(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  5

7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia

அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.

அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.

போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.

Nucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.

00

8. அணுக்குண்டு வெருளி – Atomosophobia

அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.

போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி  நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும்  பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.

அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.

00

9. அண்ட வெருளி-Kosmikophobia

அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி.

விண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.

‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.

00

10. அதள் வெருளி-Doraphobia

விலங்குத் தோல் மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.

விலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.

சிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.

தோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

அதள் என்பது விலங்கின் தோலினைக்(leather) குறிக்கும்.

dora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.

00

11. அதிர்ச்சி வெருளி-Hormephobia

துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வதுஅதிர்ச்சி வெருளி.

காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதை யும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு அதிர்ச்சி வெருளிக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் தொலைவரி(தந்தி) வந்தாலே செய்தி என்ன என்று அறியும் முன்னரே துயரச்செய்தியாக இருக்கும் என்று பேரதிர்ச்சி கொள்வோர் இருந்தனர்.

00

(தொடரும்)

அணுஆயுத வெருளி
அணுஆயுத வெருளி
அணுக்குண்டு வெருளி
அணுக்குண்டு வெருளி
அண்ட வெருளி
அண்ட வெருளி
அதள் வெருளி
அதள் வெருளி
அதிர்ச்சி வெருளி
அதிர்ச்சி வெருளி

(காண்க – வெருளி அறிவியல் 6)