(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – தொடர்ச்சி)

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

[அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த

நல் சார்வு சாரக் கெடுமே

புல் பனி பற்று விட்டு ஆங்கு.]

⁠ அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து நெறியற்றவற்றைச்  செய்தலால் வரும் பாவங்களும், நல்லவர்களைச் சார்ந்து ஒழுகலால், புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலினால் அதனை விட்டு நீங்குதல் போல மறையும்.

அறியா=அறியாத; பருவத்து=பருவத்தில்; அடங்காரோடு= அடங்காத வர்களோடு; ஒன்றி=சேர்ந்து; நெறி அல்ல= நெறியல்லாதவற்றை; செய்து=செய்வதால் வரும்;ஒழுகியவ்வும்=ஒழுகியனவும்> ஒழுகுவதால் வரும் தீவினைப் பயன்களும்; நெறி அறிந்த= நன்னெறி அறிந்த; நல் சார்வு=நல்லோர் சார்பை; சாரக் கெடுமே=சார்ந்து இருத்தலால் மறையும்; புல்=புல்லின் மேலுள்ள; பனி=பனித்துளி; பற்று= புல்மேல் தங்கியிருத்தலில் இருந்து; விட்டு ஆங்கு=நீங்கி விடுதல் போன்று.

நல்லன, தீயன யாவை என அறியாப் பருவத்தில், பெரியோர்க்கு அடங்காதவர்களுடன் சேர்ந்து நன்னெறியற்றவற்றைச் செய்வதால் தீய பயன்கள் ஏற்படும். எனவே, தீயோருடன் சேர்ந்து தீயன புரிதல் கூடாது. 

அறியாப் பருவத்தில் கூடா நட்பை மேற்கொண்டாலும் விவரம் அறிந்ததும் நன்னெறி ஒழுகும் சான்றோருடன் பழகி அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்.

தீயவர் என்றறிந்தே ஒருவருடன் நட்பு கொள்ளக்கூடாது. ஆனால், நல்லவர் என எண்ணி ஒருவருடன் பழகத் தொடங்கியதும் அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுநராக இருக்கிறார் என அறிய வந்தால், அவர் இரண்டகம் செய்பவராக அறிய வந்தால், அவர் தன்னை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என அறிய வந்தால், அவர் தன்னை ஏமாற்றப் போகிறார் எனத் தெரிய வந்தால், அவரின் உண்மை முகம் தெரிய வந்தால், உடன் அவரை விட்டுவிலக வேண்டும். அப்பொழுது ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல்லே ஊன்று கோலாகும் என்பதை உணர வேண்டும். அத்தகைய ஒழுக்கமான நல்லோர் நட்பை நாட வேண்டும். நல்லோரிடம் நட்பு பாராட்டினால், புல்மேல் உள்ள பனித்துளி கதிரவன் ஒளியால், நீங்கி மறைவதுபோல் செய்த தீவினைகளின் தீய பயன்களும் அகலும்.

தீயவர் சேர்க்கையால் தீயனவே விளையும். அவ்வாறு அறிந்தும் அறியாமலும் தீயவர்களுடன் சேர்ந்தாலும் உண்மையை உணர்ந்தபின்னர், நல்லோரிடம் சேர வேண்டும். அச்சேர்க்கையால் தீயன அழிந்து நல்லனவே விளையும் என்பதையே புலவர் கூறியுள்ளார்.

எனவே, தீயவர்களுடன் சேர்ந்து தீயவற்றைச் செய்தவர்கள் திருந்தி வாழப் புலவர் வழிவகை கூறுகிறார்.

“புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை” என நாலடியார் 29 ஆவது பாடலிலும் புல்மேல் பனித்துளி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.   (திருக்குறள், ௭௱௮௰௭ – 787)

என்கிறார் திருவள்ளுவர்.

அழிவு வரும்பொழுது, அழிவினால் வந்த தீமைகளிலிருந்து நீக்கி, நல் வழியில் நடக்கச் செய்து, உடனிருப்பதுதான் நட்பாகும் என்கிறார் அவர். நட்பைக் குறிப்பிடும் இக்குறள் நல்லோர் இயல்பையும் எடுத்துரைக்கிறது. நாலடியார், இவ்வாறு தீமைகளிலிருந்து விலக்கி நல்வழியில் நடக்கச் செய்வோரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீயோருடன் சேரற்க! சேர்ந்தபின் அதன் தீமையைப் புரிந்து கொண்டால் தீய விளைவுகளிலிருந்து விலக நல்லோருடன் சேர்க!