thamizh-hindi01

வினா1 : இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்?

மேல் நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம் எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் மீளாத பேராபத்து.” ஒரு நாட்டை என்றும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமானால் செய்வதென்ன? “முதற்கண் அந்நாட்டின் மொழி வளத்தைக் கெடுக்க வேண்டும்” இங்ஙனம் கூறிய விடைகள் நம் நாட்டிற்கும் ஏற்றது தானா? என்பது காணலாம்.

  முதல் மாந்தன் தோன்றிய குமரி மலையும் அது சார்ந்த 49 தமிழ்நாடுகளும் கடல் கோட்பட்ட ஞான்றுபயந்து வடக்கோடிய மக்கட்குக் கங்கைக்கரை சார்ந்த நிலம் பகிர்ந்தளித்தவன் ‘‘நிலந்தரு திருவற்பாண்டியன்’’ என்பதும், ‘‘குமரி முதலிமயம்வரை ஒரு மொழிவைத்தாண்ட இமயவரம்பன், நெடுங்சேரலாதன்’’ என்ற வழக்காறும், ‘‘சிந்து வெளியில் ‘‘மாய்ஞ்சதரை’’ ‘‘ஆரப்பார்’’ முதலிய இடங்களிற் புதையுண்ட நகரங்களை அகழ்ந்ததிற் கிடைத்த அணிகலன்கள், பல கருவிகள், கி.மு. 2800 அதற்கு முன்னும் வாழ்ந்த பண்டைத் தமிழர்களுடையதென்றே அறுதியிட்டுக் கூறலாம்’’ என்ற புதை பொருளாராய்ச்சி வல்லுநர், ‘‘மார்சல் மக்கே’’ அவர்களின் கூற்றும் மேலும் பல்சான்றுகளானும் தமிழகம் “வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் – தெனாஅதுருகெழு குமரியின் தெற்குமாய்’’ தமிழகம்; தமிழ், தமிழர் என நாடு, மொழி மக்கள் என்ற மும்மைப் பற்றும் தமிழ்ப் பண்பாடும் கொண்டு செழிப்புற வாழ்ந்து வந்தன ரென்பதற்கியா துமையப் பாடின்றாம்.

  ஏறத்தாழ கி.மு.1500இல் வடவர் வடமேற்குக் கணவாய் வழியே தமிழ் நாடு புகுந்தவுடன் போர்த்தொடுத்தாரிலர். ‘அகத்தியர், பபர்க்கவாசு’ என்ற இரு புரோகிதக் குடும்பங்களைத் தென்கோடி வரையுள்ள மொழி வளத்தின் உளவறிந்து வரச்செய்தும். தங்கள் பண்படா மொழியோடு மலையோரப் பகுதிகளில் வழங்கிய ‘பிராகிருதம், பிராகுவி’’ என்ற மொழிகளையும் சேர்த்துச் செம்மைப் படுத்தியதாலேயே ‘சமசுகிருதம்’ எனப் பெயர்கொடுத்து இம்மொழி தேவர்களால் பேசப்படும் உயுர்ந்த மொழி என்றும், இம்மொழியின் சுவடிகள் பிரமதேவனால் எழுதினவென்றும், இதிலுள்ள கொள்கைகள் நாட்டிற்கு நன்மை பயப்பனவென்றும் சில நூற்றாண்டுகள் வரை மொழியை புகுத்திய பின்பே பல சூழ்நிலைகளாலும், படிப்படியாகப் பாரசிகம், ஆப்கானித்தானம், பாஞ்சாலம், தில்லி, பீகார் முதலியவிடங்கள் ஆரிய நாடுகளாயின. தமிழகத்துள் ஆரியமொழி ஆட்சி மொழியாயின. ஆங்காங்கெழுந்த போர்களும் ஆரியத்துக்கு வெற்றி தந்தன. வடபாலில் இயற்கையாற்றன் மருட்சியும், அறியாமையும் கொண்ட மக்கள் எளிதின் ஆரியத்தின் பால் சாய்ந்தனர். தென்னாட்டிலும் பல்யா கசாலை முதுகுமிப் பெருவழுதி முதல் அராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளிவரை வேத வேள்வியிலிறங்கினர். தமிழர் பண்பாடுகள் சரியத் தொடங்கின. வடமொழியின் மதிப்புயர்ந்து வந்தன.

  கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்திலிருந்து எட்டா நூற்றாண்டுச் சீவகசிந்தாமணி வரை ஐம்பெருங்காப்பியங்களில் மூன்று விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடு வரை வட சொற்புகுந்தன காணலாம். பத்தாம். நூற்றாண்டிலிருந்து தமிழ் இதிகாசங்களில் நூற்றுக்கு 30 விழுக்காடு வரை வடமொழி கலந்தன. பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து புலவர்கள் வடமொழி கலந்துபாடுவதும் உரை நூல் எழுதுவதும் பெருமை தருவதெனக் கருதினர் போலும் சமய நூல்களிலும் தலப்புராணங்களிலும் 30 விழுக்காடிலிருந்து 50, 60 விழுக்காடுமே கலந்தன வென்பது சிலப்பதிகாரத்திலிருந்து சிவகாசித் தலப்புராணம் வரை காலவரிசையிலடுக்கிப் பார்த்தால் காலத்துக்குக் காலம் மக்கள் கருத்து வளர்ச்சி எவ்வாறு சென்றிருக்கிறதென்பதும் காணலாம்.

  வழக்குச் சொற்களிலும் ‘‘பழமலை’’ என்றால், தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க்குமே’’ எனப் பறம்பு மலையைக் கபிலர் குறிப்பிட்டவாறு பழம் தரும் மலையென்று கொள்ளலாகாதா’’ விருத்தாச்சலம் என மாற்றினர் மலைகளிற் கிழட்கு மலைகளுமுண்டா? வேட்டி என்றால், வெட்டப்படுவது வேட்டி. துண்டிக்கப்படுவது துண்டு துணிக்கப்படுவது துணி இதனை இன்று தமிழ் மொழியில் ஆட்சி நடத்த இன்றியமையாத எழுத்துக்களென நம் தமி நாட்டரசு மத்திய அரசிடம் வடமொழி எழுத்துக்கள் சில கடன் வாங்கியுள்ளதல்லவா? அவற்றிலொன்றான ‘‘ஷ’’ எழுத்தைக் கூட்டி ‘‘வேஷ்டி’’ என வழங்குவது உயர்வென்றே கருதியதல்லவா? ஆனால் இச்சொல் வடமொழியகராதியில் இல்லை. இருந்திருந்தால் தமிழன் கட்டும் வேட்டி என்ற சொல்லும் வடமொழிதானே எனக் கூறிவிடுவர். இவ்வாறு வழக்குச் சொற்கள் மாறி மாறி அமைந்து தமிழ்ச் சொற்கள் வழங்கிழந் தழிந்தவை பலப்பல இவற்றை ‘‘ஊரும்பேரும்’’ என்ற சேதுப் பிள்ளையவர்களின் நூலிற் பரக்கக் காணலாம்.

  மற்றொரு புலவர் ‘‘ஆற்காடு’’ என்பதற்குச் ‘சடாரண்யம்’ என வைத்துத் தலப்புராணம் பாடினாராம். இங்ஙனம் தமிழ் மொழிப்பற்றுப் போய் வடமொழியின் பற்றல்ல – பித்துப் பரவி அதன் கொள்கைகளும் உடனிகழ்ச்சியானதால், ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’’ என்ற பண்பாடு குலைந்து, பல சாதிகள், பல தெய்வங்கள், பல மதங்கள் ‘‘பல் குழுவும் பாழ்படுத்தும் உட்பகையும்’’ ஆன நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாகக் கி.மு. 500லிருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டுவரை வரிசையாகப் பாராசீகர், கிரேக்கர், பார்த்தியர், ஊனர், அராபியர், பட்டாணியர், அகோம்த குர்ரானின், மொகலாயா, போர்ச்சுக்கீயர், ஆங்கிலேயர் எனப் பலர். நாட்டைக் கைப்பற்றினர்.

  இவற்றில் இரண்டாவதாக ஆட்சி மொழியாதிக்கம் செலுத்தியது பாரசீகமாகும். இதன் பயனாக, கிராமம் மணியகார், கிச்து, வசூல், தாலுகா சில்லா, தாசில்தார், சிரசுதார், டபேதார், கச்சேரி, கசானா. மேசை, சமு க்காளம் சன்னல் சபாசு போன்ற பல சொற்கள் 1500 ஆண்டுகளாகியும் நிலைத்து விட்டனவே இவைகட்கு நேர் தமிழ்ச்சொற்கள் எவை? புலவர்களைக்கொண்டு பழ நூல்களைப் புரட்டாது காண முடியுமா? வழக்கிலிருந்து இத்தமிழ் சொற்கள் அழிந்தனவென்னாது என் சொல்வது?

மூன்றாவதாக ஆட்சிமொழியாதிக்கம் பெற்றது ஆங்கிலமாகும். இதன் பயனாக, அடுப்பங்கரையிலிருந்து ஆட்சியலுவலகம் வரை, கல்வியறிவற்ற பொதுமக்களிடமிருந்து பல்கலைக்கழக கல்லூரி வரை, அங்காடி வீதியிற்றொங்கும் பலகைகளிலிருந்து அயல்நாட்டு ஏற்றுமதி இறக்குமதி நிலையங்கள் வரை, மிதிவண்டி, இயக்கவண்டி, புகைவண்டி நிலையங்களிலிருந்து கடற்றுறைமுக நிலையங்கள் வரையாண்டேனும் ஆங்கிலமன்றி ஏனைய சொற்கள் தலை நீட்டியதுண்டா? அங்ஙனம் தப்பித் தடுமாறித் தென்படினும் மதிப்புறுவதுண்டா? வழக்காற்றில் வந்த அவ்வாங்கிலச் சொற்களை இவ்வளவென்று கணக்கிட முடியுமா? இவையனைத்துக்கும் நேர் தமிழ்ச் சொற்களெவை? அழிந்தனவென்னாது என் சொல்வது?

  ‘‘நாட்டிலுள்ள பொருள் வளங்கள் கொள்ளை போகின்றன. மொழிவளங்கள் அழிகின்றன. நிலவளம் நீர்வளங்கள் பாழாகின்றன. உலக அரங்கில் நம்நாடு ஓர் அடிமை நாடென்று பேரவமானம் வளர்கின்றது. இவையனைத்துக்கும் அயலவர் ஆட்சியன்றோ காரணம்? இக்குறைகளகன்று மக்களே தன்னாட்சி நடத்திக்கொள்ள முதற்கண் அயலவர் ஆட்சியை யகற்ற வேண்டுமென்ற நாட்டுத் தந்தை காந்தியடிகளாரைப் பின்பற்றி நாட்டு மக்கள் ஒருமைப்பாடெய்தி வரிந்து கட்டி நின்றனர். வெற்றியுடன் மக்கட்குரிமை பெற்றுத்தந்தனர். அயலாட்சி ஒழிந்தது மக்கள் கூட்டாட்சி மலர்ந்தது. ஏதேது நன்மைகளைக் காண்போமோ என இறும்பூதெய்தி மக்கள் எதிர்பார்த்து நின்றனர். 15 ஆண்டுகள் உருண்டோடின.

  முழுநாடாயிருந்த தமிழ்நாடு அயலவர் ஆட்சிகளால் இமயம்போய் விந்தியம் போய் வேங்கடம் எல்லையாகத் தொல்காப்பியர் காலத்தில் இருந்து நிலைத்து நின்றது. தன்னாட்சி வந்த பின்பு வேங்கடமும் போய் மேற்கு எல்லையில் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, பாலக்காடு, முதலியன கைவிடப்பட்டன. மீந்த குறுகிய வட்டத்தையாவது ‘தமிழ்நாடு’ என்று சொல்லுங்களேன் என்றால் அதற்கு முழுமையான ஒப்புதல் கூட்டாட்சியில் இன்னும் கிடைத்திலது. இன்றைய நிலையிலும் நான்காவதாக இந்திமொழியாதிக்கமும் வந்துவிட்டது. இவைதாம் கூட்டாட்சியில் தமிழ்நாடு வரப்பெற்ற பயன்கள்.

எனவே, தமிழ்நாட்டுடன் பல நாடுகள் வாணிப முறையிலும் அண்மை நாடுகள் என்ற முறையிலும் இருந்து வந்ததால் அந்நாடுகளில் தமிழ்மொழி குடியேறிற்றே யொழிய வேற்று மொழிகள் தமிழ்நாட்டில் நுழையவில்லை. ஆட்சி மொழியாக்கிய மூன்று மொழிகளான வடமொழி, பாரசீகம், ஆங்கிலம் என்றவைதான் நம்நாட்டு மொழியை அழித்து மறையச் செய்தனவென்பது பட்டறிவிக்கொத்திருப்பதால், இந்தியும் அவ்வாறே ஆட்சிமொழியாதிக்கம் செலுத்த முனைவதாய் அவ்வாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட நாட்டின் தாய்மொழி ஒருமை குறைந்து, மக்களார்வம் குறைந்து மறைந்து ஒழியும் என்ப தொருதலை. சான்றாக மக்கள் சபை என்றால் கெடுதல் என்ன? ‘லோக் சபா’ என்றதால், மக்கள் என்ற தமிழ் அழிந்தது. இவ்வாறே ‘ராஜ்ய சபா’ பாரத் என்றதும். ‘காசி’ என்றால் தென்னாட்டுமக்கள் புனிதப் பெயராகக் கொண்டாடுவர். அதனை வாரணாசி எனத் திருத்தியதன் நோக்கம் என்ன? இவை போன்ற பல திருத்தங்களால் தமிழ் அழிந்தது; அழிந்து வருகிறது. மேலும் மேற்கூறிய நடைமுறைகள் போலவே ஆட்சிமொழி ஆதிக்கம் பெற்றால், மேலும் மேலும் அழியும். ‘ஒருபாதி மால்கொள மற்றொருபாதியுமையவள் கொண்டிருபாதி யாலுமிறந்தான் புராரி’’ என்ற பாட்டின் நிலையைத் தமிழடையும்.

வினா 2: நம் நாட்டில் உள்ள மாநிலங்களின் தொடற்பிற்குரிய மொழி இந்தி என்பதனை ஒப்புக் கொள்கின்றீர்களா?

‘‘இந்தி இந்தியாவின் அரசியல் மொழியாகும். அது ஒன்றுதான் தேசிய மொழி என்பதன்று. நாட்டில் 14 தேசிய மொழிகள் இருக்கின்றன. தகுதியில் எல்லாம் சரிசமமான நிலையை உடையனவேயாகும்’.

நேரு 3-5-56 அ.இ.கா. கூட்டம், பம்பாய்.

‘பதின்மூன்று மொழிகளையும் பேச்சு வழக்கில்லாத சமசுகிருதத்தையும் சேர்த்து இந்தியாவில் பதினான்கு பிரதான மொழிகள் இருப்பதாக அரசியல் சட்டத்தில் கண்டிருக்கிறார்கள்.

சி.சுப்பிரமணியம்,ஆனந்தவிகடன்’ தீபாவளி மலர் – 1955.

தேசிய மொழி: ஒரு மாநிலத்தில் கல்லாரும் கற்றவருமாய் பெரும்பான்மையினரால் பேசப்பட்டு வரும் மொழியே தேசியமொழி எனப்படும். இவ்வாறுள்ள பதின்மூன்று மொழிகளுடன் வழக்காற்றி லிறந்துபட்ட சமசுகிருதத்தையும் சேர்த்துப் பதினான்கு தேசிய மொழிகள் எனில் பொருளுண்டா? சமசுகிருதத்தைத் தேசிய மொழி எனல் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்றாகும்.

இங்கிலாந்தில் வழிபாட்டுப்பாடல்கள் இலத்தீன் மொழியிற்றான் இருந்தது. உலக வழக்கினின்றும் இறந்த மொழியில் வழிபாட்டுப் பாடல்களிருப்பது நாட்டிற்கு அவமானச் சின்னம் என்ற கிளர்ச்சியினால் 1549ல் ‘புக் ஆப் காமன்டிரோ’ ஆங்கிலத்தில் ஒரு வழிபாட்டு நூலை வெளியிட்டது. மதகுருமார்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்நூலையே பின்பற்றுமாறு அரசினரும் சட்டமியற்றியதால், 1662லிருந்து 30 ஆண்டுகளாக நிலைத்து விட்டது அங்கு. இங்கு? கருமாதி வீட்டிலிருந்து கடவுளர் கோவில் வரை சமசுக்கிருதமே புனிதமொழி எனக் கருதப்படுகிறது. ஆளவந்தாரும் இந்திக்கு மூல மொழி என்ற ஒரு காரணத்திற்காகக் குழிப் பிள்ளைக்கு மண விழாக்கண்டு மகிழ்வது போன்று அம்மொழிக்குத் தனிப்பள்ளிகள், ‘‘பிரச்சார சமிதிகள்’’, “கலைக்கூடங்கள்”, ‘‘அனைத்திந்திய சமசுக்கிருத சாகித்திய சம்மேளனங்கள்’’ முதலிய சடங்குகட்காக இந்திக்குப் போலவே மக்கள் வரிப் பணத்திலிருந்து வாரியிறைக்கின்றனர். கோடிக் கணக்கில். அறமல்லாத இச்செயல்கள் மொழி நாகரிகம் பெற்ற அயல்நாட்டினர் எள்ளி நகையாடற்குரியனவாம்.

  பொதுமொழியாக நமக்கு இந்தியக் கூட்டாட்சி நடத்த ஒரு மொழி வேண்டும். மாநிலத் தொடர்பு கொள்ள ஒரு மொழி வேண்டும். உலகிற் பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு மொழி வேண்டும். மேலும் உலக அரசியற்றொடர்பு உலக வாணிகத் தொடர்பு முதலியவற்றால் நாடு முன்னேறவும் வேண்டும். இத் தேவைகளனைத்தையும் ஒரே மொழியால் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் அத்தகுதி வாய்ந்த மொழி ஆங்கிலம் ஒன்றே என்பது, அனைத்து மொழியினர்க்கும் ஒப்ப முடிந்த ஒன்று. இஃதறிந்தே இன்றை நிலையில் ஆங்கிலத்தை உலகம் தனக்குப் பொதுமொழியாக்கிக் கொண்டது. உருசியாவில் புல்கானின் மனைவி ஆங்கிலப் பேராசிரியை. என்றுமே ஆங்கிலமே எட்டிப்பாராத சப்பானில் இன்று தெருவெங்கும் முழங்குகிறது. கையிலிருந்த கலச நீரைக் கவிழ்த்துக் கானலை நோககி ஓடுவது போல், ஏற்கனவே நமக்கமைந்த ஆங்கிலத்தை ஒதுக்கி இந்தியைப் பொது மொழியாக்கலாமா? என எண்ணுவது அறியாமையின் பாற்பட்டதாம். வரட்டு கௌரவத்துக்காக இங்ஙனம் செய்தால் நாட்டை 500 ஆண்டுகளுக்குப் பின் தள்ளிய செயலாகும்.

  ‘‘ஒரு ஆள்கூடப் பேசாத மொழியையும் தேசிய மொழியாக்கும்போது இந்தியாவைத் தாயகமாய்க் கொண்ட ஆங்கிலோ இந்தியர் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பேசிவரும் ஆங்கிலத்தை 15ஆவது தேசிய மொழியாகச் சேர்த்தாலென்ன?’’

பிராங்கு அந்தோனி, சட்டமன்ற உறுப்பினர்: 1951சனக் கணிதைப்படி இந்தியாவில் மொத்தம் 782மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் தென்னாட்டில் 17 மொழிகள் போக வடநாட்டில் 765 மொழிகள். அவற்றில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும், ‘இந்தியிலிருந்து .. …. போசபுரி வரையில் 81 மொழி பேசுவோர் இந்தி பேசுபவர்கள் என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டனர்.’’

1951 சென்சசு அறிக்கை ‘‘மொழிகள்’’ பக்கம் 72.

  உத்திரப் பிரதேசம், பீகார் மாநிலங்களிலும் ‘‘மேல் நாட்டிந்தி கீழ் நாட்டிந்தி பிகாரி என்ற முப்பிரிவுகளிலிருந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 11வித இந்திகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பிகாரியின் உட்பிரிவான ‘மைதிலி’ என்ற மொழியே தென்னாட்டில் திணிக்கும் இந்தி யாகும் இப்பிரிவில் இலட்சக்கணக்கேயன்றி கோடிக்கணக்கில் இல்லை. இம்மொழி கற்றுக்கொண்டு வடநாடு சென்றால் எல்லாரோடும் பேச முடியாது.

  மைதிலிக்கு மட்டும் 13 கோடி மக்கள் என்பது முழுப்புரட்டு என மறைமலையடிகள் வெளியிட்ட ‘இந்தி பொதுமொழியா?’ என்ற அறிக்கை கூறுகிறது. இதற்கு 25 ஆண்டுகளாகியும் மறுப்புத் தெரிவிக்கவில்லை ஏன்? ஆய்ந்து பார்த்தால் மருமம் அம்பலமாய்விடுமே. ஆதலின் பெரும்பான்மையினர் பேசுவதென்பது மோசடிக் கணக்காகும்.

   21-8-54 இந்தியத் தர நிருணயக் கழகம் கல்நட்டு விழாவில் நேரு ‘‘நான் இந்தியில் பேச வேண்டியிருப்பதால் பெயர் என்ன? என்று தலைவரைக் கேட்டேன் ‘தெரியாது’ என்றனர். இலாவா சிரீராமுலு, டி.டி.கேயையும் கேட்டேன்; அதே விடைதான். கல்லைப் பார்த்தேன் ‘‘பாரதீய மணக்சான்சுதா’’ என்றுள்ளது. எப்பொருள் பயப்பினும் சரி சிருட்டி காத்தாவை நம்புகிறேன்’’.

   பொருட்காட்சிசாலை கால்கோள் விழாவில் நேரு, ‘பொருட்காட்சி’ என்பதற்கு இந்திசொல் என்னவென்று கேட்டதற்கு ‘இந்தி வேண்டுமே’ கூட்டத்திலிருந்து ‘ஆச்யாப்கா’ என்ற சொல் வந்தது. நேரு ‘‘இதிற் பொருளில்லை” என்றார். ஆசாத்திடமிருந்து ‘சாதுகர்’ என வந்தது. நேரு ‘அதைவிடமட்டம்’ என்றார். மீண்டும் கூட்டத்திலிருந்து ‘சங்கிரகாலயா’ என வந்தது. நேரு “இதிலும் போதிய பொருளில்லை; வேண்டா விருந்தாக ஏற்கிறேன் தேசியம் என்பதற்கே இன்னும் சொல் கண்டுபிடிக்கவில்லையே” என்று பேச்சைத் தொடங்கினர்.

12-5-55 தில்லி

  சிக்கனச் சீரமைப்பு நிலையம் ஆமதாபாத் ஆங்கிலப் பெயர் ‘லேபர்ட்டிரி ராசனலிசேசன்’ என்பதற்கு என்ன இந்தி என்று இவ்விழாவில் 10 பேர் வரை கேட்டுவிட்டு ஆங்கிலத்திலேயே சொல்லி நேர்ந்தது. சட்டமன்றத்திலும் இங்ஙனம் பல நிகழ்ச்சிகள் உண்டு. இவ்வாறு இந்த மாநிலத்திலேயே ஒருவர் சொல்வது பிறிதொருவர்க்குத் தெரியாது. அலங்கோலப்படும் இந்தி பிற மாநிலத் தொடர்புக்குரிய மொழியாக பொதுவழியாக என்றும் ஆகாது, ஆதலால் ஒப்புக் கொள்ள முடியாது.

 வினா 3: தமிழ்நாட்டில் இதுவரை எந்த எந்த இடங்களில் இந்தி புகுந்துள்ளது? அதனால் தனிமனித வாழ்வு யாருக்காகிலும் பாதிக்கப்பட்டுள்ளதா?

  திருச்சிராப்பள்ளியில் வானொலி நிலையத்தில் ‘ஆகாசவாணி’ புகுந்தது. இவ்விந்திப் பெயரை மறுத்த அவ்வூர் கி.ஆ.பெ. விசுவநாதம் தமது மனைவியுடன் சிறைபோக நேர்ந்தது. அதுமுதல் நல்ல தமிழ் புலமைகொண்டோர் யாரும் அந்நிலையத்திற் பேசுவதை நிறுத்திவிட்டனர். அதனால் நல்ல கருத்துரைகள் கேட்காமையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனரே?

  அஞ்சல் துறையை நோக்கினால் பெயர்ப் பலகையிலிருந்து அஞ்சல் அட்டை (கார்டு) உறை (கவர்) பணவிடைத்தாள் (மணி ஆர்டர் பாரம்) கைச்சாத்து (ரசீது) ‘சர்வம் சகத் இந்திமயம்’ ஆகிவிட்டதே. தமிழ்நாட்டில் பேரூர் தோறும் அஞ்சல் நிலையமாகிவிட்டதே. ஓரூக்கோரூர் பணம் அனுப்பினால் அதற்கு இந்தி-யா வேண்டும்? பணம் பெறுபவனாவது குறிபோட்டுக் கொடுத்த இடத்தில் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளலாம். பணம் அனுப்புபவன் தாளை நிறைவு செய்ய இந்தி படித்தவன் ஊர்களில்லையே, எங்காவது நகரங்களிலன்றோ தேடவேண்டும். நிறைவு செய்து கொடுத்தாலும் முகவரி சரியா என்று பார்க்க முடியுமா? படித்து முட்டாளகவன்றோ இருக்க வேண்டியுள்ளது. மரு. சுப்பராயன் அவர்கள் சொன்னபடி தமிழும் இந்தியுமாக இரண்டே திங்கள் வந்தது மீண்டும் வேதாளம் முருக்க மரம் ஏறிக்கொண்டதே அஞ்சல் வேலைக்கு மனுப்போட்டால் மேலிடத்தில் கேட்பதென்ன? “உனக்கு இந்தி தெரியுமா?’’ இதுதானே கேள்வி. இந்தி தெரிந்தவனும், தெரியாவதனுமாக இருவர் மனுப்போட்டால் தெரிந்தவனுக்கு வேலை கிடைக்கும். இந்தி தெரியாதவனுக்கு இல்லையென்ற மறுமொழிகூட கிடைக்காது. இங்ஙனம் மத்திய அரசின் நேரிடையான எல்லா அலுவலகங்களிலும், இந்தி புகுந்துள்ளது. தமிழும் இந்தி படியாத தமிழனும் வெளியேற நேர்ந்துள்ளது என்பதை உணரவும்.

வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓரிடத்தில் தமிழ் மொழி மறைந்திருக்கிறதா?

   இதுகாறும் மேலே கூறியவற்றில் தமிழ்மொழி மறைந்திருப்பன புலனாகும். இனி இந்தி ஆட்சி நடைபெறும்போது ஓரிடமென்ன எல்லா விடயங்களிலுமே தமிழ் மொழி மறையும் ‘மெல்லவினித் தமிழ் சாகும்’ நிலையை நாமே காணலாம். வினாவுக்காக இந்தியலிருந்து தமிழ்மாழிக்கு மாற்றாக அரசியல் சட்டப்புத்தக இணைப்பிலுள்ள சில சொற்களை ஈண்டு காட்டுவோம்.

தமிழ்                                                 ஆங்கிலம்                                                  இந்தி

1. இந்தியக் குடியரசு    டொமினியன்    சம்பூர்ண        பிரபுத்துவசம்பன்ன

 லோகதந்தராத்மககனராச்யே

2. கூட்டுறவு                                 கோவாபரேடிவ்                    சககாரீசம்சதா

3. ஒப்புதல்                                     அப்ரூவ்                                   அனுமோதனகானா

4. பொது ஆணை                     பப்ளிக் ஆர்டர்                        சர்வசானீகவியவசுதா

5. மாநிலத் தலைவர்              கவர்னர்                                   தத்ரபவன்பிரம்மசிரேசுட்

வினா 5: பிற மொழிகளைக் கற்பதால் தான் ஒருவனின் தாய்மொழி உலகப் புகழ் பெற முடியும் என்ற கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? இந்த வகையில்தான் தமிழாலாகிய திருக்குறள் இன்று உலகப்புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலுமா?

  பிறமொழி என்பது தாய்மொழியல்லாத ஏனைய மொழிகளனைத்தும் ஒவ்வொருவருக்கும் பிறமொழியே தான். அத்தகு மொழிகள் உலகில் 2800இல் இருந்து 3006 வரை கணக்கிடுகிறார்களெனில் எம்மொழி கற்கவுரியது எனத் தேர்வது இன்றியமையாததாகிறது. அத்தேர்வில் முதன்மையாக நிற்பது ஆங்கிலமென்பதை மேலே கூறினோம். இனி ஊண், உடை, உறையுள் என்ற அன்றாடப் போராட்டத்திலமைந்த மக்கள் பலர் தாய்மெழியும் கற்க வாய்ப்பிலர். சிலர் கற்க முன்வந்திருப்பதும் தங்கள் பிற்கால வாழ்வை எண்ணியாகும். அதற்கும் இடையூறுகள் பெருகுகின்றன. இந்தி மாநில மக்கட்குத் தாய்மொழியோடு ஆங்கிலம் கற்பது எளிமை. பிற மாநில மக்கள் தாய்மொழி ஆங்கிலம் இந்தி என மூன்று மொழி கற்பது கடுமை. இதனால் ஆட்சிக் குழுவினரின் நடுநிலையின்மை புலனாகிறது. இதுவன்றியும் ‘அகில இந்திய சர்வீசு போட்டிப் பரீட்சை’யும் இந்தியில் எழுத ஆணையிடுமாறும், கல்வி மந்திரி சாக்ளாவிடம் சொல்ல அவர் ஒளிமறைவின்றி “போதனா மொழிக்கே இன்னும் இந்தி தகுதி பெறவில்லை. போட்டிப் பரீட்சை எழுதுவதென்றால், அதற்கு ஒரு கமிட்டியின் மூலம் ஆராயலாம்” என்றனர்.

  உடனே, ம. உள்துறை மந்திரி நந்தா அவர்கள், இந்தி பேசாத மாநில மந்திரிகளையெல்லாம் அழைத்துவரச் செய்து, கல்விமந்திரி சாக்ளாவையும் வரவழைத்து முதன் மந்திரிகள் மகாநாடு என்ற தலைப்பிட்டு இந்தி பேசாத மாநில முதன் மந்திரிகளை ‘ஆமாம்சாமி’ போடுமாறு செய்து போட்டிப் பரீட்சை எழுதும் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். இதுபற்றித் தினமணி 14-3-64 தலையங்கத்தில், “போதிய தகுதியற்ற இந்தியை அகில இந்திய ஆட்சிமொழித்துறையில் ஏற்கெனவே உபயோகித்துவருவதே தவறு. அதை யூனியன் சர்வீசு போட்டிப் பரீட்சை மொழியாக்குவது அதைவிடப்பெருந்தவறு. இதற்கு முதலமைச்சர் இசைவு கூறியது வடிகட்டிய அக்கிரமம்…”  “விவேகமுள்ளவர் செய்யக் கூடிய காரியமல்ல”… “நல்லாட்சியைச் சிதைத்து தேச ஒற்றுமைக்கு உலை வைக்கின்ற நாசவேலையாகவே மதிக்கப்பெறும்’’ என்றெல்லாம் கண்டித்துள்ளது.

  “நாட்டைப் பிரிந்தோடும்படி செய்வதற்குக் காரணமான இந்திவெறியர்களைப் பாதுகாப்புச் சட்டப்படி கொஞ்சம் காலத்துக்குச் சிறையிலடைத்து வைத்திருப்பது நன்மையென எண்ணுகிறேன்.”

–          பட்டாபிராமன் சட்டமன்ற உறுப்பினர்.

 

  இந்தி வரலாறு: ‘1808இல் கில் கிரைட் என்ற ஆங்கிலேயரின் உதவியால் ‘இலல்லுசிலால்’,  ‘பிரேம்சாகர்’ என்ற ஒரு நூல் எழுதலானார். அதில் உருது, அரேபியா, பாரசீகம் முதலிய மொழிகள் கலந்த கதம்பமாயிருந்தது. காட்டு மொழியாய்க் காட்சியளித்தது. இதனை ஐரோப்பியர் ‘இந்தி’ என்றழைத்தனர். உரைநடை மட்டும் உண்டு. கவிதைகள் பீகாரி, பாய்சுவாரி, பிராசுகுவி மொழிகளில் இருந்தன’ வங்கம், ‘ஆசிய சங்கப்பத்திரிகை 1888ம் ஆண்டு வெளியீடு. இதனை 5-5-56 இந்து இதழில் ‘சார்சு ஏ.கிரியர்சன்’ வெளியிட்டிருக்கிறார்.

  இத்தகு இந்திபோன்ற பிறமொழி படிப்பதால் ஒருவன் தாய்மொழி புகழ் பெற முடியாது. வயிற்று வளர்ப்பின் பொருட்டாகப் படிப்பதும் பயன்தராது அருமையினும் அருமையாகச் சிலர் பல மொழி படித்துப் பன்மொழிப் புலவராவதுண்டு. அத்தகையோர்களை ஊக்குவித்து ‘‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’’ என்றபடி நிலநூல், வானூல், விஞ்ஞான நூல், தொழில் நூல்களைத் தத்தம் நாட்டுத் தாய்மொழியில் எழுதி எல்லா மக்களுக்கும் அறிவூட்டி நாட்டை முன்னேறச் செய்யும் மொழியைத் தேர்ந்து எடுத்துப் படித்துப் பணி செய்யும் மூலமாய்த் தனது தாய்மொழியும் புகழ் பெறுமென்பதை ஒப்புக் கொள்ளலாம்.

குறள்நெறி: சித்திரை 3, தி.பி.1995 / 15.04.1964: பக்கம் 12 – 14

(தொடரும்)

thamizh-hindi02