ananthi_and_kanimozhi01

 

கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.

  விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   அப்பொழுது தன் கணவர் எழிலன் சரணடையும் முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொலைபேசியில் பேசியதன் அடிப்படையிலேயே படையினரிடம் சரணடைந்ததாகவும் அருகில் இருந்த தான் தான் இதற்குச் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.

  தமிழீழ விடுதலைப்போரைப் பொருத்தவரை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற நிலைதான் கனிமொழிக்கு. அவ்வாறிருக்க அவர் எப்படி இதில் முதன்மை பெற்றார் என எண்ணத் தோன்றும். அதேபோல், ‘செய்துமுடி அல்லது செத்துமடி’ என எந்நரேமும் மரணக்குப்பியுடன் விடுதலைப்புலிகள் சரணடையும் முடிவிற்கு எங்ஙனம் வந்தார்கள் என்றும் எண்ணம் எழும்.

  விடுதலைப்புலிகள் தம் நாட்டு மக்களின் நலன் காக்க அவர்கள் உரிமையைப் பெற்றுத்தரத்தான் போராடினார்கள். ஆனால், சிங்களக் கொடுங்கோலரசு இந்தியாவுடனும் பிற வலிமையான நாடுகளுடனும் இணைந்து இனப்படுகொலையில் பேரளவில் ஈடுபட்டபொழுது அவர்கள், எண்ணத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். மக்களுக்காகத்தானே நாடு. மக்களே நச்சுக் குண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் பல்லாயிரக்கணக்கில் கண்மூடித்தனமாக அழிக்கப்படும்பொழுது போரை நிறுத்துவதற்கு முயன்றதில் வியப்பில்லை. மேலும் தொடர்ந்து அவர்கள் போர் நிறுத்தத்திற்குக் குரல் கொடுத்து அதே நேரம் சிங்களக் கொடும்படை அதை மதிக்காத பொழுது போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எதிரி சிங்களப்படை மட்டும் என்றிருந்தால் என்றோ அதனை அழித்திருப்பர். ஆனால், உதவவேண்டிய கடப்பாட்டில் உள்ளோரும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ளோரும் சேர்ந்து அறமற்ற முறையில் தம் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதில் வியப்பில்லை. எனினும் களத்திலுள்ள வீரர்கள் களத்தில்தான் இருந்துள்ளனர். மக்கள்பணிப்பொறுப்பில் இருந்தவர்கள்தாம், போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்த பொழுது சரணடையச் சொன்னதும் நம்பிக்கையில் சரணடைந்து மாயமாகி உள்ளனர். இந்திய அமைதிப்படையின் பொழுதே இந்தியாவின் நடுநிலையற்ற போக்கினால் தம் களத் தலைவர்களை இழந்தவர்கள்தாம். எனினும், அன்றைய சூழலில் இந்திய அரசுடன் தொடர்பு கொள்ள தமிழகத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டது இயற்கையே.

  கனிமொழி இங்கே எங்கே வந்தார் என்று தோன்றலாம். கலைஞரின் குடும்பத்தில் அவரைப்போல் எழுத்துத்துறையில் யாரும் இறங்கவில்லை. கனிமொழியை அரசியலுக்கு அழைத்துவர முடிவெடுத்ததும் குடும்பத்தில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவும் அவரைக் கலை இலக்கியத் துறை மூலம் ஒளிவிட வழிவகுத்தார்.   மாநிலங்களவையில் புகுமுக நிலையில் இருந்தாலும் முதன்மைப் பொறுப்பும் மத்திய அமைச்சர்களுடனும் தலைவர்களுடனும் தொடர்புகொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கினார். அதுபோல், விடுதலைப்புலிகளின் படையையேதான் தான் வழிநடத்துவதுபோல் கதையளக்கும் போலிப்பாதிரியார் பேச்சை நம்பிய கனிமொழி அவருடன் இணைந்து ஈழம்பற்றியும் பேசத் தொடங்கினார். இதனால் மட்டுமல்ல. கலைஞரே மகள் கனிமொழி வழியாகத்தான் சில தொடர்புகளைப் பேணி அவரை உருவாக்க எண்ணியதாலும் தமிழ்நாட்டு முதல்வர் கலைஞரின் மகள் என்பதாலும் எழிலன் கனிமொழியுடன் பேசியிருக்கவே வாய்ப்பு உண்டு. மேலும்,   வடக்கு மாகாண அவை உறுப்பினர் அனந்தி என்பதை அறியாவிட்டால் கனிமொழி அரசியலுக்கே தகுதியற்றவர் ஆவார். அவரை அறிந்தவருக்கு அவர் கணவரைப்பற்றியும் தெரிந்திருக்கும். “எழிலனுடன் நேரடி அறிமுகம் இல்லை, எனவே, பேசவில்லை” என்றால் நம்பலாம். ஆனால், “அவர் யாரென்றே தெரியாது” என முழுப் பூச்சுனைக்காயைச் சோற்றில் மறைக்கும் பொழுதுதான் கனிமொழி எதையோ மறைக்கிறார் என்பது புரிகிறது.   அவரைத் தெரியாது என்று நிறுத்தியிருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், அவர் “ஒன்றும் விடுதலைப்புலிப்படையில் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவரல்லர்” என்பதுபோல் பேசியுள்ளார். இதன் மூலம் விடுதலைப்புலிகளின் முதன்மைப் பொறுப்பாளர்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டுள்ளார். முதன்மைப் பொறுப்பாளர்கள் களத்தில் இருக்கும் பொழுது அரசியல் பொறுப்பாளர் இவருடன் பேசியதில் வியப்பில்லை. எனவே, கனிமொழி இதை மறைக்கவேண்டிய தேவையில்லை.

  வஞ்சகத் தலைவர்கள் அல்லது உயரதிகாரிகள் தன்னிடம் தந்த தவறான தகவலை எழிலனிடம் தெரிவித்திருக்கலாம். எனவே, இவரைச் சரணைடயச் சொல்லி ஏமாற்றியதாக யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால், அங்கே இது தொடர்பில் வழக்கு உசாவல் நடந்துகொண்டுள்ளது. எனவே, கனிமொழி தான் யாரிடம் தொடர்பு கொண்டு யார் தந்த தகவலை எழிலனிடம் தெரிவித்தார் என்ற உண்மையைச் சொல்வது சரணடைந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உதவியாக இருக்கும். மேலும், இந்திய அரசின் பங்களிப்பையும் வெளிப்படுத்த உதவும். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் சிங்கள அரசு மூலமாகவே இந்த உண்மைகள் வெளிவரத்தான் போகிறது. எனவே, இதற்கு முன்பு இதுபோன்ற செய்திகள் வந்தபொழுது தமிழ் ஈழத்தில் தனக்கும் ஈடுபாடு உள்ளது என்ற உணர்வு ஏற்படுவதாக மகிழ்ந்தவர் இப்பொழுது மறைக்க   வேண்டியதில்லை. ஒருவேளை அவர்மீதுள்ள வழக்கில் மத்திய அரசின் பிடி இறுகக்கூடாது என்பற்காக அமைதி காத்தாலும் அது சரியல்ல. உண்மையை அவர் சொன்னால் உலகத்தமிழர்கள் அவர் பக்கம் நிற்பர்.

எனவே, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.

 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

(திருவள்ளுவர் – திருக்குறள் – 0642)

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 

இதழுரை

அகரமுதல 84, ஆனி 06, 2046 / சூன் 21, 2015

feat-default