களப்பாள் குமரன்

             எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..?

கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….?

தமிழ் நாட்டில் தமிழ்வாழ, நூறுபேர் சாகும்வரை. உண்ணா நோன்புப் போராட்டம்.

முதலமைச்சர், தலைமைச் செயலாளரை அனுப்பிவைத்தார். போராட்டக் களத்திற்குவந்த தலைமைச் செயலாளர் “வாட் இசு யுவர் பிராபளம்” என்று கேட்க “யோவ் இங்க பிலாப்பழமும் இல்ல பரங்கிப்பழமும் இல்ல போய்யா” என்றனர். தலைமைச் செயலாளர் வந்த வழியே விரைந்தார்.

ஒரு நாள்….. இரண்டு நாள்….

எங்கே தமிழ்…. எங்கே தமிழ்….என்று, எதையோ தொலைத்துவிட்டுத் தேடுபவர்களைப்போலத் தமிழறிஞர்கள் முணகிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் சாகக் கிடக்கிறாரே என்று இரக்கப்பட்டு, மாணவர்கள் பலரும் போராட்டக் களத்தில் குதித்தனர்.

நான்காம் நாள், அரசின் உயர் அலுவலர் ஒருவர் வந்து போராட்டக் குழுத் தலைவரை முதலமைச்சர் சந்திக்க விரும்புவதாகக் கூற….

“முதலமைச்சர் இங்கு வரவேண்டும்….” என்று ஓங்கி முழங்கினார்….

ஒரு வழியாகக் கல்வி அமைச்சர் வந்தார்.

“தாங்கள் முதலமைச்சரைக் கண்டு பேசலாம்…. வாருங்கள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நான் உறுதுணையாக இருப்பேன்….” என்றார்.

“ஐயா…. எங்களுக்கென்று கோரிக்கைகள் எதுவுமில்லை…. நம்முடைய தாய்மொழி பற்றிய…..”

“ஆமாம்…” என்று தன்னையும் தமிழன் என்று உடனடியாகக் காட்டிக்கொண்டார் அமைச்சர்.

தமிழ்ச் சங்கத் தலைவர் கல்வி அமைச்சருடன் புறப்பட்டார்.

தமிழ்ச் சங்கத் தலைவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தார் முதலமைச்சர்.

“ஐயா வணக்கம்……”

“எதற்கு இந்த உண்ணா நோன்பு…. பசி .. பட்டினி ……. இப்படி வேகாத வெயிலில் உண்ணா நோன்பு இருக்கலாமா…. கடற்கரையில் பெரிய பந்தல் போட்டு….. பஞ்சுமெத்தை, கட்டில், கற்றுக்குளிர்வி எல்லாம் வைத்துக்கொண்டு ஒய்யாரமா உண்ணா நோன்பு இருந்தால்தானே…. மக்கள் கூடுவார்கள்! சரிசரி…. தமிழைக் காப்பாத்துவோம்… இந்தப் பழச்சாற்றைக் குடியுங்கள்…. உங்களை அமைச்சராக அமர்த்துகிறேன்…… நீங்களே வந்து…. தமிழைக் காப்பாற்றுங்கள் ! என்னய்யா…. கல்வி அமைச்சரே வருகிற இடைத்தேர்தலில்… ஐயாவை வேட்பாளராக நிறுத்துங்கள்”என்றார் முதலமைச்சர்.

“சரி, ஐயா…..”

“இப்ப ஐயாவுக்கு உடனடியாக ஏதாவதுசெய்ய வேண்டும்…. அமைச்சரே ! தமிழ் வளர்ச்சித்துறை என்று ஒன்று தொடங்கு… அத்துறைக்கு ஐயாவைத் தலைவராக அமர்த்து…..”

“தமிழ்வளர்ச்சித் துறை என்ற ஒன்று ஏற்கெனவே இருக்கிறதே ஐயா….”

“ஓ…. அப்படி ஒரு துறை இருக்கிறதா….?”

“சரி! தமிழ், கிடுகிடு வளர்ச்சித் துறை என்ற ஒன்றைத் தொடங்கி அத்துறைக்கு ஐயாவைத் தலைவராக அமர்த்துங்கள்…. மகிழுந்து, அரசு வளமனை, பணியாட்கள்… எல்லா நலன்களையும் செய்து கொடுங்கள் …….”

தமிழ்ச் சங்கத் தலைவருக்குத் தலைகால் புரியவில்லை…. பழச்சாறு மடமடவென்று உள்ளே இறங்கியது.

முதலமைச்சரிடம் விடைபெற்றுக்கொண்டு உண்ணா நோன்பு பந்தலுக்கு  விரைந்தார்.

“வெற்றி…. வெற்றி….. !” – மகிழுந்தில் இருந்தபடியே கத்தினார் தலைவர்.

எல்லாரும்  கைதட்டி  ஆரவாரம் செய்தார்கள்.

தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார்….

“தமிழ்ச் சங்கங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக…. முதலமைச்சர் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். உண்ணா நோன்பு நிறைவடைகிறது. அனைவரும் பழச்சாறு குடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.”

மாவட்டம்தோறும்  “தமிழ் வாழ்க “ என்று எழுதப்பட்ட விளம்பரப் பலகை. அதற்குக் கீழே இருபத்துநான்கு  மணி நேரமும் இயந்திரச் சுடுபொறி ஏந்திய காவலர்கள்…. தமிழைக் காப்பாற்ற, அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

வாழ்க தமிழ்….. வெளிநாட்டில்!

 

++++++++++++++++++++