(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

19

  தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன்.

‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

            வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39

‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

            கற்றான் கருதிச் சொல்’ 40

‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

            அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41

மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின் தன்மை, நோயின் அளவு, மருத்துவம் செய்வதற்கு ஏற்ற காலம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றோடு பொருந்தச் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். வள்ளுவரின் மருத்துவ நெறிகளை உணர்ந்து, பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறையை வழுவாது பின்பற்றுகிறார். மக்கட்கு உண்டாகும் நோயைப் போக்குவதைத் தம் கடமையாகக் கொள்கிறார். ஊதியம் கருதாது உற்ற நோய் ஆராய்கிறார். மக்கட்குச் செய்யும் தொண்டுகளை மகிழ்வுடன் செய்து வருகிறார். அண்ணனின் இனிய நண்பராகவும் விளங்குகிறார். இராமச்சந்திரன் ‘இராமன் அருள்’ என்ற பெயர் கொண்ட மருத்துவமனைக்குச் சென்றால் நீர் அண்ணனைக் கண்டு மகிழலாம்.

  ‘குறள் நெறி’ குவலயத்தில் பரவுமாயின் குடியெல்லாம் சிறப்புடைவர். எங்கும் அமைதி தவழும். அன்பு ஒளிசெய்யும். போர் முறைகள் ஒழியும். பொய்மைக் கருத்துக்கள் மறையும். செங்கோல் ஆட்சியில் நாடு சீர்பெற்று விளங்கும்.

இதனை,

‘           குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும்

            அமைதி நிலவும் அன்பு தவழும்

            போர்முறை ஒழியும் பொய்மை மறையும்

            செம்மை ஆட்சி சீர்பெற்ற றோங்கும்’42            என்று

கூறுகிறார். தேனினும் இனிய திருக்குறட் பாக்களை தெருவெல்லாம் பரப்பச் செய்வார். உள்ளத்தாலும் உடலாலும் பொருளாலும் இயன்ற வழியெல்லாம் தொண்டு செய்வார். திருக்குறட் கழகம் அமைத்து திங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தித் திருக்குறள் கருத்துக்களை அகம் மிக மகிழக் கூறுவார். நாட்டின் உயர்வுக்கு நாளும் தொண்டு செய்யும் பெரியார் அவர். தமக்கென வாழாதவர். பிறர்க்கென வாழும் பெருமை உடையார்’43 நல்ல உள்ளம் உடையவர். சாதி சமயங்களைக் கடந்தவர். சழக்குடைய அரசியலினின்றும் நீங்கப் பெற்றவர். யாவர்க்கும் இனிய நண்பர். சுருங்கக் கூறின் உயர்குணச் செம்மல் அவர். ஆயினும் அவர் வீட்டில் வைத்திருக்கும் நாட்டுத் தலைவர்களின் படங்களைக் காண்பவர், அவரைப் பழுத்த காங்கிரசு உறுப்பினர் என்று உரைப்பர். தம்மிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையும் பிறர்க்குக் கொடுத்து உதவும் குணத்தைக் காண்பவர் பொதுவுடமை பேசும் கம்யூனிசக்காரர் என்பர். வான்புகழ் வள்ளுவரின் திருக்குறள் பாராட்டும் பான்மை அறிந்தவர். அவரைத் திராவிட இயக்கத்தைச் சார்ந்த திருத்தொண்டர் என்பர்.

  உண்மை மறந்து பொய் மலிந்த இவ்வுலகில் வாழ்வது மிகவும் கொடியது. அன்றியும் மாணவனே! உனக்கு ஒன்று சொல்கின்றேன், கேள். இந்நாள் வாழ்கின்றவர் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று; வீட்டிலே பேசுவது ஒன்று; வெளியில் சென்று பேசுவது மன்றொன்று. கண்டால் பேசுவது ஒன்று. கடந்து சென்றபின் பேசுவது மற்றொன்று; இற்றை உலகில் நேர்மை என்பது இல்லை எனலாம். நிலையான உண்மை உரைப்பாரும் இல்லை எனலாம். அழுக்காறு எனச் சொல்லப்படும் ஆழ்கடல் இவ்வுலகில் மிக உண்டு. ஆசை எனப்படும் கொடிய நச்சரவும் மிக உண்டு. வெகுளி என்று சொல்லப்படும் வெந்தீ மிகுதியும் உண்டு. இன்னாச் சொல் எனப்படும் மிகப்பெரிய ஈட்டியும் உண்டு. தன்னலம் என்ற வலிமை வாயந்தத பேய் இங்கு உண்டு. இவற்றிலிருந்து தப்பி புகழ்பட வாழ்வது அரிது. மிக மிக அரிது. ஆயினும், அண்ணன் அவர்களைத் துணையாகக் கொண்டால் எளிதாய் இயலும். இனிதாய் முடியும் காரணம் அண்ணன் துறவியின் உள்ளத்தையும் தொண்டர்தன் பணியையும் தமதாகக் கொண்டுள்ளார். எல்லார்க்கும் நன்மை பயக்கும் பணிவும், பலரும் புகழும் இச்சொல்லும் பெற்று விளங்குகிறார். தமக்கு வரும் இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றெனக் கருதும் 44 உயர்ந்த ஒழுக்கத்தைக் குறைவிலாது தமக்கெனப் பெற்று வாழ்கிறார். மணிவிழாக் கொண்டாடும் அறுபதாம் அகவை அடைந்துள்ளார். பெருமைக்குரிய பண்புகள் பல பெற்று உள்ளார். அரசரும் அமைச்சரும் அறிஞரும் புலவரும் புகழுரை வழங்கிப் போற்றிடும் சிறப்பினை எய்தியுள்ளார்.

அறுபது ஆண்டைக் அடைந்தவர் இன்னும் அறுபது ஆண்டுகள் இனிதே வாழ்க. இந்த உலகம் வள்ளுவர் நெறியில் வாழ வழிகாட்டும் அவர் கனவெல்லாம் நினைவாகட்டும். பல்கலைகளைத் தோற்றுவித்த வள்ளல், மன்பதை போற்றும் அரசர் அண்ணாமலை போல் எல்லையில்லாத புகழ் பெற்று என்றும் வாழ்வாராக! இனிதே வாழ்வாராக! நன்றே வாழ்வாராக! நாடெல்லாம் வாழ்வாராக!

இக்கவிதை தூய தனித் தமிழ்ச் சொற்களால் பாடப் பெற்றுள்ளது. சங்கச் செய்யுள் போல் அகவற்பா நடையில் அமைந்துள்ளது. எவ்வளவும் பிறமொழிச் சொற்கள் கலக்காதது. எளிய சொற்றொடர்கள். பொருள் எளிதாய் இனிதாய் விளங்குகிறது. அறிந்த உவமைகள் ஆயினும் அறிய கருத்துக்கள் நிறைந்தது. வள்ளுவர் நெறியை வையகத்தில் நிலைக்கச் செய்யும் ஆற்றல் சான்றது.

குறிப்புகள்:

  1. திருவள்ளுவர் திருக்குறள் ‘மருந்து’ குறன்-948
  2. திருவள்ளுவர் திருக்குறள் ‘மருந்து’ குறள்-949
  3. திருவள்ளுவர் திருக்குறள் ‘மருந்து’ குறள்-950
  4. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,

அ-ள் 140-143

  1. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநானூறு

செ.எ. 182, அ-ள் 9-10

  1. கணியன் பூங்குன்றனார், புறநானூறு, செ.எ. 192,

அ-ள் 1-6.

(தொடரும்)

ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20)