thamizh-hindi01

தமிழன்பர் திரு. இலிங்கம் அவர்களுடைய கேள்விகளுக்கு விடை எழுதுமுன்,  நாம் பிறக்கும்போதே நம்மோடு பிறந்த தாய்மொழியான தமிழ், நம்மைப் பெற்ற தாய்போலும் தெய்வம் என்றும், நம் எண்ணங்களை உலகோருக்குத் தெரிவிக்க உறுதுணையாய் நின்று வாழவைக்கும் ஒப்பற்ற தெய்வம் என்றும், இத்தகைய தாய்மொழியை வணங்கிக் காக்க மறப்பது தமிழ் மரபுக்கு ஒவ்வாத கொடுமை என்றும் கூறித் தொடங்குகிறேன்…

-விழியூர் இளவரசன்

1. இந்தியால் தமிழ் எந்தவகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்?

வீட்டுக் கூரையின் ஓர் மூலையில் தீப்பற்றினால், மூலையில்தானே தீப்பற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பது அறிவுடைமை அன்று. இனிமேல் எங்கெல்லாம் பரவும், பரவி அழிக்கும் என்று நினைப்பதே நல்லறிவாகும். இந்தி, இந்தியாவின் அலுவல் மொழி எனப் புகுத்தப்பட்டபின், அலுவல் மொழி நாடு முழுவதுமே சூழும் என்றறிய வேண்டும். ஓர் மொழி நாடாளும் மொழியாகிவிட்டால், அந்நாட்டில் எத்துணைச் சிறந்த மொழிகள் இருப்பினும், முதலிடம் பெறுவது ஆளும் மொழியே.

இந்தி ஆட்சி மொழியானதால், தமிழ்நாட்டை வாழவைக்க கடமைப்பட்டுள்ள ஆளுநர்கள், நாட்டை மறந்து தம்மை வாழவைத்துக் கொள்ள, தமிழை மறந்திருப்பது எல்லா வகை அழிவிலும் பேரழிவாகும். இந்தியைக் கற்றால்தான் உயர்பதவியுண்டு, வாழ்க்கையில் வெற்றியுண்டு’ என்ற எண்ணத்தை ஊட்டிவிட்டிருக்கிறது ஆட்சிமொழியான இந்தி. இதனால், தமிழுள்ளங்கள் வேறுவழியில்லையே’ என்ற வேதனையோடு இந்தி கற்றாக வேண்டிய நிலையில் இருக்கின்றன. தமிழைப் படிப்பதால் வாழ்க்கையில் எவ்வகை வெற்றியும் கொள்ள அரசாங்கத்தில் வாய்ப்பில்லை என்றநிலையில் தமிழ் – தமிழுள்ளங்களில் –  இரண்டாவது இடத்திலே தள்ளப்படுகிறது. இந்தி முதலிடம் பெறுகிறது; இந்தியால் தமிழ் இவ்வாறு அழிகிறது.

வரும் மொழியால் –  வாழும் மொழி சிதைவது மட்டுமல்ல; இருக்கின்ற நல்ல மரபுகளும் சிதையும்; வேண்டாத புது மரபுகள்; மக்களின் வாழ்க்கையை மாசுபடுத்தும்.

செந்தமிழ், வண்டமிழ், பைந்தமிழ் என்று எண்ணற்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் இன்று எவ்வாறுள்ளது? ஆரியம் தமிழோடு கலந்தபின் தமிழின் தனிச்சிறப்புகள் ஒழிந்தது மட்டுமல்ல; தமிழ் மரபே குன்றிவிட்டது. ‘இறைவழிபாடு’ முதல் ‘திருமணம்’ வரையில் எத்தனையெத்தனை குறைகள்… எத்தனையெத்தனைக் கொடுமைகள்! இன்றைய தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ்நெறி முழுமையாக இருக்கிறதா? இல்லையே… ஆங்கிலம் நாடாளப் புகுந்தபின் தமிழுக்கு மேலும் சோதனை! தமிழ் – தமிழ்நெஞ்சங்களின் மூலையில் ஒதுக்கப்பட்டுத் தாழ்ந்தது. ஆட்சிமொழி எல்லா இடத்திலும் பரவி வெற்றி பெற்றது; தாய்த் தமிழ் அவலநிலையில் குற்றுயிராகச் சிதைந்தது.

திருக்குறள் இருக்க வேண்டிய இடங்களில் மதநூல்கள் இடம் பெற்றவை; அன்பு ஒன்றே இருக்க வேண்டிய இடத்தில் சாதியும் மதமும் புகுந்தன. தமிழன் சூடத் தகுந்த தமிழ்ப்பெயர்கள், ஜெகநாதன், சேஷாத்திரி, புஷ்பா என்று கொலையுண்டமை எதைக் காட்டுகிறது? பிற மொழிக் கலப்பால், தமிழ் மொழியின் வளர்ச்சியையா? இல்லையே! செந்தமிழின் அழிவைத்தானே உணர்த்துகிறது…

இந்தியாவில் நாளைய தமிழ் மொழியின் நிலையை எண்ணினால் நேர்மையுள்ள மனிதர்கள் வீணே அமைதி கொள்ளார். இருவர் உரையாடுவதை எடுத்துக்காட்டாகப் பார்த்தால், நன்கு விளங்கும். கற்ற இருவர் பேசும்போது, அவர்களின்பேச்சில் அதிகம் கலந்துள்ள சொற்கள் ஆங்கிலமும்  வடமொழியும்தானே! ஏதோ. ஓரிரு தமிழ்ச் சொற்களே இடையிடையே ஒலிக்கின்றன. இன்று இவ்வாறாயின் நாளை நாடெங்கும் நிலவப் போகும் இந்தியும், உரையாடலில் கலந்து, எழுத்தில் கலந்து, மேலும் தமிழை ஒழிக்காதா? முடிவாகக் கூறுமிடத்து, இந்தியாவில் தமிழ் அழியுமா? போன்ற ஐயவினாக்கள் தமிழர்களுக்குத் தேவையற்றன. தீயால் மலர்வாடுமா என்பது போன்ற பொருளற்றதும் கூட.

2. நம் நாட்டிலுள்ள மாநிலங்களின் தொடர்பிற்கு உரியமொழி இந்தி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

‘இந்தியே உரியமொழி’ என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? என அரசினரைக் கேட்டால், ‘இந்தியை இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசுகிறார்கள்; அதனால் இந்தியே கட்டாய அலுவல் மொழியாகக் கொண்டு மாநிலங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்’ என்பார்கள். இது முழுப்பொய்! ‘‘பெரும்பான்மையான மக்கள் பேசுகிறார்கள்’’ என்ற ஒரு சிறப்புக் கூட இந்திக்கு இல்லையே 2 விழுக்காடு கரிபோலி இந்தி பேசுகின்றவர்களின் எண்ணிக்கையோடு கோசலி மைதிலி போசுபூரி இராசத்தானி ஆகிய நான்கு மொழிகள் பேசுகின்றவர்களின் எண்ணிக்கையும் கூட்டி, இந்தியாவில், 48 விழுக்காடு இந்தி பேசுவதாகக் கணக்கிட்டுள்ளது முழுச்சதியாகும். கரிபோலி இந்தியின் கிளை மொழிகள் அல்ல, பிற நான்கு மொழிகளும்; அவை வெவ்வேறு தனி மொழிகள். இந்தப் பெருந்தவற்றினை அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டியவர்கள் எத்தனை பேர்! ஆயினும் தவற்றை உணரவில்லை அரசாங்கம்; ஒரு சிலரின் இந்தி வெற்றிக்குப் பணிந்து தவறிழைப்பது மாநிலங்கள் அனத்தும் ஒரு குடும்பமாக வாழத் தொடர்பு கொள்ளவா?

மக்கள் எண்ணிக்கையை விட்டுவிட்டுப் பார்த்தாலும் இந்திக்கு வேறு எந்தத் தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. 1850ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியே தலைதூக்கிற்று. சொற்பெருக்கில்லை & இலக்கணமில்லை – இலக்கியம் இல்லை –  இனிமை இல்லை; இந்த மொழி மாநிலத் தொடர்புக்கு எதற்கு? எல்லாச் சிறப்பும் கொண்டு உலகம் தோன்றியபோது இயற்கை படைத்த தமிழ் இன்னும் இனிமையோடு எண்ணற்ற சிறப்புகள் கொண்டு வாழ்கிறதே! ஏன் தமிழையே ஆட்சிமொழியாக ஏற்கக் கூடாது? சற்றே நினைத்துப் பாருங்கள்…

3. தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த இடங்களில் இந்தி புகுந்துள்ளது? அதனால் தனிமனிதவாழ்வு யாருக்காவது பாதிக்கப்பட்டுள்ளதா?

தமிழ்நாட்டில் இதுவரை எங்கெல்லாம் இந்தி புகுந்துள்ளது என்று தேடவேண்டிய கட்டாயம் இல்லை. அலுவல் மொழியான இந்தி, நாடு முழுவதும் புகும்; புகுந்தும் வருகிறது. இதுவே ஆட்சி மொழிக்குரிய ஆற்றல். ஒன்று இரண்டு என்று இந்தி நுழையும் இடங்களை எண்ணுவதை விட, நாடு அனைத்திலுமே இந்தி இடம் பெறும்; பெற்றும் வருகிறது என்று அறிதல் நன்று.

‘இந்தி – தமிழ்’ போராட்டம் தனி மனிதனின் வாழ்வுப் போராட்டமன்று தமிழ்மொழியை வாழவைக்கும் போராட்டம்; தமிழன் மானத்தைக் காப்பாற்றும் தன்மானப் போராட்டம். இந்தியால் – ஒரு தனி மனிதனின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை எண்ணுவதைவிட, தமிழ்க் குமுகாயம் பாதிக்கப்படுவதை உணர வேண்டும். தனிமனிதர்களின் கூட்டமைப்புதானே, குமுகாயம்; குமுகாயமே பாதிக்கப்படும்போது தனி மனிதனைக் கணக்கெடுக்க வேண்டுமா என்ன?

4. இந்திமொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா?

ஆங்கிலம் இருக்கும் இடத்தில் தமிழ் இருக்க வேண்டும்; அயல்மொழியான ஆங்கிலத்தை விரட்டிவிட்டு, நாட்டு மொழியான தமிழை ஆங்கிலம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்; இதுதான் முறை. ஆனால், ஆங்கிலத்தை அயல்மொழியென்று விரட்டிவிட்டு, மற்றோர் அயல் மொழியான இந்தியை வைப்பது இன்றைய ஆட்சி முறையில் காண்பது. இதனால், இந்தியாவில் தமிழ் ஓர் இடத்தில் மட்டுமா மறைகிறது? மறையப் போகிறது?

ஆங்கிலம் இடம் பெற்றுள்ள எல்லா இடங்களுமே தமிழுக்குரியது; இந்த உரிமையை இந்தி பறிக்க வருகிறது; பறித்தும் கொண்டது. தே.ப.ப.(என்.சி.சி.) மாணவ மாணவிகளின் பாபேதேக், தைனேகும்,.. சாவ் தான்…, சல்யூட் கரே, முதலிய குரல்களே தங்கள் கேள்விக்கு விடையாக அமைந்துள்ளதே. இதுபோல் எத்தனையோ இடங்களை இந்தி பிடித்துள்ளது.

5. பிறமொழிகளைக் கற்பதால்தான் ஒருவனின் தாய்மொழி உலகப்புகழ் பெறமுடியும் என்ற கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? இந்த வகையில்தான் தமிழால் ஆகிய திருக்குறள் இன்று உலகப்புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலுமா?

பிறமொழிகளைக் கற்பதால், நம் தாய் மொழியும், தெய்வத் திருக்குறளும் உலகப்புகழ் கண்டுள்ளது இனியும் காணும் என்பதை, ஒருவாறு ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்தப்  ‘பிற மொழிகள்’ எப்படிப்பட்டனவாய் இருத்தல் வேண்டும் என்பதே சிந்தனைக்குரியது. அண்ணல் காந்தியாரின் உலகப்புகழுக்குக் காரணமாய் அமைந்தவன் கோட்சே என்று எந்தக் குறைமதியுடையோனும் கூறுவானா? இதுபோல், தெய்வத் தமிழ்மொழியின் உலகப்புகழுக்கும், வள்ளுவப் பெருமானின் ஒப்பிலாத் தெய்வமறையின் வான்புகழுக்கும் காரணமாய் அமைந்தது – அமையும் தகுதியுள்ள மொழி ‘இந்தி’யா? அருள்கூர்ந்து இதனைச் சிந்தித்துப் பாருங்கள். உலகனைத்தும் போற்றி வரவேற்கும் சிறப்புடைய மொழியா இந்தி? ஐந்துவகையான இந்தி பேசும் மக்களே, ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளபோது, இந்திமொழி கற்பதால் செந்தமிழோ, திருக்குறள் போன்ற சிறந்த தமிழ் நூல்களோ உலகப்புகழ் எய்துமா? உலக நாடுகள் அனைத்துக்கும் பாலமாய் அமைந்துள்ள ஆற்றல்மிக்க ஆங்கிலமாய் இந்தியைத் தாங்கள் நினைத்துள்ளது, வேதனைக்குரியதாகும். இந்தியின் உதவியால் தமிழ் உலகப் புகழ் கொள்ளுவது ஒருபோதும் இயலாதென்பது எமது உறுதியான முடிவு.

6. மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் கிஞ்சித்துஞ் சிதைவுறுவது என்று பசு மரத்தாணிபோல் என் மனதில் பதிகிறது! இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?

சமன் செய்து……
கோடாமை சான்றோர்க் கணி. –  குறள் 118

பொய்யாமொழியாரின் இலக்கணப்படி நடுநிலைமையில் நின்று நோக்குவோம். நோககினால் – செந்தணல் சூழ்ந்தால் தாமரை வாடாதென்று கூற இயலுமா? கொடிய நஞ்சு உண்டால் உயிர்போகாது என்பது நீதியாகுமா? இப்படிப் பொய்யுரைக்க நல்ல மனம் கொண்டோர்கள் முன்வருவார்களா? வந்தாலும், அப்படி வருகின்றவர்களின் மனம் எப்படி நல்ல மனமாக நீதியை நினைக்கக்கூடியதாக இருக்க முடியும்?

ஆரியத்தின் வரவால் இனிமை குன்றி – ஆங்லத்தின் ஆட்சியால் உரிமையற்று உருக்குலைந்த கன்னித் தமிழ், ‘அரசாளவரும் இந்தியால் எந்நிலைமை அடையுமே?’ என்றல்லவா மானமுள்ள தமிழ் நெஞ்சங்கள் துடித்தழுகின்றன.. கட்டாய ஆட்சிமொழி இந்தியால் தமிழ் கிஞ்சித்தும் சிதைவுறாது என்பது மலையை முகிலால் மறைப்பது போன்ற பொய்யாகும். புரையோடிய புண்ணுக்குப் புனுகு பூசினால் குணமாகும் என்பது, எமது மனச்சான்றுக்கு ஒவ்வாதது.

7. இறுதியாகத் தாங்களும் இன்னும் சிலரும் வேண்டாத இந்த மொழி விடயத்தில் இறங்கி இந்தி – தமிழ் எனப் பிரித்துப் பேசுவதால் அது ஒரு சில கட்சிகளுக்கு வளர்ச்சியாகவும் நம் இந்தியத் தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாகவும் அமைகிறது என்பதை உணருகிறீர்களா?

தமிழன்பரே! இந்தக் கேள்வியைக் கேட்க. தாங்கள் நன்மனத்துக்கு எப்படித் துணிவு வந்தது என்று வியக்கிறேன்; பெரும் வேதனையும் கொள்ளுகிறேன். பெற்ற தாயினும் மேலான தாய்மொழியைக் காப்பாற்ற முற்படுவது குற்றமென்று கூறாமல் கூறுகின்றீர்களே தாயைத் தெய்வமென வணங்கும் தமிழ் மரபு இதுதானோ? தாயைக் காப்பது தீதென்று குற்றஞ்சாட்டுவது இந்நாட்டு மரபு இல்லையே! இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

‘தாங்களும் இன்னும் சிலரும் வேண்டாத இந்த மொழி’விடயத்தில்’ இறங்கி’ என்று குறைகூறுகின்றீர்கள். வேண்டாத இந்த மொழிப் பொருளை (‘விடயத்தை’( வேண்டிய பொருளாக்கியது (‘விடயமாக்கியது’) யார்? பேராசிரியரும் இன்னம் சிலருமா? தயவு செய்து எண்ணிப் பாருங்கள். இந்தி-தமிழ் என்று பிரித்துப் பேசும் நிலைமையை உருவாக்கியது அரசாங்கம் அல்லவா? தமிழ்-இந்தி என்பதால் ஒரு சில கட்சிகளுக்கு வளர்ச்சியாகும் என்கிறீர்களே, அந்தக் கட்சியாது? தாய் மொழிக்கும் தாய்நாட்டு உரிமைக்கும் உழைப்பதற்காகத்தானே அந்தக் கட்சி இருத்தல் வேண்டும். மொழியும், நாடும் சிறப்புற உழைக்கும் கட்சிகள் வீழ்ந்து, மொழியையும் தாய்நாட்டையும் மறந்து, மானத்தை விற்று, பதவிவெறியில் இழிந்தவர்களின் வெறிக்குப் பணிந்து தந்நலத்தோடு இயங்கும் கட்சிகள் ஓங்க வேண்டும் என்கிறீர்களா? ஓங்குவதாயின் மொழி வளம் பெறுமா? நாடு சிறப்புறுமா? தயவுசெய்து எண்ணிப் பாருங்கள்.

இந்த மொழிப் பொருளால் நம் இந்திய தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாகவும் அமைகிறது என்ற பேருண்மையைக் கூறியுள்ளீர்கள்; மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இப்படியெல்லாம் இந்திய ஒற்றமையைச் சிதறடிப்பதுயார் என்பதே சிந்தனைக் குரியதாகும்.

இந்தியாவில் 14 மொழிகள் நாட்டு மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகும், இந்தி ஒன்றே கட்டாய அலுவல்மொழியாகக்(Official Language) கொண்டது, இந்தி மொழிக்குள்ள தனிச்சிறப்புகளாலா? 2 விழுக்காடு மக்கள் பேசுகின்ற கரிபோலி இந்தியைக், கோசலி, மைதிலி, இராசத்தானி, போச்பூரி ஆகிய தனி மொழிகளோடு கூட்டி மக்கள் தொகையை அதிகமாக்கி மற்ற மொழிகளினின்றும் உயர்த்திக் காட்டும் முழுப்பொய், பிறமொழிகளை மதிப்பதாகுமா? இப்படியொரு துணிந்த சதி, நாட்டு ஒற்றுமையை வளர்க்குமா? 14 மொழிக்குரியவர்களும் பாராளுமன்றத்தில் கூடியிருக்கும்போது, ஆங்கிலத்தில் உரையாற்றினால் கலகம் செய்வதும், இந்தியில் தலைவர் உரை நிகழ்த்தி மற்ற மொழிக்காரர்களைச் செவிடர்களாக்கி அவமானப்படுத்தும் ‘இந்திவெறி’ இந்தியா ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடா? தில்லி அரசாங்கத்தில் பணி செய்ய வேண்டுமானால் இந்தியைக் கற்றே ஆகவேண்டும் என்ற தனியாட்சி முழக்கம், இந்திவெறி பிறர்களை அடிமையாக்கி நாட்டு ஒற்றுமையைக் குலைக்கும் கொடுமை அல்லவா? இதுபோல் எத்தனையெத்தனை நேர்முக வெறிச் செயல்கள்! மறைமுக சூழ்ச்சித் திட்டங்கள், நாட்டுப்பற்றை எரித்துச் சாம்பலாக்க, ‘இந்தி’ அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஒன்றா இரண்டா? அன்பரவர்கள் இவையனைத்தையும் சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். வணக்கம்.

– குறள்நெறி : பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 3-5

thamizh-hindi02