ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்
(18)
5.குருபக்தியும் ஐயப்பன் அருளும்
“பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும். ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.”
இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள் எடுத்துக் காட்டும். தமிழ் உணர்வும் தமிழ் இனப்பற்றும் தேசீய ஒருமைப்பாட்டு நாட்டமும், ஒரே உலகம்-உலக மக்களின் ஒற்றுமை எனும் கனவுகளும் அலைமோதும் கவிக்கடல் உள்ளத்தில் ஐயப்பப் பக்தி உணர்வும். சற்குருநாதர் சாது குருசாமிகள் மீதான பக்தியும் சதா அலை வீசிக் கொண்டிருக்கின்றன. இவ் உணர்வெழுச்சியால் உந்தப்பெற்று கவிஞர் சேதுராமன் சாது குருசாமி பாமாலை, ஐயப்பன் அருளமுதம் என்று பக்திப் பாடல்களை, போற்றிப் பனுவல்களை, உள்ளத்தின் உணர்வலைகளாக வாரி வழங்கியிருக்கிறார்,
முப்பது ஆண்டுகளாக அவர் ஐயப்பன் ஆலயம் சென்று வருகிறார். ஐயப்பன் ஆலயம் செல்வதற்குரிய நோன்பினை நெறியோடு கடைப்பிடித் தொழுகி, உள்ள உறுதியோடு சென்று வருவதால் எனக்கு நிறைந்த துணிவும் தெம்பும், மேன்மையும் ஏற்படுகிறது. ஐயப்பப் பக்தர்கள் பலர் உண்மையை மறந்து சடங்கிற்கும் கோசத்திற்கும் மட்டுமே சென்று வரும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். நோன்பு நேரத்தில் ஒருவேளை உணவே உட்கொள்ள வேண்டும், தீய சிந்தனைகளை நீக்க வேண்டும். இப்படி நியதியைப் பின்பற்றி நடந்தால், இவ்வழி முறையால் நல்ல பெருமை அடைய முடியும்’ என்று பெருங்கவிக்கோ அனுபவ பூர்வமாக அறிவிக்கிறார்.
தான் பெற்ற இன்பம் ஏனையோரும் பெறுவதற்காக அன்புடன் அழைத்து ஆற்றுப்படை இயற்றியுள்ளார்.
அருட்செல்வம் தேடுங்கள் அன்பர்களே
இறை ஆற்றலில் கூடுங்கள் தோழர்களே!
என்று அழைத்துப் பக்திப்பாடல்கள் பாடுகிறார். சாது குரு சாமிகள் மீதும் பாமாலை இசைத்துள்ளார். உள்ளத்தின் உணர்வில் முகிழ்த்தெழுந்ததால் இப்பாடல்களில் இயல்பான ஒட்டமும் இனிய சொல்லாட்சியும் சான்றோரின் அருள் அமுதத்திற்கு ஈடான இதயக் கனிவின் விளைவான நயங்களும் கலந்து உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன.
உண்டிடும் உணவிலே உறைந்தருள் குருவே
கண்டிடும் பொருளிலே கவிந்தருள் குருவே
விண்டிடும் சொல்லொம் விளைந்திடும் குருவே
தொண்டிலே துணைவரு சுடர்கதிர்க் குருவே
இவ்விதம் படிப்போரின் உள்ளத்தையும் இழுத்துச் செல்லும் பான்மையில் அமைந்துள்ளது இப்பாமாலை.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply