(குறிஞ்சி மலர் 69 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 25
தொடர்ச்சி

“ஒரு நாள் ஓரூரில் சாயங்காலச் சந்தையொன்று கூடியது. சில செம்படவப் பெண்கள் தாம் கொண்டு வந்த மீனை அங்கு விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தனர். முன்னிருட்டு வந்துவிட்டது. மழையோ பாட்டம் பாட்டமாகப் பெய்யத் தொடங்கியது. பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்? பக்கத்தில் ஒரு பூக்கடைக்காரனுடைய குடிசை இருப்பதைப் பார்த்து அங்கு ஓடினர். அந்தப் பூக்கடைக்காரன் மிகவும் நல்லவன்.

“அவன் அங்கு வந்த அப்பெண்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு தனது குடிசையின் ஒரு பகுதியை அவர்கள் தங்குவதற்காக ஒழித்துக் கொடுத்தான். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவன் தங்களுக்காக ஒழித்துக் கொடுத்த அறைக்குள் சென்றனர். அந்த அறை ‘கமகம’வென்று நறுமணம் வீசியதைக் கண்டு நாலுபக்கமும் பார்த்தார்கள். ஒரு மூலையில் சில பூக்கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை வாடிக்கையாகக் கொடுக்கும் சிலருக்கு மறுநாள் காலையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டவை. ஆனால் மீன் வாசனையோடு பழகியவர்களுக்கு நறுமணம் வீசும் வாசனை எப்படிப் பிடிக்கும்? அந்த வாசனை பிடிக்காததனால் அவர்களால் அதைப் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. வாசனைகளிலும் பரிமள சுகந்தங்களிலுமே பழகியவர்களுக்கு, நாற்றத்தின் நடுவே எவ்வாறு தூக்கம் வராதோ, அவ்வாறே, நாற்றத்திலேயே பழகிவிட்ட அவர்களுக்கு வாசனையின் நடுவே தூக்கம் வரவில்லை. அவர்களில் ஒரு புத்திசாலிப் பெண் மற்றவர்களைப் பார்த்து ஒரு உத்தி சொன்னாள்.

“நமக்குத் தூக்கமோ வருவதாக இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்தில் வைக்கவும் முடியாது. நம்மிடத்திலுள்ள மீன்கூடைகளைக் கொஞ்சம் நனைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டால் இந்தப் பூவாசனையும் மீறிக் கொண்டு நமக்குப் பழக்கமான நாற்றம் உண்டாகும். உடனே சுகமாய்த் தூங்கிவிடலாம்” என்றாள். யாவரும் அவளுடைய யோசனையை ஏற்று அப்படியே செய்து தமக்குப் பழக்கமான நாற்றத்தை உண்டாக்கிக் கொண்டு தூங்கினார்களாம். ‘பழக்கமான வாசனை’ என்று சொல்லுகிறோமே, அது இத்தகையதுதான் அரவிந்தன்! “உங்களைத் துன்புறுத்த நினைத்த பருமாக்காரரையும் புதுமண்டபத்து மனிதரையும் இந்த உபகதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.”

‘எத்தனை அற்புதமான கருத்துகளை மனத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் கூடுகிறாற்போல் இவள் சொற்பொழிவுகளுக்குக் கூட்டம் கூடுவதின் இரகசியம் இந்தக் கருத்தழகு மிக்க பேச்சுத்தானே’ என்று உள்ளத்துக்குள் வியந்து கொண்டான் அரவிந்தன்.

“அரவிந்தன்! நானாகவே என்னைப் பற்றி உங்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்கிறேனே என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி ஒரு கம்பீரமான கனவுத் தோற்றம் உண்டாகும். பசியும், நோய்களும், வறுமையும், வாட்டமும் கொண்டு தவிக்கும் இலட்சக்கணக்கான ஆண், பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே நான் கையில் ஒரு தீபத்தை ஏந்திக் கொண்டு செல்கிறேன். என் கைத் தீபத்தின் ஒளி பரவி, பசியும் நோயும் அழிகின்றன. வறுமையும், வாட்டமும் தொலைகின்றன. இலட்சக்கணக்கான முகங்களில் என்னையும் என் தீபத்தையும் கண்டவுடன் மலர்ச்சி பொங்குகிறது. நான் மேலே மேலே முடிவற்று நிலையற்று அந்த ஒளி விளக்கோடு நடந்து கொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க அந்த விளக்கின் சுடர் பெரிதாகிறது. சுடர் பெரிதாகப் பெரிதாகச் சுற்றிலும் பரந்து தென்படும் மக்கள் வெள்ளம் என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்களுக்கு அனுதாபப்படவும், இரக்கம் கொண்டு உழைக்கவுமே நான் பிறந்திருப்பதாக என்னுள் மிக ஆழத்திலிருந்து ஒரு புனிதக் குரல் ஒலிக்கிறது. ஃபிளாரன்சு நைட்டிங்கேலைப் போல நினைவு மலராப் பருவத்திலேயே இரக்கத்துக்குரிய ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்வதற்கென்று நான் பிறந்திருக்கிறேன் என்று ஒரு தன் விழிப்பு அடிக்கடி என்னுள் உண்டாகிறது. இதயத்தின் அந்தரங்கமான பகுதியிலிருந்து ஏதோ ஒரு பேருணர்வு கண் திறந்து பார்த்துத் திடீர் திடீர் என்று என்னைப் பரீட்சை செய்கிறது. அப்படி அந்தப் பேருணர்வு என்னைப் பரீட்சை செய்யும்போது தற்சமயம் நான் செய்து கொண்டிருப்பனவெல்லாம் மிகச் சிறிய காரியங்கள் போலவும், பெரிய காரியங்களை இனிமேல் தான் செய்ய வேண்டும் போலவும் ஒரு துடிப்பை உணர்கிறேன். அதை உணரும் போது எனக்கு அழுகை வருகிறது.”

பூரணி ஆவேசமாக இதைச் சொல்லிக் கொண்டு வரும்போது அவள் முகத்தில் தெய்வீகமானதொரு பேரொளி பூத்துப் பரவுவதையும் கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் உருள்வதையும் அரவிந்தன் கண்டான். அப்போது அவளையும் அவள் முகத்தையும் பார்த்தால் இனம்புரியாப் பரவசம் உண்டாவது போலிருந்தது அவனுக்கு. ‘இத்தகைய விநோத உணர்வுதான் ‘கௌதம புத்தர்’ என்ற ஞானியை உண்டாக்கிற்று. இந்தத் தன்விழிப்புப் பரிட்சையில்தான் புத்தர் பிறந்தார். இந்த மாதிரிக் கண்ணீரோடு தான் அரண்மனையின் சுகபோகங்களிலிருந்து கீழ் இறங்கி நடந்தார்’ என்றெண்ணியபடி பயபக்தியோடு அவள் முகத்தைப் பார்த்தான் அரவிந்தன். அப்போதே தன்னைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக அழியா அழகு ஒன்று அவள் உள்ளத்தில் வளர்ந்து கொண்டிருப்பது அரவிந்தனுக்கு புரிந்தது. ‘பக்கத்தில் அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசுகிறபோது அவளுடைய புற அழகும் சாதாரணமான பெண்தன்மையும் தான் தோன்றின. ஆனால் அந்த மனத்தின் அழகைக் காண நேர்கிற போதெல்லாம், தான் வெகு தொலைவுக்கு விலகித் தாழ்ந்து இறங்கிப் போய்விட்டது போல் தோன்றுகிறது. ஒரே காலத்தில் இரண்டுவிதமான பூரணிகளோடு பழகுகிறோமோ?’ என்று அரவிந்தன் மருண்டான்.

‘உணர்ச்சிகளும், ஆசைகளும், அன்பும், பெண்மையும் நிறைந்த பூரணி என்னும் அழகு மங்கை வேறு, கையில் தீபத்தை ஏந்திக் கொண்டு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே பாதை வகுத்துக் கொண்டு நடந்து செல்வதாகக் கனவு காணும் பூரணி வேறு. இதில் எந்தப் பூரணி அவனைக் காதலிக்கிறாள்? எந்தப் பூரணியை அவன் காதலிக்கிறான்? இந்த இரண்டு பூரணிகளில் அவனுடைய மானிடக் கைகளினால் எட்டிப் பறிக்க முடிந்த சாமானிய உயரத்தில் பூத்திருக்கும் பூரணி யார்? அல்லது பிஞ்சு அரும்புகிற காலத்தில் பூவிதழ்கள் கழன்று கீழே விழுந்து விடுவதைப் போல் இந்த இரண்டு பேரில் முடிவாகக் கனிகின்ற பூரணி ஒருத்தியாகத்தான் இருக்க முடியுமா?’ நீண்ட நேர மௌனத்துக்குப் பின் அரவிந்தன் அவளிடம் மெல்லக் கேட்டான். “அரசியலில் பங்கு கொள்ள நேரிடுவதால் உன்னுடைய இந்த இலட்சியக் கனவு கலைந்து பாழாகிவிடும் என்று நீ பயப்படுகிறாய்?”

“பயப்படவில்லை! ஆனால் தயங்குகிறேன். நீங்களும் அவரும் சேர்ந்து வற்புறுத்தினால் அந்தத் தயக்கத்தைக் கூட நான் உதறிவிடும்படி நேரலாம்.”

“நீ அப்படித்தான் செய்ய நேரிடும் போலிருக்கிறது பூரணி!”

“பார்க்கலாம்!”

இதன்பின் அவர்கள் வேறு செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். முருகானந்தம்-வசந்தா காதலைப் பற்றிக் குறிப்பாகச் சொன்னாள் பூரணி.

“உனக்கு முன்னாலேயே அந்த இரகசியம் எனக்குத் தெரியும் பூரணி. நண்பனின் காதல் வெற்றி பெறுவதற்கான சம்மதத்தையும் ஒருவாறு அந்த அம்மாளிடமிருந்து பெற்றுவிட்டேன்” என்று தொடங்கி முதல்நாள் மதுரையில் மங்களேசுவரி அம்மாளுக்கும் தனக்கும் நடந்த பேச்சுக்களைச் சொன்னான்.

“அந்த அம்மாளின் முற்போக்கு மனப்பான்மையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஏற்றத்தாழ்வை எண்ணித்தான் நானும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். அது இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். முடிந்தால் இன்றைக்கு இரவே அந்த அம்மாளிடம் பேசி முடிவு செய்து விடலாம். நாம் இருவரும் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்” என்றாள் பூரணி.

“முடிவெல்லாம் ஏற்கெனவே செய்த மாதிரிதான். ‘மாப்பிள்ளை முருகானந்தம்தான்’ என்கிற ஒரு இரகசியத்தை மட்டும் இன்னும் நான் வெளியிடவில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அரவிந்தன். மாலையில் மெல்ல இருள் சூழ்ந்து சிலேட்டுப் பலகை நிறத்துக்கு மங்கத் தொடங்கியது. வெண்மை நுரைத்துப் பொங்கினாற் போல் மஞ்சு சூழ்ந்தது. அரவிந்தனும், பூரணியும் குறிஞ்சியாண்டவர் மலைப்பகுதியிலிருந்து எழுந்து நடக்கலாயினர். மலைப் பகுதிகளில் எல்லாப் பசுமையும் கலந்து மணக்கும் ஒருவித மணமும் குளிரும் கலந்த அந்தச் சூழ்நிலையில் அவர்கள் இரண்டுபேரும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். அரவிந்தனோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து கொண்டிருந்தபோது பூரணி தன் உள்ளத்தில் சில ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருந்தாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்