வெருளி நோய்கள் 1571-1575 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1565-1570 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1571-1575
- படுக்கை யறை வெருளி – Ypnodomatiophobia
படுக்கை யறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படுக்கை யறை வெருளி.
படுக்கை அறை தூய்மையாக இல்லை, படுக்கை அறை சரியாக இல்லாததால் கெட்ட கனவுகள் வருகின்றன, யாரோ படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வகையில் அறை உள்ளது என்றெல்லாம் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
Ypnodomatiophobia என்றால் கிரேக்கத்தில் தூங்கும் அறை எனப் பொருள்.
காண்க: படுக்கை வெருளி(Clinophobia)
00
- படுக்கை வெருளி-Clinophobia
படுக்கச் செல்வது குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் படுக்கை வெருளி.
இரவில் மோகினிப்பிசாசு மார்பில் ஏறி அமர்ந்து அழுத்தும் என்ற அச்சம் சிலருக்கு வரும்.
படுக்கையில் சிறுநீர் கழித்து விடும் அச்சம் சிலருக்கு வரும். விந்து கசியும் என்ற அச்சம் சிலருக்கு வரும். கட்டிலில் அல்லது விசிப்பலகையில் படுத்தால் புரண்டு கீழேவிழுந்து அடிபட நேரிடும் என்ற அச்சம் சிலருக்கு இருக்கும். தூக்கமின்மையால் துன்புற நேரிடும்; தூக்கத்தில் எங்கும் நடந்து சென்று இடர்ப்பாட்டில் சிக்க நேரும் என்றும் சிலர் அஞ்சுவர். இவற்றால் தீய கற்பனைகைள வளர்த்துக் கொண்டு படுப்பதற்கு அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
Clino என்னும் சொல் “klinein” என்னும் கிரேக்கச்சொல்லின் இருந்து வந்தது. இதன் பொருள் உறக்கநேரச் செய்கைகளான வளைதல், குனிதல், சாய்தல் முதலியன.
காண்க: படுக்கை நனைப்பு வெருளி(Nyctourinariphobia); ஈரக்கனவு வெருளி(Oneirogmophobia)
00
- பட்டியல் வெருளி – Albumistaphobia
எது குறித்த பட்டியலாயினும் அளவுகடந்த பேரச்சம் கொள்வது பட்டியல் வெருளி.
பெயர்ப்பட்டியல், விலைப்பட்டியல், உணவுப் பட்டியல், நோய்ப் பட்டியல், மருந்துப் பட்டியல், விலைகள் பட்டியல் என எவ்வகைப் பட்டியலாயினும் அதுகுறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். சான்றாகத் தங்கம் விலை குறித்துப் பட்டியல் வெளியானால், தங்கம் வாங்க் கூடிய நேர்வு இல்லாத போயினும் தங்கம் இந்த விலை விற்கிறதே எப்படி வாங்க முடியும் எனக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வர்.
00
- பட்டிவெருளி-Versurphobia
விலைப்பட்டிகள் குறித்த பேரச்சம் பட்டிவெருளி.
versur என்னும் ஐசுலாந்து மொழிச்சொல் விற்பனையையும் விற்பனைச்சீட்டையும் குறிக்கிறது.
00
- பற்றுவரவி வெருளி – Kassaphobia பற்றுவரவு பொறி(Cash register) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பற்றுவரவி வெருளி
Cash register எனச் சொல்வதால் பணப்பதிவேடு எனக் கருதக்கூடாது. பண வரவு செலவு, கணக்கு வழக்குகளைப் பதியும் மின்னணுப் பொறி.
பணப் பதிபொறி என்பதுபோல் சொன்னால் கொடுக்கல் வாங்கலுக்கான பணம் மட்டுமே பதிவதுபோல் கருதப்படும். வங்கி அட்டைகள், கடன் அட்டைகள் மூலம் பணம் பெறுவதையும் பதிந்து கணக்கில் வரவு வைப்பது. எனவேதான் பொதுவாகப் பற்றுவரவி எனக் குறித்துள்ளேன்
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply