(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 15

விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான்.


“சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, “நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எசு.எசு.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா? ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்” என்றான். “அவரை ஏன் கேட்கவேண்டும்? நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா?” என்றேன். “என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்” என்றான்.


பிறகு, “அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன? அதை முதலில் சொல்” என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.


“இது எப்படி முடியும்? அழகான உரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்” என்றான்.


“ஐரோப்பியரும் அமெரிக்கரும் இல்லையா? நாமும் அப்படிப் பழகக்கூடாதா?”


“பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்.”


“அவள் நல்ல பெண்.”


நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே.”


“சே! என்ன பேச்சு பேசுகிறாய்?”


“ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா?”


“கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங்கப்போவதும் இல்லை.”


“அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு?”


“அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா? அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது.”


பிறகு, சாப்பிடப் போகலாம். வா” என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.


மறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.


வீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். “நல்ல பையன்! எவ்வளவு அக்கறையான பையன்! அவனா அப்படிப் போய்விட்டான்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.


நான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். “தம்பி எப்போது வந்தது?” என்றார். “இப்போதுதான்” என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, “அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்!” என்றார். உடனே போய்விட்டார்.


சந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.


பெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டிருந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.


வேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். ‘இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்’ என்றார். எனக்கும் அது நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.


அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், “எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு” என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.


ஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன.


புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.


வீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, “எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா? அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ” என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.


ஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.


இந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள்.


அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும் இல்லாத காரணத்தால், அம்மாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. திருமணத்திற்கு முன் செய்யும் சில பொங்கல் பூசைகளுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் அம்மாவே முன் நின்று, எங்கள் வீட்டு அலுவல் போலவே அக்கறையோடு மேற்கொண்டு செய்துவந்தார். அப்பா மளிகைக் கடையை விட்டு அசையவே இல்லை. பெண் வீட்டாரிடம் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது, பாக்கியமும் அந்த அம்மாவின் தகப்பனாரும் நேரே வந்து அப்பாவிடம் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்கள். “சில்லறைக் கடையை விட்டு எப்படி வரமுடியும்? சொல்லுங்கள்.

(தொடரும்)

 முனைவர்மு.வரதராசனார், அகல்விளக்கு