(அகல் விளக்கு – மு.வரதராசனார். 21. தொடர்ச்சி)

அகல் விளக்கு

தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், “என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா பள்ளி இறுதித்(எசு.எசு.எல்.சி.) தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவலை இல்லாமல் முழுநேரமும் திருவிழாப் பார்த்து அனுபவித்திருக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.

திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். புலிவேடம், கரிவேடம், சாமியார் வேடம், குறத்தி வேடம் என்று இப்படிப் பலர் பல வேடம் போட்டுக்கொண்டு வேடிக்கை செய்தார்கள். ஆண் பூதமும் பெண் பூதமும் ஆடிய ஆட்டங்கள் நன்றாக இருந்தன. எல்லாவற்றையும்விடப் பூக்கடைக்காரர்கள் சேர்ந்து நடத்திய வாணவேடிக்கை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில் இருந்த செவிடர்களின் காதுகளிலும் வாணவெடிகள் கேட்டிருக்கும். பாம்புகள் போலவும், பூமாரி போலவும் வகை வகையான மத்தாப்பு ஒளியோடு வெடித்த வெடிகளுக்குக் கணக்கில்லை.

வாண வேடிக்கைக்கு மட்டும் இரண்டாயிரம் உரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என்றும், அதுபோல் எந்த ஆண்டிலும் நடந்ததில்லை என்றும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் இரவு ஒருமணி வரையில் வாணம் வெடித்தபடியே இருந்தது. ஊரே அதிர்ந்து போயிற்று. வானுலகம் மண்ணுலகத்தோடு சேர்ந்து கூத்தாடுவதுபோல் இருந்தது, அந்த ஒளியும் ஒலியும். என் தம்பி கடைசி வரையில் கண் விழித்திருந்து ஒவ்வொரு வெடிக்கும் எழுந்து எழுந்து துள்ளித் துள்ளிக் குதித்தான். என் தங்கையும் கற்பகமும் முந்திய ஆண்டில் மகிழ்ந்தது போலவே பார்த்து மகிழ்ந்தார்கள். அத்தை, அம்மா, பாக்கியம், எல்லோரும் எங்கள் வீட்டின் திண்ணையை அடுத்து உட்கார்ந்தபடியே பார்த்துக் களித்தார்கள். பாக்கியத்தின் தந்தையும் தம்பியும் அவர்கள் வீட்டுத் திண்ணைமேல் படுத்திருந்தார்கள்.

எங்கள் அப்பா எங்கள் திண்ணையில் படுத்துவிட்டார். சந்திரனும் நானும் படுக்காமல், உட்கார்ந்தபடியே நெடுநேரம் பார்த்திருந்தோம். ஆனால் முந்திய ஆண்டில் இருந்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. மூன்றாம் ஆண்டில் அவன் வந்த புதுமையில் இங்கும் அங்கும் பரபரப்பாகச் சென்று திருவிழாவைப் பார்த்தோம். இந்த ஆண்டில் தேர்வு முடிந்த பிறகும், படிப்புச் சுமை இல்லாத நிலையிலும் எங்கள் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. நான்கு பேருக்கு இடையில் நாங்களும் கண்விழித்திருந்தோம். சந்திரனுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தது. எனக்கு உறக்கமே வந்துவிட்டது. காரணம் நோயினால் என் உடம்பு அவ்வளவு சோர்ந்து போயிற்று. அவனுக்கு மகிழ்ச்சி இல்லாத காரணம், தேர்வில் நன்றாக எழுதாத குறையாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையும் அவன் என்னிடம் வாய்விட்டுச் சொல்லவில்லை.

 

00

அத்தியாயம் 9

வைகாசி முடிவில் தேர்வின் முடிவுகள் வந்தன. நான் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஓர் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வேண்டுமே என்று எண்ணி மிக வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் “கவலை வேண்டா. நீ நோயிலிருந்து தப்பிப் பிழைத்ததே போதும்” என்று தேற்றிக் கொண்டிருந்தார்கள்.

சந்திரன் தேர்ச்சி பெற்றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் வாங்கவில்லை. ஆசிரியர்கள் எல்லோருக்கும் உடன்படித்த மாணவர்களுக்கும் – இது பெரிய வியப்பாக இருந்தது. வரலாற்று ஆசிரியரின் மகன் சந்திரகுப்தன் நான்கு பாடங்களில் முதல்வனாக இருந்தான். மற்றொருவன் மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றுவிட்டான்.

பெருங்காஞ்சிக்குப் போய்ச் சந்திரனைப் பார்த்துத் தேறுதல் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். நானே தேர்ச்சி பெறாதபோது நான் போய் அவனுக்குத் தேறுதல் சொல்வது பொருந்தாது என்று எண்ணி நின்றுவிட்டேன்.

ஆனாலும், சந்திரனிடத்தில் எனக்கு நன்றியுணர்ச்சி இருந்தது. ஏன் என்றால், அவன் சொல்லிக் கொடுத்த கணக்கில்தான் நான் நிறைய எண்கள் வாங்கியிருந்தேன். தமிழ்ப்பாடத்திலும் அதற்கு அடுத்த நிலைதான் இருந்தது. ஆங்கிலத்திலும் விஞ்ஞானத்திலும் எண்கள் குறைந்து போயிருந்தன. அந்தப் பாடங்களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்று தலைமையாசிரியர் சொன்னார்.

சந்திரனுடைய தகப்பனார் ஊரிலிருந்து வந்தார். அவனைச் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும், சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் அதற்கு வேண்டிய முயற்சி செய்வதாகவும் கூறினார். நான் தேர்ச்சி பெறாததற்காகக் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்குமாறு தேறுதல் மொழிகள் சொல்லிவிட்டுச் சென்றார். அவன் கல்லூரியில் சேர்வதற்கு முன் அவனைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தேன். நேராகத் தொடர்வண்டி (இரயில்) ஏறிச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நானாவது அவனுடைய ஊர்க்குப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேனே என்று என்னையே நொந்து கொண்டேன். சென்னையில் அவனுடைய முகவரி தெரிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும்பினேன். முகவரியும் தெரியவில்லை. இன்னும் சில வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள்தோறும் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.

பள்ளி திறந்ததும், முன் படித்த வகுப்பிலேயே மிகச் சோர்வோடு போய் உட்கார்ந்தேன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவர்கள் பலர் என்னோடு வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில் எனக்குத் துணையாக இருந்த சந்திரன் இப்போது இல்லை. அவன் இல்லாமல் நான் மட்டும் தனியே இருந்தது, எனக்குத் துயரமாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் திரும்பும்போதும் அந்தத் தனிமையை நன்றாக உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களோடும் வகுப்பில் உள்ளவர்களோடும் கலகல என்று பேசிப் பழக எனக்கு மனம் இல்லாமற் போயிற்று. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணர்ச்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு