ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2
ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!
தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன் என எத்தனைப் போராளிகள் தம் இன்னுயிரைத் தாய்நாட்டிற்காக இழந்து வருகின்றனர். ஆகவே, பொதுவான பெயர் வைக்க வேண்டும் என எண்ணயதாலும் பெண்குழந்தைதான் பிறக்கும் என நம்பியதாலும் ஈழமலர் எனப் பெயர் கருவிலேயே சூட்டப்பட்டு வளர்ந்த குழந்தை. எங்கள் அம்மாவின் பெயர் மலர்க்கொடி. எனவே, மலர் எனப் பாட்டியின் பெயரையும் தன்மானமிக்கவர்கள் வாழும் ஈழத்தின் பெயரையும் இணைத்து ஈழமலர் என அதற்கு முன் யாரும் சூட்டாத பெயராகச் சூட்டினேன்.
மகளைப் பார்க்க மகிழ்ச்சியுடன் மதுரை சென்று மருத்துவமனைக்குச் சென்றதும் செவிலியர்கள், குழந்தையைப் பார்த்துவிட்டு உடனே திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்கள். மகளுடன் தந்தை இருப்பதற்கு மகள் பெற்ற மகிழ்வுடன் உள்ள தாயாகிய மனைவியுடன் இருப்பதற்கு மருத்துவர் தடைசொல்ல எப்படி இயலும்? என மறுத்து உடனிருந்தேன். மருத்துவர் வந்தபொழுது ஒளிந்து கொள்ளுங்கள் என விரட்டினார்கள். உள்ளறைக்குச் சென்ற நான், மருத்துவர் வந்து பார்த்ததும் வெளியே வந்து மருத்துவர் சிவகாமசுந்தரி அவர்களைப் பார்த்தேன். “நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா” என்றார். “ஆமாம். ஆனால் தடையாணைபோட்டு விரட்டுகிறார்களே” என்றேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பாலும் சிற்றூர் மக்கள்தான் இங்கு வருகிறார்கள். அவர்கள் குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் கூட்டம் கூட்டமாக வந்து விடுகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்தவே இப்படி ஒரு விதி., நீங்கள் இருக்கலாம்” என்றார்கள். ஈழமலர் எனப் பெயர் சூட்டியமைக்கும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். இதனைக் குறிப்பிடும் காரணம், மகப்பேறு மருத்துவர் சிவகாமசுந்தரி அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்தல் வேண்டுமல்லவா? அதனால்தான். “இன்று மனைவி அன்புச்செல்வி பிறந்தநாள் என்றதும் , அடடா, முன்னரே சொல்லியிருந்தால், மகப்பேற்றினை இன்றைக்கு வைத்திருப்பேனே” என்றார். “அதெல்லாம் எதற்கு? இயற்கையான மகப்பேறு போதும்”. என்றேன். ஆனால், அவ்வாறு அமைந்திருந்தால் தமிழ்த்தேசியப் போராளி வீரமிகு பிரபாகரன் பிறந்தநாளில் மகளும் பிறந்த மகிழ்ச்சி இருந்திருக்கும் எனப் பின்னர் உணர்ந்தேன்.
வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் மொட்டைமாடிக்குத் தூக்கிச் சென்று பறவைகள் முதலானவற்றைக் காட்டியதும் “அதற்குள் குழந்தையை இவ்வாறு தூக்கி வரலாமா” என்றதற்கு “இயற்கைச்சூழல் குழந்தைக்குத் தேவை” என்றதும் பசுைமையாய் நினைவில் பதிந்து விட்டன.
ஈழமலர் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நற்பண்புகளுடனே வளர்ந்தாள். பேராசையோ பிடிவாதமோ இல்லாக் குழந்தையாக இருந்து மகிழ்ச்சி தந்தாள். கடைக்குச் செல்லும்பொழுது ஏதேனும் பொம்மையைப் பார்த்து விருப்பம் ஏற்பட்டால் “நான் தொட்டுப் பார்த்துக் கொள்ளவா” என்று கேட்பாள், வாங்கித் தருகிறோம் என்றால், இல்லை நான் தொட்டுப்பார்த்துக்கொள்கிறனே் போதும் என்றாள். அவளைப் பொருத்தவரை “பெற்றோர் வாங்கித்தருவன போதும். பிற வேண்டா” என்ற எண்ணம் ஊன்றிவிட்டது.
தாலாட்டும்பொழுதும் நடக்கத் தொடங்கியதும் நடத்திக் கடைக்கு அழைத்துச் செல்லும் பொழுதும் தமிழ்ப்பாடல்களையும் வாய்ப்பாடுகளையும் சொல்லுவேன். காக்கா வடை கதை சொன்னால், நரி ஏமாற்றியதாகச் சொல்லாமல் நரி கேட்டதும் பகிர்ந்து தந்ததுபோல் சொல்லுவேன். இப்படிப்பட்ட கதைகளை இப்பொழுது பார்க்கின்றேன். ஆனால், அப்பொழுதே பகுத்தறிவிற்கும் பண்பிற்கும் ஏற்றவாறு கதைகளை மாற்றிச் சொன்னேன். பாடலாக இருந்தால்,
கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
புத்தகம் வாங்கலாம் கைவீசு
நன்றாய்ப் படிக்கலாம் கைவீசு என்பதுபோல் அல்லது
பள்ளிக்குப் போகலாம் கைவீசு
பாடம் படிக்கலாம் கைவீசு
பண்பாய் வளரலாம் கைவீசு
பாருக்கு உதவலாம் கைவீசு
என்பதுபோல் மாற்றிச் சொல்வேன்.
மனைவி திருக்குறள், ஆத்திசூடி முதலானவற்றைச் சொல்லித்தர எளிதில் உள்வாங்கிக் கொண்டு திரும்பச் சொல்லும்.
இப்படி எல்லாத் தந்தையர்க்கும் இருக்கும் நினைவுகள் மிகுதி. என்றாலும், இனி, வளர்பருவ நிகழ்ச்சிகள் சிலவற்றைப்பற்றி மட்டும் குறிப்பிட விழைகிறேன்.
மழலையர் வகுப்பில் இருந்து நேரடியாக மூன்றாம் வகுப்பில் அல்லது இரண்டாம் வகுப்பில் சேர்ப்பதாக அவள் பயின்ற பழனி-மீனா பள்ளித் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். தாயிடம் மூன்று அகவையிலிருந்தே பாடம் படித்ததால் இந்தச் சிறப்பு. என்றாலும் இயல்பாகப் படிக்கட்டும் என்று விட்டுவிட்டோம் இங்கும் பின்னர் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். மேனிலைப்பள்ளியில் கல்வி தொடர்ந்தபொழுதும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் படிப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றும் ஆசியர்களின் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்தது மகிழ்ச்சிக்குரிய நினைவுகள்.
என்றாலும் பள்ளி சேர்ந்த நாள் முதல் அடிக்கடி அவளிடம் கேட்கப்படும் கேள்வி, “நீ, இலங்கை அகதியா” என்பது? இதே கேள்வியை மகன் ஈழக்கதிரும் சந்தித்து வருகிறான். இப்பெயர் இருவருக்கும் பணி வாய்ப்புகளில் இடையூறும் தருகின்றன. (ஒருவர் மட்டும் இந்தப் பெயருக்காகவே கேள்வி எதுவும் கேட்டகாமல் பணி வழங்குகிறேன் என்றார்.அப்பணி அடுத்த ஆண்டே வடமாநிலத்திற்கு மாறுதலாகும் என்றதால் சேர இயலவில்லை.) ஆனால், இப்பொழுது இருவருக்குமே தமிழர்களின் தாயகமாம் ஈழத்தைப்போற்றும்வகையில் சூட்டிய பெயர் என மகிழ்ச்சியுடன் கூறும் நிலை வந்துவிட்டது. ஆனால், இப்படிப்பட்ட கேள்வியே இவ்விருவரிடமும் ஈழம்பற்றிய சிந்தனையை வளர்த்தது எனலாம்.
சென்னையில் தமிழ்வழிப்பள்ளியில் கல்வியைத் தொடர எண்ணி மயிலாப்பூரில் குடிவந்து, தூய இரஃபேல் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் கேட்டால் திசம்பரிலேயே விண்ணப்பங்களை வழங்கி மாணாக்கர் சேர்ககையும் முடித்துவிட்டோமே என்றனர். மதுரையில் முந்தைய கல்வியாண்டு இறுதியில் சேர்க்கையை முடித்துவிட்டோம் எனக்கூறி முதன்மைக்கல்வி அலுவராக இருந்த நண்பர் திரு ஆ.பெருமாள்சாமி அவர்கள் பரிந்துரைத்த பின்னர்தான் விண்ணப்பம் தந்தனர். இப்பொழுதும் அதே நிலை.(பின்னர் தேர்வாணைய உறுப்பினரான முனைவர்) பெருமாள்சாமி பள்ளிக்கல்வித் துணை இயக்குநராக வந்திருந்தார். “ஈழமலரைப்பள்ளியில் சேர்த்தால் உங்கள் பள்ளிக்குப் பெருமை” என அவர் கூறிய பின்னர், விண்ணப்பம் தந்து ஆறாம் வகுப்பில் சேர்த்தனர்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டு முதலானவற்றில் பரிசுகள் பெற்றும் நாடகங்களில் பங்கேற்றும் சிறந்த மாணவியாக வளர்ந்த நினைவுகள் இப்பொழுதும் மகிழ்ச்சி தருவன. 7-ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே மாநில அளவிலான கட்டுரைப்போட்டியில் முதல்பரிசு பெற்று அப்ப்போதைய முதல்வர் கலைஞரிடம் பரிசு பெற்றாள். அப்பொழுது வெளியூரில் இருந்த நான், மாநில அளவுப்போடடி என்பதும் முதல்வரால் பரிசு பெறப்போகிறார் என்பதும் தெரிந்திருந்தால் என் பணியை மாற்றி வைத்திருந்திருப்பேன்.
பள்ளி மாணவப்பட்டிமன்றங்களில் அணித்தலைவராக இருந்து சிறப்பாக உரையாற்றிப் பிற மாணவியர் நன்மதிப்பையும் பெற்றாள். இத்தகைய பட்டி மன்றம் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வெடிவகைகள் செய்வதால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் எனப்பேசி வெற்றி பெற்றாள். சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருக்கக் கூடாது என அதுமுதல் வெடிவகைகளை வெடிப்பதில்லை. தமக்கையைப்பின்பற்றிய தம்பி ஈழக்கதிரும் வெடிப்பதில்லை. இந்த மன உறுதியும் வாய்மை உணர்வும் என்றும் போற்றற்குரியன அல்லவா?
சிறுவர் மன்றம் மூலம், மிடற்றிசை(பாடல்), வீணை, விசை இசை(key-board), கைவினைக்கலை, ஓவியக்கலை முதலான பல்வகை கலைகளைப் பயின்றாள். எனவே, புதுதில்லி முகாமிற்குச் சென்றபொழுது தில்லித்தமிழ்ச்சங்கத்தில், விசை இசை மூலம் தமிழ்ப்பாடல்களைப் பயிற்றுவிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இந்தி மாணாக்கர்களும் அவள்மூலம் தமிழ்ப்பாடலிசைகளை ஆர்வமுடன் கற்றனர்.
தேசியச் சிறுவர் மன்றம் மூலம் ஆண்டுதோறும் சிறாருக்கு இளந்திரு விருது வழங்கப்பெறுகிறது. (பாலசிரீ அவார்டு என்று சொல்வதை நான் ‘இளந்திரு விருது’ என மாற்றினேன். இப்பொழுது உள்ளோர் ‘பாலசிரீ’ என்றே சொல்கின்றனர்.) அதற்கான போட்டிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டியவள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பெற்றாள். காத்திருப்புப் பட்டியலில் இருந்து அனுப்பும் சூழல் வந்த பொழுது பட்டியலில் இல்லாத சிறுமியை அனுப்பி வைத்தனர். பொறுப்புஅதிகாரியின் செயற்பாட்டை என்னிடம் பிற ஆசிரியர்கள் வந்து சொன்னார்கள். . அந்த அதிகாரி அவருடைய மகனுக்கு முறைகேடான முறையில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகப் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். அப்படி ஓர் அவப்பெயர் வரக்கூடாது என்பதால், நான் விட்டு விட்டேன் . ஆனால், தென்னக முகாமிற்கு வந்த இயக்குநர் ஈழமலரை அனுப்பினால் படைப்புத்திறனில் விருது கிடைத்திருக்குமே ஏன் அனுப்பவில்லை என்ற பொழுது நான் துறையில் இருப்பதால், அனுப்பவில்லை என்றேன். வேண்டுமென்றே வாய்ப்பு பறிக்கப்பட்டதை நான் கூறவி்ல்லை. ஆனால்,. குடியரசுத் தலைவர் கையால் பெற வேண்டிய விருது கிடைக்கவிடாமல் செய்யப்பெற்றது வருத்தம்தான்.
மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகின்றேன். கட்டுரைப்போட்டி ஒன்றுநடத்தப் பெற்றது. அதில் ஈழமலர் எழுதிய கட்டுரையை நடுவர் தனியாக வைத்து விட்டார். என்னுடைய மகள்தான் ஈழமலர் எனப் பொறுப்பு அதிகாரி கூற முயன்றார். தடுத்துவிட்டேன். பின்னர் முடிவு அறிவித்த பொழுது ஈழமலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “நடுவரிடம் திருத்தும் பொழுது ஒரு கட்டுரையைத் தனியே வைத்துவிட்டீர்களே! ஏன்?” எனக் கேட்டேன். “அடடா மறந்துவிட்டேன். மிகவும் சிறப்பான நடையில் நல்ல கருத்துகள் அமைந்த கட்டுரை. இதனைப்பற்றிக் குறிப்பிடவேண்டும் என எண்ணியிருந்தேன். மறந்துவிட்டேன். அந்த மாணவிக்குத்தான் முதல் பரிசு அளிக்க வேண்டும். தவறு நடந்து விட்டது”. என்றார். அப்பொழுது உடனிருந்த அதிகார் “ஈழமலர் இவர்மகள்தான்” என்றார். “அதனால்தான் நீங்கள் இப்பொழுது முடிவை மாற்றக்கூடாது. தகுதியின் அடிப்படையில் வழங்கப்பெற்றதாக இல்லாமல் வாங்கப்பட்ட பரிசாகப் பிறர் எண்ண வாய்ப்பு உள்ளது” என்றேன்.
“நான் கட்டுரையை வாசித்துக் காட்டித் தவறு நேர்ந்ததைக் கூறுகிறேன்” என்றார். “வேண்டா. கட்டுரை ஆர்வமும் திறனும் வளரவேண்டும் என்றுதான் போட்டியில் பங்கேற்க வைத்தேன். நான் படிக்கும் பொழுதும் இதுபோன்ற வாய்ப்பு இழப்புகளைச் சந்தித்துள்ளேன். விட்டு விடுங்கள்” என்றேன். அதுபோல்தான் பட்டியலில் இருந்தும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதும் அதன் பின்னரும் பட்டியலில இல்லா ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டும் பரிசு அல்லது விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம், அவை வழங்கப்பட்ட பின்னர் தவறான எண்ணம் எழுந்தால் நேரும் வருத்தத்தைவிடச் சிறந்தது என அமைதி காத்த சூழல் பன்முறை வந்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஆசிரியர்களும் மாணவத்தோழிகளும் கூறியதற்கிணங்க பள்ளி மாணவ உதவித்தலைவர் தேர்தலில் போட்டியிட்டாள். முதலிடம் பெற்றாலும் நிருவாகம் கிறித்துவமாணவி வரவேண்டும் எனக்கூறி ஆசிரியவாக்குகள் அடிப்படையில் இரண்டாவதாக வந்த மாணவி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதற்கு அடுத்து மேனிலை வகுப்பு பயிலும் பொழுது மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதலிடம் பெற்றாள். இமமுறையும் நிருவாகத்தினர் அதே பல்லவியைப் பாடினர். ஆனால், முதல்வரும் ஆசிரியர்களும் மிகக் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்ததாலும் முதல்முறை அநீதி இழைத்ததுபோல் சிறந்த மாணவிக்கு மீண்டும் அநீதி இழைக்கக்கூடாது என்றதாலும் பள்ளி மாணவத்தலைவியாக வெற்றி பெற்றதை அறிவித்தனர். நிருவாகத்தினருக்கு எதிராக உண்மைக்கு வாதாடிய அவ்வாசிரியப் பெருமக்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். இப்பொறுப்பிலும் சிறப்பாகக் கடமையாற்றிய மகள் என்பது இப்பொழுதும் மகிழ்ச்சிக்குரியதே!
“மகள் ஈழமலர் மங்காப்புகழுடன் பொங்கும் சிறப்புடன் நூறாண்டு வாழ்க!” – இதுவே என் வாழ்த்து. என்றாலும் வாழ்த்த வரும்பொழுது நினைவுகளும் உடன் வருவதால் அவற்றைப் பகிர்கின்றேன் ;இந்நினைவுகள் ஒரு வகை வாழ்த்தாக அமைவதால், மேலும் சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
(தொடரும்)
தொடரும் வாழ்த்துடன் அப்பா இலக்குவனார் திருவள்ளுவன்
ஆம், இதே நாளில், நண்பகலில், எதிர் வீட்டு தொலைபேசிக்கு மதுரையிலிருந்தது வந்த தகவலினை, அண்ணன் பணிபுரிந்த இடமான சைதாப்பேட்டைக்கு சொல்வதற்காக சென்றேன். அப்பொழுது, அண்ணா நகரில் ஓ பிளாக்கில் வீட்டில் இருந்தேன். அங்கிருந்து, அண்ணன் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது மதிய உணவு வேளையாகி விட்டது. மகள் பிறந்த மகிழ்ச்சியினை கேட்ட அண்ணன் மதிய உணவாக, சைதை உணவு விடுதி ஒன்றில், பிரியானி விருந்தளித்தார். பின்னர், அண்ணன் மதுரைக்கும், நான் அண்னா நகருக்கும் கிளம்பினோம்.
பின்னர், பல வருடங்கள் கழித்து, பெரிய அண்ணி அவர்களின் மறைவினை முன்னிட்டு, தோழர் தியாகுவின் தமிழ் பள்ளியில்,பிள்ளைகளுடன் உணவருந்துதல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அப்பொழுதும், தோழர் தியாகு அவர்கள் தனது மகளுக்கு திலீபா என்று பெயர் சூட்டியிருப்பதை அண்ணன் சுட்டிக்காட்டினார்.
அண்ணன், ஈழமலரை தமிழாக வளர்த்த பாங்கிற்கு ஒர் சிறிய உதாரணம், அண்ணா நகர் வீட்டில், மலர் மழலையாக பேசும் பொழுது, ஒர் நாள், மொட்டை மாடியில் அதனை தூக்கி வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, ஆகாயத்தில் பறந்த விமானம் ஒன்றினை, எல்லாப் பிள்ளைகளிடமும் கூறுவது போல, பாப்பா, அதோ ஏரோபிளேன் பறக்கிறது பார், என்று கூறினேன். அது, சொன்ன பதில்தான், வள்ளுவன் அண்ணன், தமிழுக்காக மட்டுமல்ல, தமிழாகவே வாழ்கிறார் என்பதன் சான்று. ஏரோபிளேன் என்று காட்டிய எனக்கு, ” இல்லை சித்தப்பா, அது விமானம்” என்று தமிழில் ஈழமலர் என்னை திருத்தியது. இன்றும், அதே தமிழாக வாழும் மலருக்கு எனது வாழ்த்துகள்.
இப்படிப்பட்ட குழந்தைகள் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. உடன்பிறவாத் தங்கைக்கு நானும் என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்!