உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா
உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு!
அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும்.
எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட நிலமும் வளமற்ற நீர்நிலையமும் படைத்த இடமாக இன்றி, நஞ்சையும் புஞ்சையும் நடு நடுவே நறுமணப் பூங்காவும் பழமுதிர்ச் சோலையும் பாங்குடன் விளங்கும் குன்றும், மலையும் மலைபடு பொருளும் மக்களின் தேவைக்கேற்றவற்றை நல்கும் கனிமரங்களும், சிந்துபாடும் சிற்றாறும், வள்ளல்போல தரும் ஆறுகளும், பிறவும் கொண்டு பொன்னாடாக விளங்கும் இந்நாடு நம்நாடு என்று கூறிக்கொள்வதிலே ஒரு பூரிப்பும் பெருமையும் நமக்கிருப்பது இயல்பே! இருத்தலும் அவசியமே! ஆனால் இத்தகைய நாட்டிலே உள்ள நலிவுகளையும் நாம் மறத்தலாகாது.
தீட்டிய வைரம் போல், தணலில் வெந்து கைத்திறனால் உயிர் பெறும் தங்கம் போல், அரைத்தெடுத்த சந்தனம் போல், நலிவு நீக்கப்பெற்று, அயர்வு போக்கப்பெற்று, ஆற்றல் வளப்படுத்தப்பெற்ற நாடு அழகுடன் விளங்கும்! ஆங்கு அறிவு மணம் கமழும்! இன்ப விழா என்றென்றும் இருக்கும்! எங்கு வீணர் தொகை குறைந்து வீரர்தொகை அதிகரித்து உள்ளதோ அங்கு விழா நித்தமும்! எவ்விடத்தில் மடமை மாய்த்தொழிந்து மதி மிகுந்திருக்கிறதோ, அங்கு நிதிக்குக் குறைவில்லை! நாட்டின் கதி யாதோ என்ற சிந்தனைக்கு வேலையில்லை!
வரம்பு கட்டிய வயலும் வாய்க்கால் தொகுப்பும், நீர்நிலை அமைப்பும், இவற்றை நேரிய முறையிலே வைத்திருக்கும் நோக்கமும் எங்குளதோ, அங்கு வாழ்க்கை பூஞ்சோலையாகத்தான் இருக்கும்! பழமைப்புழு நெளிந்து கொண்டு, வைதிக வல்லூறுகள் அவற்றை உண்டு கொழுத்து, ஊர் சுற்றிக் கொண்டிருந்தால், ஆங்கு வாட்டமும் வருத்தமும் இடரும் இடியும் பேதமும் பீடையும் பெருகிப் பாழ்படுத்தும்! உழவன் அறிவான் பண்புக்கேற்ற பயிரும், பருவகால மழையும், தருணம் அறிந்து பாய்ச்சிடும் தண்ணீரும் களை பறித்தலும், பிறகு சிறுமணியாகக் குவிந்து பொருநில மன்னருக்கும் பேரானந்தம் தரும் என்பதை! அவனுடைய ஏரடிக்கும் சிறு கோலின் திறமே செங்கோலுக்கு உற்ற துணை என்பதைத் தெரிவான். அவனுடைய மேனி கறுத்திடக் கறுத்திட நாட்டு மக்களின் முகம் ஒளிவிடும் என்பதை அறிவான். அதுவே அறுவடைவிழா அளிக்கும் அறிவுப்பொங்கல்! அறுவடை விழா தரும் அரிய பாடம்! உற்ற காலத்திலேயே உரிய முறைகொண்டு உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு என்பதேயாகும். இந்தப் பாடம் சிறுவயல் காட்டும் பெருமகிழ்வு என்பதேயாகும். இந்தப் பாடம் சிறுவயல் காட்டும் செய்தி, மணி விளைவிக்கும் நிலத்தளவோடு நிற்கும் திறத்தன்று. மாநிலம் எங்குமே இதனை மதிவழி எனக் கொளல்முறை.
பேரறிஞர் அண்ணா:
அண்ணாவின் சிந்தனைகள்:
தொகுப்பு : புலவர் இளஞ்செழியன்:
பக்கம் 135-136
Leave a Reply