இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்
பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு
இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து அதுவும் நிலைக்காமல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கியது – இப்படிப் பல்வேறு செய்திகளை இதில் எழுதியுள்ளார்.
1975 – 2000 காலப் பகுதியில் தஞ்சையிலும் அதைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களிலும் நிலவிய சூழல் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலரை எனக்குத் தெரியும் சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தன்னிடம் அன்புகாட்டாத பெற்றோர், சொந்த வீட்டில் தான் பட்ட இன்னல்கள், வறுமை – எனத் தன் இளம் பருவக் காலத்தை அவர் விவரித்திருப்பது நெகிழச் செய்கிறது. இளம் பெண்ணாக, தாயாக, குடும்பத் தலைவியாக அவர் எதிர்கொண்ட அறைகூவல்கள் பலப் புதினங்களை எழுதும் அளவுக்கு இருக்கின்றன.
அவ்வப்போது காலத்தை எதிர்த்துப் போராடியவராகவும் பெரும்பாலும் காலத்தால் இழுத்துச் செல்லப்படுபவராகவும் இலட்சுமி அம்மாள் தெரிகிறார். சமூகத்தின் மைய நீரோட்டத்தில் கலக்காமல் செயல்படும் இடதுசாரிச் செயல்பாட்டாளர்களிடம்கூட பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை இந்த நூல் தொட்டுக்காட்டுகிறது.
இந்த நூலில் பேசப்படும் தலைமறைவு வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகளால் ஏவப்படும் வன்முறை முதலான செய்திகள் வேறு தன்வரலாற்று நூல்களில் காணக்கிடைக்காதவை.
“பெ.ம விகடன் இதழ் வாங்கி வருவார் அதில் திருமாவேலன், கவின்மலர் கட்டுரைகளைப் படிப்பேன். தமிழர் இனம் வென்றுவிடும் என்று தோன்றும்” என்ற இலட்சுமி அம்மாவின் நம்பிக்கையைப் படித்தபோது வியப்பாகவும் பயமாகவும் இருந்தது.
இலட்சுமி அம்மாவின் பட்டுணர்வுகளை எங்கெங்கு விரிவாகப் பதிவுசெய்ய வைக்கலாம் என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களில் இன்னும் விரிவாகப் பதிவுசெய்யச் சொல்லியிருந்தால் இந்த நூல் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கும். அவரைக் கள்ளம் கபடமில்லாத வெள்ளந்தியான பெண்ணாகக் காட்டுவதைத்தான் பதிப்பாளர்கள் விரும்பினார்களோ என்னவோ. அதனால் சில இடங்களைத்தவிர பெரும்பாலான இடங்களில் செய்திகளின் கோவையாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
“உழைப்பு , பராமரிப்பு, உறவுப் பிணைப்பு – இவற்றை ஆதாரமாகக்கொண்டு விரியும் வாழ்க்கைப் பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவாகும்” என இந்த நூலின் முன்னுரையில் வ.கீதா குறிப்பிட்டிருக்கிறார். அதை வழிமொழிகிறோமோ இல்லையோ இது வாசிக்கப்படவேண்டிய ஒரு நூல்தான் என்று உறுதியாகக் கூறலாம்.
-இரவிக்குமார்
Leave a Reply