பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:
களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி
உதாரன்: அரசனுக்குப் பின்னிந்த
தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தவொரு
பெண்ணைக் கொல்ல
அரசனுக்கோ அதிகாரம்
உங்க ளுக்கோ
அவ்வரசன் சட்டத்தை
அவம தித்தான்
சிரமறுத்தல் வேந்தனுக்குப்
பொழுது போக்கும்
சிறியகதை நமக்கெல்லாம்
உயிரின் வாதை
அரசன்மகள் தன்னாளில்
குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க
நினைத்தி ருந்தாள்
அய்யகோ சாகின்றாள்
அவளைக் காப்பீர்
அழகியஎன் திருநாடே
அன்பு நாடே
வையத்தில் உன்பெருமை
தன்னை நல்ல
மணிநதியை உயர்குன்றைத்
தேனை யள்ளிப்
பெய்யுநறுங் சோலையினைத்
தமிழாற் பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை
அப்பே ராவல்
மெய்யிதயம் அறுபடவும்
அவ்வி ரத்த
வெள்ளத்தால் வெளிப்படவும்
தீரு மன்றோ
மோனை: புறம்பேசிப் பொல்லாங்கு
புரிவான் தானும்
பொருந்திமனத் துயர்களையும்
நண்ப னாகான்
மறம்பேசி மனத்திலாண்மை
யில்லா தானும்
மங்கையரின் காதலிலே
வெற்றி கொள்ளான்
திறம்பேசுந் திருட்டுவழிச்
செல்வன் தானும்
செய்கின்ற பூசனையால்
பக்த னாகான்
அறம்பேசும் அருந்தமிழைக்
காவா தானும்
அற்றத்தை மறைக்கின்ற
மனித னாகான்
அறுசீர் விருத்தம்
நாட்டுப் பற்றும் மதப்பற்றும்
நாளும் மாறும் நிலைகண்டீர்
ஏட்டைத் தூக்கிக் கல்லாமல்
இருப்பார் தமக்குந் தாயாவாள்
ஊட்டி வளர்க்கும் மொழிப்பற்றே
உயிர்போ மளவும் நிலைக்குமன்றோ
காட்டிக் கொடுப்போன் தமிழை, தாய்
கருப்பை யறுக்கும் பதராவான்
எண்சீர் விருத்தம்
உதாரன் : வாழியஎன் நன்னாடு
பொன்னா டாக
வாழியநல் பெருமக்கள்
உரிமை வாய்ந்து
வீழியபோய் மண்ணிடையே
விண்வீழ் கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும்
கொடிய ஆட்சி
ஏழையினேன் கடைசிமுறை
வணக்கஞ் செய்தேன்
என்பெரியீர் அன்னையீர்
ஏகு கின்றேன்
ஆழ்கஎன்றன் குருதியெல்லாம்
அன்பு நாட்டில்
அழிகதமிழ்ப் பகையெல்லாம்
அடிவே ரின்றி
அமுதவல்லி: என்புக்கு மேலாகத்
தோலைப் போர்த்தும்
அன்பின்றேல் அவ்வுடலில்
உயிரே தென்றே
மன்பதையின் திறமுரைத்த
வள்ளு வர்தாம்
மண்ணுலகின் நிலைகாக்கச்
சொன்னா ரன்றோ
மன்னுபுகழ்த் தமிழைநற்
கவிஞன் தன்னை
மாசற்ற உள்ளத்தால்
உயிராய் எண்ணி
அன்புசெய்தோர் புவிமீது
வாழல் தீதோ
அன்னையீர் பெருமக்காள்
சொல்வீ ரின்னே
இளையோன் 1 : படிகத்தைப் பால்முழுக்குச்
செய்தாற் போலப்
பாவையவள் விடும்கண்ணீர்
அனிச்சந் தாங்கா
அடிமீது படிகின்ற
கொடுமை கண்டும்
இடிவிழுந்த மரமாக
நிற்றல் நன்றோ
இளையோன் 2 : கொடிதிந்த செயல்தானும்
நாட்டிற் கென்றும்
கொடும்பழியை நிலைப்பிக்கும்
மறக்க வேண்டாம்
கொடுவாளைப் பறித்திடுவோம்
இணையை மீட்போம்
கொலைப்பழியைத் தமிழுக்குத்
தவிர்ப்போம் வாரீர்
இளையோன் 3 : (அதிகாரியை நோக்கி)
நானேதான் நாடென்று
நடுக்க மின்றித்
தானினைத்த வாறெல்லாந்
தருக்கி நின்று
ஊன்வாட்டுங் கொலைஞராய்
உயிரை வாட்டும்
உங்களரசன் எங்கட்கினி
மன்ன னில்லை
இளையோன் 4 : கோனாட்சி யினிவேண்டாம்
குவல யத்தில்
கொடுங்கோலுக் கினியென்றும்
வாய்ப்பு மில்லை
தேனொத்த தமிழுக்குத்
தீங்கு மில்லை
திருந்தாத உள்ளத்தார்
எம்மி லில்லை
இளையோன் 5: நவிலுங்கால் இன்றெமக்குப்
பொன்னா ளாகும்
நறுந்தமிழால் மக்களெல்லாங்
கூடி விட்டார்
செவியடைத்து வாய்மூடிக்
கிடந்தா ரெல்லாம்
செந்தமிழால் சிந்திக்கத்
தொடங்கி விட்டார்
இளையோன் : 6 கவிஞனுக்கும் காதலிக்கும்
மீட்சி தந்தோம்
காவலன்பால் தூதாக
நீரே செல்வீர்
இளையோன் 7: புவியாட்சி தனையுமக்குத்
தாரோ மென்று
போயுரைப்பீர் பொழுதையினித்
தாழ்த்தீர் செல்வீர்
(அதிகாரிகளும், கொலைஞர்களும் ஓடுகின்றனர்)
உதாரன் : ஊராரே பெரியாரே
உரிமை காக்கும்
உள்ளுணர்வு கொண்டதமிழ்
இளைஞர் கேளீர்
நேரான ஆட்சியொன்று
நாம மைத்து
நெடும்பூமி எல்லார்க்கும்
பொதுவென் றாக்கி
சீரான வாழ்க்கையினைச்
சிறக்கச் செய்யச்
சிந்திக்கும் பகுத்தறிவைத்
தினம்வ ளர்ப்போம்
வேரான மொழிகாப்போம்
உரிமை காப்போம்
வீறுபெற நம்நாட்டை
விளங்கச் செய்வோம்
அறுசீர் விருத்தம்
கூனென்றுங் குருடென்றும் நம்மைக்
குட்டுதலை யினிப்பொறுத்தல் வேண்டாம்
ஏனென்றும் எதற்கென்றும் கேட்டே
எதனையும் ஆராய்ந்து செய்தால்
நானென்று நீயென்று யாரும்
நமையாளும் வாய்ப்பென்று மில்லை
தேனென்றும் உயிரென்றுந் தமிழைத்
தினங்காத்துப் புவியாள்வோம் வாரீர்!
மக்கள்: வேரான மொழிகாத்து வாழ்வில்
வினைத்தூய்மைத் திறனுடையார் தேர்ந்து
ஊராளும் உரிமையதுங் காப்போம்
ஓருலகக் குறிக்கோளுங் கொள்வோம்
சீரான விதிமுறைகள் செய்தே
சிறுபிறழ்வு மில்லாமல் வாழ்வோம்
பேராளன் கவிவல்லான் வாழ்க
பெருமைமிகு அமுதவல்லி வாழ்க!
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply