(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 6

மருத நிலம்‌ தொடர்ச்சி

பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும்.
அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்
தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60

     ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ் நாட்டில் ஆற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் பல உண்டு. சேலம் நாட்டில் ஆற்றூர் என்பது ஒரு பகுதியின் பெயராக வழங்குகின்றது. ஆற்றங்கரையென்பது இராமநாதபுரத்திலுள்ள ஓர் ஊரின் பெயர். தஞ்சை நாட்டில் ஆற்றுப் பாக்கமும், திருச்சி நாட்டில் ஆற்றுக் குறிச்சியும், வட ஆர்க்காட்டில் ஆற்றுக் குப்பமும் உள்ளன.


துறை

     ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடங்கள் துறை
எனப்படும்.61 தமிழ் நாட்டில் ஆற்றை அடுத்துள்ள சில ஊர்கள் துறை
என்னும் பெயரைத் தாங்கி நிற்கக் காணலாம். சில துறைகளின் இயற்கையழகு அவற்றின் பெயரால் விளங்குகின்றது. காவிரியாற்றின் இரு மருங்கும் அமைந்த செழுஞ் சோலைகளில் மயில்கள் தோகை விரித்தாடும்; மந்திகள் கொஞ்சிக் குலாவிக் கூத்தாடும். இங்ஙனம் மயில்கள் ஆடும் துறை மயிலாடு துறை என்றும், குரங்குகள் ஆடும் துறை குரங்காடு துறை என்றும் பெயர் பெற்றன. மயிலாடுதுறை இப்போது மாயவரமாக மாறியிருக்கிறது. காவிரியின் வடகரையில் ஒரு குரங்காடுதுறையும் தென்
கரையில் மற்றொரு குரங்காடு துறையும் உண்டு. இக் காலத்தில் தென் குரங்காடு துறை ஆடுதுறை என்றே வழங்குகின்றது.62  இன்னும், காவிரியாற்றில் கடம்பந்துறை, மாந்துறை முதலிய பல துறைகள் பாடல் பெற்ற பதிகளாக விளங்குகின்றன.63 நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநையாற்றில் பூந்துறை, குறுக்குத்துறை முதலிய துறைகள் உள்ளன.

அரங்கம், துருத்தி
 

   ஆற்றின் நடுவே அமைந்த இடைக்குறை வட மொழியில் ரங்கம் என்றும், தமிழ் மொழியில் துருத்தியென்றும் குறிக்கப்பெறும். காவிரி யாற்றில் திருச்சிராப்பள்ளிக்கு அருகே சிறந்த ரங்கம் ஒன்று உள்ளது. அங்கே கோவில் கொண்டருளும் பெருமாளை ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ளார்கள். அவர்கள் அருளிய திருப்பாசுரங்களில் அவ்வூர் திருவரங்கம் என்று போற்றப்பட்டுள்ளது. தஞ்சை நாட்டிலுள்ள குற்றாலத்தின்
பழம்பெயர் திருத்துருத்தி என்பதாகும். காவிரியாற்றின் நடுவே அமைந்த திருத்துருத்தியின் சிறப்பினைத் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

 “பொன்னியின் நடுவு தன்னுள்
         பூம்புனல் பொலிந்து தோன்றும்
   துன்னிய துருத்தி யானைத்
             தொண்டனேன் கண்ட வாறே”

என்பது அவர் திருவாக்கு. சாசனங்களில் அவ்வூர் “வீங்கு நீர்த் துருத்தி” என்று குறிக்கப்படுகின்றது.64 தமிழ் நாட்டிலுள்ள மற்றொரு துருத்தி திருப்பூந் துருத்தியாகும்.

கூடல்

     ஆறுகள் கூடுந் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப்
பண்டைத் தமிழர் கொண்டாடினார்கள்; அவற்றைக் கூடல் என்று
அழைத்தார்கள்.65 தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர் திருமுக்கூடல் என்று பெயர் பெற்றது. நெல்லை நாட்டில் தாமிரவருணியும், சித்திரா நதியும், கோதண்டராம நதி என்னும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என முற்காலத்தில் சிறந்திருக்கிறது. முக்கூடற் பள்ளு என்னும் சிறந்த நாடகம் அவ்வூரைப்பற்றி எழுந்ததே யாகும்.66  சோழநாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற இடத்திற்கு அருகேயமைந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது.67 தென்னார்க்காட்டில் வெள்ளாறும், முத்தாறும் கூடுகின்ற இடத்தில்

கூடலையாற்றூர் என்ற ஊர் அமைந்திருக்கின்றது. அது தேவாரப் பாடல் பெற்றது.


அணை

     முற்காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆற்று நீரை அணைக் கட்டுகளால் தடுத்துக் கால்வாய்களின் வழியாக ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பினார்கள். இவ் விதம் பாசனத்திற்குப் பயன்பட்ட அணைகளின் அருகே சில ஊர்கள் அணைகளின் அருகே சில ஊர்கள் எழுந்தன. தென்னார்க்காட்டில கரடியணை  என்பது ஓர் ஊரின் பெயர். கண்ணணை இராமநாதபுரத்திலும், வெள்ளியணை திருச்சிராப் பள்ளியிலும் காணப்படுகின்றன.

கால்

     அணைகளைப் போலவே கால்வாய்களின் அருகே எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் வெள்ளக் கால், பள்ளக்கால் முதலிய ஊர்கள் உள்ளன. தலைக்கால் என்னும் ஊர் இராமநாதபுரத்தில் காணப்படுகின்றது. இன்னும், மணற்கால்  திருச்சிராப்பள்ளியிலும், குவளைக்கால் தஞ்சை நாட்டிலும், மாங்கால் வட ஆர்க்காட்டிலும் விளங்குகின்றன. கால்வாய் என்னும் சொல்லே நெல்லை நாட்டின் ஓர் ஊரின் பேராக வழங்குகின்றது.

அடிக்குறிப்பு:

60. இப்போது கயத்தார்‌ என வழங்கும்‌ கயத்தாறு, கல்வெட்டில்‌, கசத்த லாறு என்று குறிக்கப்படுகின்றது – 19/1912. கசத்தினின்று எழுந்த ஆறென்பது அப்‌ பெயராலும்‌ அறியப்படும்‌. கசத்தி லாறு என்பது கசத்த லாறு என மருவியது போலும்‌.

61. ஆற்றில்‌ எளிதாக இறங்கி ஏறுவதற்குப்‌ படிக்கட்டு அமைந்துள்ள இடம்‌ இன்றும்‌ படித்துறை என மருவியது வழங்கும்‌.

62. 357/1907. 

63. பாடல்‌ பெற்ற துறைகளைத்‌ “துறையும்‌ நெறியும்‌” என்ற தலைப்பின்‌ கீழ்க்‌ காண்க.

64. 468 /1907.

65. இரு நதிகள்‌ சேரும்‌ இடம்‌ கூடல்‌ என்றும்‌, மூன்று நதிகள்‌ சேரும்‌ இடம்‌ முக்கூடல்‌ என்றும்‌ வழங்கும்‌. காவேரியும்‌ பவானியும்‌ கூடும்‌ இடம்‌ பவானி கூடல்‌ என்று இக்

காலத்தில்‌ வழங்கும்‌. துங்கையும்‌ பத்திரையும்‌ சேர்ந்து துங்கபத்திரையென்று பெயர்‌ பெறும்‌ இடத்தில்‌ அமைந்த ஊருக்குக்‌ கூடலி என்று பெயர்‌. மைசூர்,தொகு.2 பக். 459.

66. இக்‌ காலத்தில்‌ சீவலப்பேரி யென்பது அதன்‌ பெயர்‌. முன்னாளில்‌ இராமேச்சுரத்திற்குத்‌ தீர்த்த யாத்திரை செய்வோர்‌ சீவலப்பேரி யென்னும்‌ முக்‌ கூடலில்‌ நீராடுவர்‌. அவர்களுக்கு நாள்தோறும்‌ உணவளித்தற்‌ பொருட்டுத்‌ தளவாய்‌ முதலியாரால்‌ ஏற்படுத்தப்பட்ட தர்மசாலை (சத்திரம்‌) இன்றும்‌ அவ்வூரில்‌ உள்ளது. டி.சி.பக்.485.

67. கடலருகே யமைந்த காரணத்தால்‌ கடலூர்‌ எனப்பட்டது என்று கொள்வர்‌ சிலர்‌. கூடலூர்‌ என்னும்‌ பெயரே கடலூர்‌ என மருவி வழங்குவதால்‌ அக்‌ கொள்கை பொருத்தமுடையதன்று. தென் ஆற்காட்டுப்பதிவிதழ்,296.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்