில்லை என்றே நான் கூறவேண்டும். தற்காலத்துப் பிள்ளைகள் எங்களைவிட மிகவும் பேறுபெற்றவர்கள் என்று சொல்லவேண்டும்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை