thamizh-hindi02

சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே சில அலுவலகங்களில் அலுவலக நேரத்திலயே இந்திமொழி கற்குமாறு செய்யப்பட்டுள்ளது என்பதுதானே வெளிப்படுகின்றது. நாம் அறிந்தவரையில் மதுரையில் உள்ள இந்திய அரசுத் துறை அலுவலகங்களில் உள்ளோர் அலுவல் நேரத்திலேயே இந்திமொழி பயில்கின்றனர் என்பது உண்மையே. அலுவலகங்களில் பணிபுரிவதற்காக ஊதியம் பெறுவோர் அலுவலக நேரத்தை வேறு முறையில் கழிப்பதற்கு வசதி செய்து கொடுப்பது நல்லாட்சி முறைக்கு ஒத்தது அன்று. பணிமுறை கருதி அளிக்க வேண்டிய ஊதிய உயர்வை வேண்டாத மொழியைப் பயிலச் செய்வதற்காக அளிப்பதும் அடாததாகும்.

‘‘எல்லாத் தேசிய மொழிகளையும் சமநோக்குடன் நோக்குகின்றோம்; இந்தி மொழிக்குரியரல்லார் இந்தி மொழி பயிலுமாறு கட்டாயப்படுத்தப்படமாட்டார்’’ என்று மேடைகளில் முழங்குவதும் செயல் முறையில் அதற்கு மாறாக நடப்பதும் சொல்லும் செயலும் மாறுபடும் பெருங்குற்றத்திற்கு உரியன அன்றோ? சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக பேரரசுத் தலைவர்களே மேற்கொள்ள நேரின் ஏனைய மக்கள் என்னதான் செய்யமாட்டார். ஒழுக்கம் நிலைபெறுவதெங்கே?

இந்திய அரசு இவ்வாறு முறை திறம்பி இந்தி மொழியை விரும்பாதார் மீது சுமத்த வேண்டா. ‘‘இந்திமொழி யறியாத ஊழியரிடம் எவ்வித வேறுபாடும் காட்டமாட்டாது’’ எனக் கூறிய உறுதிமொழி என்னவாயிற்று’ இங்கு, ‘‘மும்மொழிக் கொள்கையே நம் திட்டம்’ என்று கூறித் தமிழ் ஆங்கிலம் இந்தி என்பனவற்றைக் கற்கச் செய்யும் அரசினர், ஏனைய மாநிலங்களில் மூன்று மொழிகள் கற்பதற்கு என்ன செய்துள்ளனர்? இந்தி மொழி மாநிலத்தில் தென்னகமொழியொன்றைக் கற்பதற்கு வசதி செய்தி கொடுத்துள்ளனரா? தென்னகமொழி ஒன்றைக் கற்போர்க்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படுமென்று அறிவிக்கப்படவில்லையே! இங்கு அலுவலகத்தில் உள்ளோர் இந்திமொழி பயில்வதற்கு வசதி செய்து கொடுத்துள்ளதுபோல் அங்குத் தமிழோ பிற தென்னக மொழியோ பயிலுவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளரா? இல்லையே. இந்தி மொழிப் பயிற்சியில் ஆர்வம் காட்டும் நம் தமிழக அரசு, வடக்கே தமிழைப் பயிலச் செய்வதற்குக் கருத்துச் செலுத்தாதது ஏனோ? தென்னாட்டவர்க்குத்தான் மும்மொழித் திட்டம்; வடவர்க்கு இரு மொழித் திட்டம்தான் என்றன்றோ கருத வேண்டியுள்ளது. இத்தகைய பாகுபாடு இந்தி மொழியாரின் தனியாட்சிப் போக்கைத்தானே வெளிப்படுத்துகின்றது. இந்நிலையில் இந்திமொழியாளரும் ஏனைய மொழியாளரும் எங்ஙனம் ஒன்று கூடி வாழ இயலும், இந்திய ஒருமைப்பாடு நிலை பெறுவது எங்ஙனம்?

ஆகவே இந்திய அரசு இவ்வாறு இந்தி மொழிக்கு மட்டும் தனிச் சலுகை காட்டுவதை உடனே நிறுத்தல் வேண்டும்.

அன்றியும், விரும்பாதவரையும் இந்தி மொழியால் பயன்பெறாதோரையும் இந்தி மொழி பயிலுமாறு செய்யும் திட்டத்தையும் உடனே கைவிடுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, திருச்சி அல்லது மதுரை வட்டாரத்திற்குள்ளேயே பணிபுரியப் போகும் அஞ்சல் நிலைய அலுவலர்களை எதற்காக இந்தி மொழி பயிலுமாறு வற்புறுத்தல் வேண்டும். தமிழ் நாட்டை விட்டு அயல் மாநிலங்களுக்குச் செல்லுவோராயிருப்பின் ஆங்கிலம் ஒன்றே போதும். அல்லது எந்த மாநிலத்திற்குச் செல்லுவாரோ அந்த மாநில மொழியைக் கற்குமாறு செய்தால் பயனுண்டு. இந்தி மாநிலத்திற்குச் செல்லுவோரை இந்தி மொழி பயிலுமாறு செய்தால் அதில் பொருளுண்டு. அங்ஙனமணின்றித் தமிழ் மாநிலத்திலேயே பணிபுரிந்து ஓய்வுபெறப் போகின்றவரையெல்லாம் எதற்காக இந்தி கற்குமாறு செய்தல் வேண்டும்?

தமிழ்நாட்டில் பெரும்பாலோர் இந்திமொழி முதன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்; பல்லாயிரக் கணக்கில் சிறை புகுந்த வண்ணம் உள்ளனர். இவற்றையெல்லாம் நோக்காது மேலும் மேலும் இந்தி முதன்மையை வன்முறையாக நிலைநாட்டுவது குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சியாகாது. சொல் வேறு செயல்வேறு என்ற நிலை மாறிட வேண்டும்.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி ஆசிரியருரை

குறள்நெறி:  வைகாசி 19, 1995 / 01.06.1964 பக்கம் 8