ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)
7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்
துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதைகளில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது.
நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும் பெருங்குறை என்?
நமக்குள் நாமே நாவளர்த்து நயம் பேசி
கருத்து வேறு பாடுகளைக் கடை விரித்து, நாசத்தை
விருத்தி செய்வதன்றி வேறுவினை கண்ட தென்ன?
என்று அவர் கேட்கிறார். நாட்டில் எங்கெங்கும் காணப்படுகிற முரண்பாடுகளை நெஞ்சில் பதியும்படி அவர் எடுத்துச் சொல்கிறார்.
ஊருக் குழைப்பதாய்க் கூறுகின்றார்-பொது
உண்டியலில் கையை வைக்கின்றார்-அந்தோ
யாருக்கோ உபதேசம் கூறுகின்றார்-சொந்த
தம் வாழ்வில் ஊழலைச் சேர்க்கின்றார்-அட
பேருக்கோ திரிந்து அலைகின்றார்-செத்த
பிணம், போல் வயிற்றை வளர்க்கின்றார்
தேருக்கச் சாணியைப் பிடுங்கிவிட்டு-ஐயோ
தெருவில் ஊர் உலாவருகின்றார்.
கூட்டம் கூட்டி முழக்குகின்றார்-பின்னே
கும்மாளம் போட்டுக்கேடு செய்வார்-பேச்சில்
தேட்டம் எல்லார்க்கும் பொது என்பர்-வாழ்வில்
சேர்ப்பதனைத்தும் தனக்கே என்பார்-பசி
வாட்டம் போக்கும் வழி அறிந்தும்-அந்த
வாசல் தன்னை அடைத்து விட்டே
ஏட்டில் எழுதிக் கிழிப்போம் என்பார்-நெஞ்சில்
எத்தனை எத்தனை நிலைத்தவைகள்!
எழுத்தாளர் என்றும், எழுத்தினால் பாரைத் திருத்திடுவேன் என்று பெரும் பேச்சு பேசி அகந்தை வளர்க்கும் பேனா மன்னர்கள் பற்றிய உண்மையைக் கவிஞர் சித்தரிக்கிறார்.
எழுத்தால் திருத்துவேன் என்று வந்தான் –தன்னின்
எழுதுகோலில் நஞ்சை வைத்தான்–வாயில்
கொழுத்த திமிராம் வஞ்சம் வைத்தான்–நெஞ்சில்
கோடிப் பாம்பைக் கொஞ்ச வைத்தான்–அட
பழுத்த எட்டி மரம் போலக்–கனிந்து
பாரை ஏய்த்துப் பிழைத்து விட்டு–அட
அழுத்தமாக நான் எழுத்து வேந்தன் என–அந்தோ
அஞ்சாமல் கூறி நிமிர்ந்து நின்றான்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply