வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் முந்தைய பகுதி தொடர்ச்சி)
வெருளி அறிவியல் 31 – 33
31.ஆடை வெருளி – Vestiphobia
ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி.
குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு.
படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது.
தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
vestis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆடை அல்லது மேலுடை என்பதாகும்.
00
32. ஆடை அவிழ்ப்பு வெருளி – exuerphobia
மருத்துவ ஆய்விற்காக உடைகளைக்கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.
வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.
மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று அஞ்சி மருத்துவரைப் பார்க்காமல் நோயை முற்ற விடுபவர்களும் உள்ளனர்.
தொடைப்பகுதிகள் அல்லது பின் பகுதிகளில் ஊசி செலுத்துவதற்காக ஆடையை ஒதுக்க அஞ்சி அது குறித்துக் கவலைப்பட்டே ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
வீட்டைச் சுற்றி அம்மணமாக நடக்கும் இயல்பு உள்ளவர்களும் மங்கிய வெளிச்சத்தில் மருத்துவர் முன் ஆடையை அவிழ்க்க அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
exuer என்றால் சட்டை கழற்று என்பது பொருள்.
00
33. ஆணுறுப்பு வெருளி / விறைப்பு வெருளி -Phallophobia/Ithyphallophobia / Medorthophobia
ஆண் உறுப்பைப்பார்த்தால் அல்லது ஆண் உறுப்பு குறித்து எண்ணினால் ஏற்படக்கூடிய அச்சமே ஆணுறுப்பு வெருளி.
விரிந்த பொருளில் சொல்வதானால் ஆண்மை மீதான பேரச்சமே இது.
தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதாக எண்ணி வருந்துதல், பாலுறவு வெறுப்பு போன்றவற்றாலும் ஆணுறுப்பு வெருளி வரலாம்.
phallo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆண் குறி.
Ithy என்னும் பழம்கிரேக்கச் சொல்லிற்கு நேரான என்று பொருள்.
(தொடரும்)
00
(காண்க – வெருளி அறிவியல் 34 – 37 )
Leave a Reply