(வெருளி நோய்கள் 1296 -1300 : தொடர்ச்சி)

கெட்ட மூச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயமூச்சு வெருளி.
வாய்த்தூய்மையின்மை, பற்கள் சிதைவு, ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற காரணங்களால் வாயில் தீய நாற்றம் வருகிறது. வாயைத் தூய்மையாக வைத்துக்கொண்டு இதைத் தடுக்க வேண்டும். மாறாகத் தவறான எண்ணங்கள் கொண்டு தீய கற்பனைகளை வளர்ப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு நல்கும்.
halitosis என்றால் கெட்ட மூச்சு.
00

தீயன பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயன வெருளி.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
(குறள் 202)
என்கிறார் திருவள்ளுவர். எனவே, தீயவை பற்றி அஞ்சத்தான் வேண்டும். ஆனால், தொடர்பில்லாத தீமைகளைப் பற்றித் தேவையின்றிப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
.00

கயவர்கள். குற்றம் புரிவோர் பற்றிய காரணமில்லாத பேரச்சம் தீயோர் வெருளி.
திருடர்கள், கொலைகாரர்கள், கற்பழிப்போர் முதலான கயவர்கள் மீது அச்சமும் விழிப்புணர்வும் தேவைதான். ஆனால், ஒருவரைப்பற்றி மிகையாகத் தவறாகக் கருதி அஞ்சுவதும் பார்க்கின்றவர்களை யெல்லாம் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் தேவையில்லாதது.
கொள்ளையர் தொடர்பான பேரச்சத்தையும் இப்பிரிவில் சேர்க்கின்றனர். (அதனடிப்படையில் நானும் குறித்துள்ளேன்.) ஆனால், கொள்ளையர் வெருளி(Harpaxophobia) எனத் தனியாக வரையறுப்பதால், இவ்வரையறையில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை.
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ
(இராமாயணம்,யுத்2:16 137/1)
எனக் கம்பர் தீயன செய்வோர் சிறந்தவர், உற்றார் என்ற வேறுபாடின்றித் தீமை செய்வதைக் குறிக்கிறார். எனவேதான் தீயோர் கண்டு அஞ்ச வேண்டி உள்ளது. எனினும் இவ்வச்சம் காரணமின்றியும் அளவுகடந்தும் வரும் பொழுது தீயோர் வெருளி ஆகிறது.
scelero என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கயமை அல்லது குற்றம்.
00

தீர்க்கப்படாத புதிர்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீர்விலி வெருளி.
Paradox என்றால் முரண் என்றுதான் பொருள். வழக்கு மீறியதை அல்லது இயல்நிலை கடந்ததையும் குறிக்கும். Paradoxophobia என்றால் முரண்நிலை வெருளி என்று பொருளாகிறது. எனினும் முரண்நிலையால் தீர்வு ஏற்படாமை குறித்து ஏற்படும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சத்தைக் குறிக்கிறது.

++

முடிவெடுப்பது குறித்த தேவையற்ற அச்சம் தீர்வு வெருளி அல்லது முடிவெடு வெருளி.
தீர்வை வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன். தீர்வை என்பதும் ஏற்ற சொல்தான். எனினும் தீர்வை என்பது வரி தொடர்பான பொருளில் கருதப்படலாம் என்பதால் இப்பொழுது தீர்வு வெருளி எனக் குறித்துள்ளேன்.
தீர்வு வெருளி, முடிவெடு வெருளி என உடன்பாட்டு முறையில் தோன்றினாலும் இவை தொடர்பான வெருளி எனப்பொருள் கொள்ள வேண்டும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
. (திருக்குறள் 671)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறவுரைக்கிணங்க நாம் காலத்தாழ்ச்சியின்றி முடிவெடுக்க வேண்டும்.
சிலர் தவறான முடிவு எடுத்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே முடிவு எடுக்காமல் காலந்தாழ்த்துவர். எந்த உடையை உடுத்தலாம், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்லலாமா? வேண்டாவா? நடபை அல்லது காதலை ஏற்கலாமா? மறுக்கலாமா? எந்த உணவை உட்கொள்ளுவது? எந்த மருத்துவரிடம் செல்வது? எந்த மருத்துவமுறையைப் பின்பற்றுவது? குறிப்பிட்ட செயலைச் செய்யலாமா? தவிர்க்கலாமா? என்னபடிக்கலாம்? எந்தப் பணியில் சேரலாம்? எந்தத் தொழிலில் இறங்கலாம்? என எதற்கெடுத்தாலும் முடிவு எடுப்பதில் தயங்கிக் காலங்கடந்து போவதால் உரிய வாய்ப்பை இழப்பதும் உண்டு. சிறு அகவையில் அல்லது இதற்கு முன்னர் எடுத்த தவறான முடிவால் தவறுகள் அல்லது தீங்குகள் நேர்ந்ததால் ஏற்படும் அச்சமே பலருக்குப் பேரச்சமாகிறது. நன்மை ஒரு பக்கமும் தீமை மறுபக்கம் மிகுதியாகவும் இருப்பதாகச் சிந்தித்துச் சிந்தித்து தீர்வு வெருளிக்கு ஆளாகின்றனர். தெளிவான சிந்தனையும் குறித்த காலச் செயல்பாடும் தேவையான நேரங்களில் பிறர் அறிவுரை பெறலுமே இதிலிருந்து விடுபடச் செய்யும்.
de-cido என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முடிவுகட்டு/முடிவெடு.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5