(தமிழ்ச்சொல்லாக்கம்: 408-410 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

411. கீர்த்தனை – பாட்டு

கீர்த்தனை என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் பாட்டென்னுஞ் சொல்லோடு வேற்றுமையின்றிப் பயின்று தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. பாட்டென்னுஞ் தமிழ்ச் சொல்லோ இசைத் தமிழின் பாகுபாட்டையுணர்த்தும் தேவபாணி என்பது முன்னோர் ஆட்சி.

நூல்   :           பரமானந்தப் பக்திரசக் கீர்த்தனை (1920) முகவுரை – பக்கம் – 5

நூலாசிரியர்   :  தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (தமிழ்நாடகத் தலைமை நாடகாசிரியர்)

412. பாலசுந்தரம் – இளவழகனார் (1920)

குருகுலம் அழகரடிகளார்

வாழ்க்கைக் குறிப்புக்கள்

பிறந்த ஊர்      :   மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம்

ஆண்டு        :    1904 ஏப்பிரல்

பெற்றோர்  :    சுப்பராய பிள்ளை திரு. மாணிக்கம்மாள்

மரபு  :      வள்ளலாரைத் தோற்றுவித்த ‘சீர் சுருணிகர்’

பெயர்    :  பெற்றோரால் அமைந்த பெயர் பாலசுந்தரம்; ஆசிரியரால் அமைந்த பெயர் இளவழகனார்; தீக்கையால் அமைந்த பெயர் அழகரடிகள்.

1920.16 ஆம் வயதில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார்க்கு மாணவர்

நூல்   :   குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு

நூலாசிரியர்    :   த.ஆறுமுகம் பக்.53, 54.

413. ஞானவாசகம் – அருட்பா

414. சித்தவிருத்தி – நெஞ்சிற் பரப்பு

நூல்   :   திருவாதவூரடிகள் புராணம் (1923) (கடவுள்மாமுனிவர்)

குறிப்புரை :   பிரசங்க பாநு கா. இராசாராம் பிள்ளை

415. ஞான சாகரம் – அறிவுக் கடல் (1923)

416. பதுமம் – திருமலர்

“ஞான சாகரம்” (1902) இதுவே பின்னர் அறிவுக் கடல் எனத் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது! ஆசிரியர் நாகை வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகளாவர். ஞான சாகரம் முதலிய தனது பெயருக்குத் தகுந்தாற் போல் பதுமம் – 1, இதழ் – 1 என்று வெளிவந்தது. பின்னர் 1923 இல் அறிவுக் கடலாகப் பெயர் மாற்றப்பட்ட பின்பு திருமலர், இதழ் என்று வெளிவரலாயிற்று.

நூல்   :     தமிழ் இதழியல் வரலாறு (1977) பக்கங்கள் 50, 61

ஆசிரியர்    :    மா. சு. சம்பந்தன்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்