(மாற்றுப் பொருள் சொற்கள்  1/2 )

மாற்றுப் பொருள் சொற்கள்  2/2

  1. Acid test – கடுந்தேர்வு

Acid  – காடி, காடித்தன்மை, காடிப்பொருள், புளியம், புளிப்பு, அமிலம், புளிமம், அமிலத்தன்மை, புளிப்புத் திராவகம், தீநீர் முதலிய பல பொருள்கள் உள்ளன. எனினும் இவை நீதித்துறையில் Acid test என்னும் பொழுது பொருந்தா.

புளிம ஆய்வு, எரிம ஆய்வு , எரிமச்சோதனை என்பன நேர் பொருளாக இருந்தாலும் இந்த இடத்தில் பொருந்தாது. அக்கினிப் பரீட்சை எனச் சொல்வது இதற்குப் பொருந்தும். ஆனால் அக்கினி தமிழ்ச்சொல்லல்ல. எனவே,  கடுமையான தேர்வைக் குறிக்கும் இதனைக் கடுந்தேர்வு என்பதே சரியாகும்.

5.         Case – வழக்கு, நோய்வு    

 நீதித்துறையில், Case diary -வழக்குக் குறிப்பேடு > வழக்கேடு;

Case stated      வழக்கு விவர உரை; கூறப்பட்ட வழக்கு (மற்றொரு நீதிமன்றத்தின் கருத்தைக் கூறக்கேட்டல்)

என்பனபோல் பயன்பெறுகிறது. ஆனால் மருத்துவத்துறையில்  நோயாளியின் Case ஐக் குறிக்கையில் வழக்கு என்பது பொருந்தாது. நேர்வு என்னும் சொல்லும் பொருந்தாது. இங்கே நோயின் தன்மை முதலியனவே குறிக்கப் பெறுவதால்  நோய்வு எனலாம்.

Case sheet      நோய்‌ விவரக்‌ குறிப்புத்தாள்‌;

நோய்வுக்‌ குறிப்புத்தாள்‌; நோய்வுக் குறிப்பி; என்றும்

நீதித்துறையில்

வழக்கு விவரக் குறிப்புத் தாள்  வழக்குக் குறிப்பி; என்றும் குறிக்கலாம்.

            6. Caveator – தடையீட்டாளர்

            கவனமாயிரு, விழிப்பாயிரு, எச்சரிக்கையாயிரு என்னும் பொருள்கள் கொண்ட caveō என்னும்இலத்தீன் சொல்லில் இருந்து caveat உருவானது. இச்செயலுக்குரியவர் Caveator – முன்னெச்சரிப்பு மனுதாக்கல்‌ செய்பவர்‌ எனக் குறிக்கப்பெறுகிறது. இத்தகைய நெடுந்தொடர் சொல்லைக் குறித்தால் அயற்சொல்லே எளிய பயன்பாடாக இருக்கும் எனக் கருதி, கேவியேட்டர் என்றே பயன்படுத்துவர். சிலர் கேவேட்டர் என்றே குறிக்கின்றனர்.  எனவே சுருங்கிய தமிழ்ச்சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்றத்தில் ஒருவர் தொடர்பில் அல்லது அவருக்கு எதிராக மற்றொருவர் வழக்கு தொடுக்கவோ விண்ணப்பம் அளிக்கவோ செய்யலாம்.  அதனால் தனக்குத் தீங்கு ஏற்படும் என அஞ்சி  முன் எச்சரிக்கையாக இவ்வழக்கு விவரம் தனக்குத் தெரியாமல் தொடரவோ முடிக்கவோ கூடாது என்பதற்காக எச்சரிக்கையாகத் தன் கருத்தைக் கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று உரியவர் நீதி மன்றத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிப்பதையே கேவியட் என்கின்றனர். இவ்வாறு விண்ணப்பிப்பவர் கேவியேட்டர் எனப்படுகிறார். இத்தகைய எச்சரிக்கை விண்ணப்பம் ஒரு வகையில் வழக்கைத் தடுப்பதே. எனவே,  தடைகோரும் விண்ணப்பதைத் தடையீடு என்றும் அவ்வாறு கோருநரைத் தடையீட்டாளர் என்றும் சொல்லலாம்.

7. Service- சேர்ப்பு

Service என்றால்,

சேவகம்,சேவுகம், தன்னலம் கருதாமல் ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணி, தரப்படும் பொறுப்பை ஊதியம் பெற்று நிறைவேற்றுவது, அரசு நிறுவனத்தில் பணியாற்றும் காலம், பணிக்காலம், உணவு மேசைக்கலன், ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் நிலை, பணி, பணித் தொகுதி, எந்திரப் பொறி சீராக்கம், சேவை, இனப்புணர்ச்சி, தொண்டு, ஊழியம், அடித்தெறிதல், செம்பணி, வழங்கல், தொண்டு; வசதி; பொதுப்பயன், பணியம், விற்பனை, வசதி, பொதுப்பயன், ஆவணம், அகம்படித்தொண்டு, பத்தி, சேடியம், கைங்கரியம், ஏவல், தொண்டுதுரவு, பண், கயிங்கரியம், குடிமைப்பாடு, சீராக்கம்,பண்டுகம், திருப்பணி, குற்றேவல் முதலிய பல பொருள்கள் உள்ளன.

நீதித்துறையில் அழைப்பாணை அல்லது பிற வழக்காவணம் ஒருவரிடம் சேர்க்கப்படுவதை Service என்கின்றனர். அஃதாவது நீதிமன்றத்தில் உரிய ஆவணம் உரியவரிடம் சேர்க்கப்படுவதையே இது குறிக்கிறது. எனவே சேர்ப்பு எனலாம்.

நீதி மன்றத்தில் என்று மட்டுமல்லாமல், பொதுவாக ஓர் அலுவலகத்திலிருந்து மடல், ஆணை, அறிவிக்கை அல்லது பிற அலுவலாவணத்தை உரியவருக்குச் சேர்ப்பதைச் சார்வு என்பர். எடுத்துக் காட்டாக,

service by post : அஞ்சல்வழிச் சார்வு

எனினும்

dependency : சார்வு எனப்படுவதால் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. ஆதலின் சேர்ப்பு என்பதே ஏற்றதாகக் கருதப்படுகிறது.

8. Prescription – துய்ப்புரிமை

prescription என்றால் பெரும்பான்மை மருத்துவர் எழுதித்தரும் மருத்துவக் குறிப்பு என்றே கருதுவதால் அப்பொருளில் சில அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அது பொருந்தாது.

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் 1882, பிரிவு 15(S. 15 IEA,1882), பிரிவு4(2) இந்திய மீன்பிடிச் சட்டம், 1897 ஆகியவற்றில் இது குறிக்கப்பெறுகிறது.

prescription என்பதற்கு மருந்துப் பரிந்துரைச் சீட்டு, மருந்துச்சீட்டு, அனுபோகஇழப்பு, மருந்து மருத்துவக் குறிப்பு, மருந்துக்குறிப்பு, மருந்து அறிவுரை, மருந்தெழுதித்தருதல், நோய் தீர் மருந்தறிதல், புரவரைவு, மருந்துநியமம், வழக்கமுறைமை, நோய்மருந்தளவு நீடனுபோக உரிமை,நீடனுபோகம், அறிவுரை, விதிப்புரை,  மரவெட்டல் செயல்பாட்டுக் குறிப்பு எனப் பல பொருள்கள் உள்ளன. இவற்றுள் அனுபோக உரிமை என்பதே சட்டப் பயன்பாட்டிற்குரியது. அனுபோகம் என்பதன் தமிழ்ச்சாெல் துய்ப்பு என்பதாகும்.

நீண்ட காலத் துய்ப்புரிமை அடிப்படையில் சொத்தினை அல்லது சொத்துமீதான சில உரிமைகளை அடைதலையே குறிக்கிறது.  எனவே,

prescription – துய்ப்புரிமை

எனலாம்.

இவ்வாறு பொதுவாக இயல்பான நேர்வில் ஒரு சொல் தரக்கூடிய பொருள், தான் பயன்படும் இடத்திற்கு அல்லது துறைக்கு ஏற்ப வேறு பொருளில் வழங்கப்படுவதே வழக்கமாகும். இத்தகைய மாற்றுப் பொருள் சொற்களை அறிந்து உரிய இடங்களில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கையாளும்  பொழுது நீண்ட சொல்லாக இல்லாமலோ அயற்சொல்லாக இல்லாமலோ கிரந்த எழுத்தைப் பயன்படுத்தாமலோ தமிழ்ச்சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும். இப்பணிகளில் ஈடுபடுவோர் மிகக் குறைவாக உள்ளனர். எனவே, இததகைய கருத்தரங்கங்கள் மிகுதியாக நடைபெற்று எந்தத் அயற்சொல்லுக்கும் ஏற்ற தமிழ்ச்சொல் இ்லை என்ற அவலநிலை இல்லாமல் தமிழ்ச்சொல் வளத்தைப் பெருக்க வேண்டும்.

thiru2050@gmail.com