(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38  தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39  

 

ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது?

இந்த நெஞ்சுத் துணிவு பெருங்கவிக்கோவிற்கு உள்ளதற்குக் காரணமே, எவர்க்கும் அஞ்சாது, எவர் தயவையும் கெஞ்சாது, தனது எண்ணங்களை, உண்மையை, உள்ளவாறு உரைக்கும் இயல்பினைப் பெற்றிருப்பதுதான்.

கவிஞர் தனது தன்மையை ஒரு அரங்கில் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார்

உண்மைதான் கூறவந்தேன்… உள்ளபடி காட்டினேன்

காண் எவரின் நெஞ்சும் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல!

பொய் சொல்லி மெய்மறைத்துப் பேருக்காகக்

கண்மூடிக் கருத்துரைக்க அறியேன்! நானோர்

கவிக் கரும்பைக் கடித்துணரும் குழவி! மேலாம்

வண்ணத்தால் பொய்பூசி பித்தளையாய்

வாழ்கின்ற போலிகளை வதைக்கும் என்பர்!’ தன் திறமையில் திடமான நம்பிக்கை கொண்ட உள்ளம் தான் இவ்விதம் நாவலிக்க முடியும். அவர் தேர்ந்து கொண்ட கொள்கையில், பாடுபடுகிற இலட்சியத்தில், அவருக்குத் தீவிரமான பற்றுதல் இருக்கிறது. அதை எப்படியும் செய்தே முடிக்க வேண்டும் என்ற உறுதி அவருக்கு இருக்கிறது. அது அவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

சிதறிக் கிடக்கும் என்றன் இனத்தைச்

சேர்த்து வைக்கப் புறப்பட்டேன்-நம்முள்

பதறிச் சாகும் தமிழினத்தின் வெற்றிப்

பாதை அமைக்கப் புறப்பட்டேன்!

உலக இனத்தின் ஆணிவேர்நம்

உரிமை நாட்டப் புறப்பட்டேன்-நம்முள்

கலகம் மூட்டிப் பார்த்தவர் தம்

கதை முடிக்கப் புறப்பட்டேன்!

வையகத்தின் நாவசைத்த

வண்டமிழ்த்தாய் ஓங்கவே-கோடிக்

கையசைத்துக் கயமை சாடும்

கருத்தும் ஏந்திப் புறப்பட்டேன்!

என்று கொள்கை முழக்கம் செய்கிறார் கவிஞர். தனது ஆற்றலை அவர் நன்கு உணர்ந்திருப்பதால், “விஞ்சி எழ கவிக்கோ நான்; எவன் தயவும் தேவை இல்லை” என்று தலைநிமிர்ந்து முன்னேறும் தைரியம் அவர் பெற்றிருப்பதால் உறுதியாகப் பாட முடிகிறது அவரால்.

(தொடரும்)
 வல்லிக்கண்ணன்