தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, கனடா,  ஆகிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் விழா அட்டோபர் – நவம்பரில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் செட்டம்பர் முழுநிலவு நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை அன்று அறுவடை விழா கொண்டாடப்படுகிறது.

இலையுதிர் இடைக்காலத் திருவிழா அல்லது இடை-இலையுதிர்காலக் கொண்டாட்டம் (Mid-Autumn Festival) என்பது சீனா, வியத்துநாம், தைவான் ஆகிய நாடுகளில் அவர்களது நாட்காட்டியின்படியான எட்டாம் மாதம் முழுநிலவன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

எபிரேயர்களின் நாட்காட்டியின்படி 7 ஆம் மாதம் – செட்டம்பரின் கடைசி முதல் அட்டோபர் கடைசி வரை – கூடாரத் திருவிழா (Sukkot)/ குடில்கள் விழா (Feast of Tabernacle) எனக் கொண்டாடப்படும் விழாவை அறுவடை விழா என்றே அழைக்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சரவாக்கு (Sarawak) மாநிலத்திலும் இந்தோநேசியாவில் உள்ள மேற்கு கலிமந்தன் மாகாணத்திலும் (West Kalimantan) உள்ள தயாகர் (Dayak) மக்களால் கொண்டாடப்படும் தயாகர் கயவாய் (Gawai Dayak) விழா மே 31, சூன் 1 ஆகிய நாள்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை அறுவடைக்கான நன்றியறிவிப்பு விழா என்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சபா மாநிலத்தில் (state of Sabah) மேத் திங்கள் நடைபெறும் காமடன் (Kaamatan) அல்லது பெசுட்டா காமடன் (Pesta Kaamatan) என்பது அறுவடைத் திருவிழாவாகும்.

கடையவன் விழா (Kadayawan Festival) என்பது பிலிப்பைன்சில் உள்ள தாவோ (Davao) மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைக்காக இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

மியான்மியரில் இயோமி (Zomi) மக்களால் கொண்டாடப்படும் கெளதோ (Khuado) விழா என்பது அட்டோபரில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவாகும். மேப்பூக்கள் விழா (Flores de Mayo) என்பது மேத்திங்கள் பிலிப்பைனில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

மெகிரெகன் (Mehregān) அல்லது மித்திரா (Mithra) திருவிழா என்பது பெருசியர்களின் அறுவடைத் திருவிழாவாகும். மெஃகர் திங்களில் (Mehr month) மெஃகர் நாளில் (Mehr day) நடைபெறும் அறுவடையை ஒட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நடைமுறை ஆண்டில் இது 196ஆவது நாளாக அமைகிறது.

நைசீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் வாழும் பழங்குடி மக்கள் இயரபா (Yaraba) அல்லது இயொருபா (Yoruba) எனப்படுகின்றனர். இவர்களின் மொழியில் அறுவடை என்பது இக்கோர் (Ikore) எனப்படுகிறது. அறுவடை நாளை இக்கோர் விழா எனக் கொண்டாடுகின்றனர்.

கானாவில் உள்ள மக்களால் மேத்திங்கள் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஓமோவோ (Homowo) எனப்படுகிறது. கா (Ga) மொழியில் Homo  என்றால் பசி என்றும் wo என்றால் துரத்து என்றும் பொருள். அறுவடையின் பயன் பசியை விரட்டுவதுதானே!

முன்பு சுவாசிலாந்து (Swaziland) என அழைக்கப்பெற்ற எசுவாத்தினி (Eswatini) நாட்டினர் கோடைக்காலத்தில் கதிரவனைப் போற்றிக் கொண்டாடும் முதல் விளைச்சல் விழா இனக்குவாலா (Incwala) எனப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக நைசீரியாவிலும் கானாவிலும், ஈபோ (Igbo) மக்களால் ஆகத்துத் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது புது இனிப்புருளை விழா (New Yam Festival). யாம் என்பதை இனிப்பு உருளைக்கிழங்கு எனலாம். அறுவடையின் முடிவையும் அடுத்த பயிரிடலுக்குத் தொடக்கத்தையும் சிறப்பிக்கும் வகையில் இந்த  இனிப்புருளை விழா கொண்டாடப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி இனங்களுள் ஒன்றாகிய இயூலு (Zulu) மக்களால் திசம்பரில் கொண்டாடப்படுவது அறுவடைத் திருவிழாவாகிய சுரைக்காய் விழாவாகும் (உம்கோசி வோக்குவேசுவமா – Umkhosi Wokweshwama). இப்பொழுது இதனை உம்கோசி ஓசெல்வா (Umkhosi Woselwa) என்கின்றனர். முதலில் விளைந்த கனியை இறைவனுக்குப் படைப்பது இதன் சிறப்பியல்பாகும்.

கொரியாவில் சூசெயோக்கு (Chuseok) என அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அங்காவி (hangawi) எனவும் இதனை அழைக்கின்றனர். வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் இதனை 3 நாள் விடுமுறை அளித்துச் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

தங்கமயேங்கு (Dongmaeng) என்பது கொரியாவில் கூதிர்ப்பருவத்தில் கொண்டாடப்படும் உழவர்களின் பழமையான நன்றி அறிவிப்பு விழாவாகும். நீநமே சாய் (Niiname-sai) அல்லது சிஞ்சோ சாய் (Shinjō-sai) / நீநமேனொ மத்தூரி (Niiname-no-Matsuri) என்று அழைக்கப்படுவது சப்பானியர்கள் கொண்டாடும் அறுவடையின் பொழுதான நன்றி அறிவிப்பு விழா.

முன்பு 11 ஆவது மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்ட இந்த விழா இப்பொழுது நவம்பர் 23 என வரையறுக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. இது தேசிய விடுமுறை நாளாகும்.

துருக்குமெனித்தானில் நவம்பர் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அசில் தாய் (Hasyl toýy), இசுரேலில் கவ்வெளட்டு (Shavuot), சியார்சியாவில் அலெவெரதோபா (Alaverdoba), இரத்துவெளி (Rtveli), பெலரெசு குடியரசில் (Republic of Belarus) பெகாச்சு (Bagach), சுவிட்சர்லாந்தில் பிரான்சு பேசுவோரிடையே பேனிக்கோன் (Bénichon), நெதர்லாந்தில் நவம்பர் முதல் புதன்கிழமை, பயிருக்கும் உழைப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் விழா (தனக்கடகு ஊர் இயீவாசு என் அருபெயிடு-Dankdag voor Gewas en Arbeid)  என அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும், போலந்து, உக்கிரெயின், உருசியா, செருமனி, ஆத்திரியா, உருதென்பச்சு (Urdenbach), அல்பேனியா, ஐசுலாந்து, ஐக்கிய இங்கிலாந்து எனப் பல நாடுகளிலும் அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாறு உலகெங்கும் அறுவடைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் என்னவாக இருக்கும்? உலகம் நிலப்பெயர்வுகளுக்கும் கடல்கோளுக்கும் முன்னர் ஒன்றாகத்தான் இருந்துள்ளது. அதன் பின்னர்தான் இயற்கை அழிவுகளால் சிதறிப்போனது. அவ்வாறு ஒன்றாக இருந்த தொன்மக்கள் கொண்டாடிய அறுவடை விழா, சிதறிய பின்னரும் எச்சமாக அந்தந்த நிலப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் தாய் நிலமான இந்தியத் துணைக்கண்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதுபோல் தமிழர் நிலமான இலங்கையிலும் ஈழத்திலும் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, இரீயூனியன், கனடா, ஆத்திரேலியா, முதலிய பல நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடடுக்கூறுகளில் நெருங்கிய தொடர்புடைய இந்தோநேசியா, சப்பான், சீனா, கொரியா, முதலான ஆசிய நாடுகளிலும் பொங்கல் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சுரபி (அச்சயதிருதி அல்லது அகுதி அல்லது அகு தீசு எனப்படும்) விழா சித்திரைத் திங்களில் வட மாநிலங்களில் – குறிப்பாக – குசராத்து, மகாராட்டிரம், மத்தியபிரதேசம், இராசசுதான், கோவா, கொங்கன் ஆகிய மாநிலங்களில் இந்துக்களாலும் சமணர்களாலும் கொண்டாடப்படுகிறது.

உலோகரி (Lohri) பஞ்சாபு, தை 13 அன்று அரியானாவில் கொண்டாடப்படும் (கோதுமை) அறுவடைத் திருவிழா.

மாக பிகு (போகலி பிகு /Magh Bihu or Bhogali Bihu) தை 14, 15-இல் அசாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா. தை மாதம் அசாம் நாட்காட்டியில் மாக (Magh) எனப்படுகிறது. எனவே, இதுவும் தைத்திங்கள் விழாதான்.

நெளகாய் (Nuakhai) அல்லது நெளகாய் பரபு (Nuakhai Parab) அல்லது நெளகாய் பெடகட்டு (Nuakhai Bhetghat) என்பது அசாமில் கொண்டாடப்படும் வேளாண் திருவிழாவாகும். அசாம் நாட்காட்டியின் படியான பத்தரபடா/பத்திரபா (Bhadrapada/Bhadraba) மாதங்களில் அஃதாவது ஆகத்து-செட்டம்பரில் நடைபெறும் விழாவாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மணிப்பூர் மாநிலத்திலும் குக்கி-சின்-மிசோ (Kuki-Chin-Mizo) குழுவினரிடையேயும் நவம்பர் முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடை விழாவே குடு (Kut) விழாவாகும்.

கருநாடகாவிலும் கேரளாவிலும் உள்ள துளுவ மக்கள் கொண்டாடும் அறுவடை விழா தீபொலி  பரபா (Deepoli Parba).  அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள அபதனி (Apatanis) மக்களால் சூலை 4 முதல் 7 வரை கொண்டாடப்படும் அறுவடை விழா திரி (Dree) எனப்படுகிறது.

மகாராட்டிரா, கருநாடகா, கோவா மாநிலங்களில் உள்ள மராத்தி மக்களால் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுவது குடி படவா என்னும் வேளாண் விழா. இப்பொழுது இதைத் தீபாவளிபோல் கொண்டாடுகின்றனர்.

வங்காளத்தில் நபன்னா (Nabanna), கேரளாவில் ஓணம், ஆந்திரம், தெலுங்கானா, கருநாடகாவில் உகாதி, கேரளா, கருநாடகாவில் விசு, மும்பையில் அகெரா (Agera – நன்றி கூறும் ஞாயிற்று விழா), கா பொம்பலாங்கு நாங்கிரீம் (Ka Pomblang Nongkrem) ஆகியன, மேகாலயாவிலும் அசாமிலும் வங்கலா (Wangala), அரியானா, பஞ்சாபில் பசந்து பஞ்சமி (Basant Panchami), இலடாக்கு (Ladakh), இயன்சுகார் (Zanskar), கார்கில் (Kargil) ஆகிய பகுதிளில் இலடாக்கு அறுவடை விழா, பஞ்சாபு, அரியானாவில் பைசாக்கி (Baisakhi) என இந்தியாவெங்கும் அரியானா அறுவடைத் திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

முந்தைய நாவலந்தீவாகிய இன்றைய இந்தியாவில் முன்னர் தமிழ் மக்களே பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தமையால் அறுவடை விழா  இந்நிலப்பகுதி எங்கும் உள்ளது.  எனினும் காலப்போக்கில் அந்நதந்த மாநில அறுவடைக் காலத்திற்கேற்ப அறுவடை விழா  நாள் மாறியுள்ளது. எனவே, பொங்கலின் தாய்நிலம் தமிழ் நிலம் எனலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ் 15.01.2021 10 : 55காலை

 

ShareTweet