(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8 தொடர்ச்சி)

என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை

ஒரு சிறு வேடிக்கையான விசயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணிதப் புத்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி முத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் கல்லூரியில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, சகதீச ஐயர், வே. பா. இராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து பெயரும் முதல் வகுப்பில் தேறினோம்.


எப். ஏ. வகுப்பில் தேறினவுடன் என் தலைமீதிருந்த பெரும் பாரம் நீங்கினவனாய் பி. ஏ. பரிட்சைக்கு என்ன விருப்பப்பாடம் எடுத்துக்கொள்வது என்று ஆலோசிக்கலானேன். அச்சமயம் முனைவர் போரன் என்பவர் உயிரியல் (Biology) பேராசிரியராக இருந்தார். எங்கள் கல்லூரியில், அவர் என்னைச் சந்தித்தபோது நான் தனக்குப் பிரியமான உடற்கூறு சாத்திரத்தில் மாநிலக் கல்லூரியில் முதலாவதாக இருந்ததற்காக என்னைச் சிலாகித்து “நீ உயிரியல் எடுத்துக் கொண்டு என் வகுப்பில் வந்து சேர்” என்று கூறினார். நானும் இசைந்தேன். முதல் நாள் அவர் வகுப்பில் என்னைப் பக்கலில் உட்காரவைத்துக்கொண்டு ஒரு தவளையைக் கொன்று கூறுபோட்டுக் காண்பித்தார்; என் மனம் அதைக்கண்டு தாளவில்லை! உடனே நான் இந்த படிப்பிற்கும் நமக்கும் பொருத்தமில்லை என்று தீர்மானித்து என் தகப்பனாரிடமிருந்து உத்தரவு பெற்று கல்லூரி முதல்வராகிய திரு இசுடூவருடிடம் போய் என் பாடத்தை உயிரியலில் இருந்து சரித்திரத்திற்கு மாற்றிக்கொண்டு பிறகுதான் சரியாகத் தூங்கினேன். சரித்திரமானது நான் எப்பொழுதும் பிரியப்பட்ட நூல். சிறு வயது முதல் என் ஞாபகசக்தி கொஞ்சம் நன்றாய் இருந்தபடியால் சரித்திரத்தில் எந்த பரிட்சையிலும் முதலாவதாக வந்து நல்ல மதிப்பெண் வாங்கினேன்.

பரிட்சையில் தேறுவோமோ என்னவோ என்று பயமின்றி நான் படித்தது பி. ஏ. வகுப்பில்தான், பி. ஏ. வகுப்பில் அக்காலம் பரிட்சைக்குப் போகுமுன் மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கவேண்டியிருந்தது. முதல் வருசம் முடிந்தவுடன் நடக்கும் பரிட்சையில் ஆங்கிலத்தில் எந்தப் பிள்ளை முதலாவதாக தேறுகிறானோ அவனுக்கு ஒரு படிப்புதவித்தொகைஉண்டு. அதற்கு தாம்சன்சு படிப்புதவித்தொகை என்று பெயர். இது ஒரு வருடத்திற்கு மாதம் 10 உரூபாயாம். இதை எப்படியாவது பெறவேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகவே என் காலத்தையெல்லாம் ஆங்கிலத்தில் பாடப் புத்தகங்களைப் (Text) படிப்பதிலேயே செலவழித்தேன். 1889-ஆம் வருசம் அக்டோபர் மாதத்தில் பரிட்சை வந்தது. அதில் நான் நன்றாய் பதில் எழுதியபோதிலும் எனக்கு அந்த படிப்புதவித்தொகை பெறுவோமோ என்று சந்தேகமாயிருந்தது. நமக்கு மேல் கெட்டிக்காரர்களான பல பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே அது நமக்குக் கிடைப்பது அரிது என்று அந்த ஆசையை விட்டேன். 1890-ஆம் வருசம் எங்கள் வகுப்புப் பிள்ளைகளெல்லாம் நான்காவது வகுப்பாகிய முதுநிலை  பி. ஏ. வகுப்புக்கு மாற்றப்பட்டோம். ஒரு நாள். என்னுடைய சிநேகிதர்களாகிய சகதீச ஐயர், திருநாராயணாச்சாரி முதலியோருடன் சாயங்காலம் வகுப்புகளெல்லாம் விட்டபிறகு மட்டைப்பந்து (Cricket) ஆடும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம், தனக்கு தேக அசௌக்கியமாயிருந்தபடியால் ஆங்கிலப் பரிட்சைக்கு வராதிருந்த திருமலை ஐயங்கார் எனும் பிராம்மண பிள்ளை வந்து சேர்ந்தார். வந்தவுடன் சகதீச ஐயரைப் பார்த்து “சகதீசன் இவ்வருசத்து தாம்சன்சு படிப்புதவித்தொகை உனக்குத்தானே கிடைத்தது?” என்று கேட்க சகதீச ஐயர் “இல்லையடா” என்று வெறுப்புடன் பதில் உரைத்தார். உடனே திருமலை ஐயங்கார் “ஆனால் அது திருநாராணாச் சாரியாருக்குத்தான் கிடைத்திருக்கும்” என்று அவரைப் பார்த்துச் சொன்னார். உடனே சகதீசன் “அவனுக்கு கிடைத்தாலும் பரவாயில்லையே ‘திஸ் சாப் கெட்ஸ் இட்’ (This chap gets it) இந்த பையன் பெறுகிறான்” என்று என்னை நோக்கிக் கூறினார். அப்பாழுதுதான் எனக்குத் தெரிய வந்தது அதை நான் பெற்றதாக!

சகதீச ஐயர் என்னை விட ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றவர் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்களிருவரும் 1891-ஆவது வருசம் பி.ஏ. பரிட்சைக்குப் போனபோது முதல் வகுப்பில் நாங்கள் இருவர்தான் தேறினோம். அவர் முதலாவதாக இருந்தார். நான் இரண்டாவதாக இருந்தேன். ஆகவே அப்படி யிருக்கும்போது தனக்கு தாம்சன்சு படிப்புதவித்தொகை கிடைக்கவில்லை என்று வருந்தியது தவறே அல்ல. ஆயினும் தனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறது. மற்றொரு பிராம்மணப் பிள்ளையாகிய திரு நாராயணாச்சாரிக்காவது கிடைக்கலாகாதா, சம்பந்தத்திற்குக் கிடைத்ததே என்று கூறியது தவறென்று நினைக்கிறேன். மேற்கண்ட சம்பாசனை நடந்தவுடன் நான் கல்லூரி இயக்குநரிடம் போய் எனக்குத்தான் படிப்புதவித்தொகை கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அன்றிரவு இதை என் தகப்பனாருக்குத் தெரிவித்தேன். அவர் என் தாயாரிடம் தெரிவித்தார். எனக்கிருந்த சந்தோசத்தை விட அவர்களிருவரும் அதிக சந்தோசப்பட்டனர் என்று நான் கூறவேண்டியதில்லை. கொஞ்ச நாள் பொறுத்து. இந்தப் படிப்புதவித்தொகைப் பணத்திற்காக முதல் காசோலை பெற்றதை என் தாயாரிடம் கொடுத்த போது அவர்கள் சந்தோசப்பட்டதும் அவர்கள் அன்றிரவு இதைப்பற்றி என் தகப்பனாரிடம் கூறிய வார்த்தைகள் இன்னும் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றன. என் பெற்றோர்களுக்கு இந்த சிறு சந்தோசத்தையாவது கொடுத்தோமே. ஈசன் கருணையினால் என்று இதைப்பற்றி எழுதும் போதும் சந்தோசப்படுகிறேன்.


1931-ஆம் வருசம் என் ஆயுளில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒன்று மிகவும் துக்ககரமானது. மற்றொன்று மிகவும் சந்தோசமானது. சகதீசன் சீவராசிகளுக்கு துக்கத்தையும் சுகத்தையும் ஏன் இவ்வாறு கலந்து கலந்து அனுப்புகிறார். இதற்கு விடையளிக்க என்னால் முடியாது; அதற்கு விடை. அவருக்குத்தான் தெரியும் போலும்;

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை