– பி.சு.தங்கப்பாண்டி
குலசேகரப்பட்டி

thamizh-hindi01

1. ‘இந்தி படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும் வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை வளர்க்க வேண்டியோரின்  உள்ளங்கள் அழிந்ததாயின. அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும்.

2. இந்தியா ஒரு தனியாட்சி நாடாக இருந்தால் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழி இந்திதான். அதை ஒப்புக் கொள்வது தவறல்ல. ஏனெனில் தனியாட்சிதானே! ஆனால் இந்தியா உரிமை நாடாக, மக்களால் மக்களுக்காக ஆளப்படும் நாடாக உள்ளது. இங்கு பேசப்படும் மொழிகள் அத்தனையும் சம மதிப்புப் பெற வேண்டும். மேலும் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழியாகவும், அதே சமயத்தில் அது உலகத் தொடர்பிற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் உரிய மொழியாகவும் இருத்தல் இன்றியமையாதது. அதற்கேற்ற மொழி ஆங்கிலம் தான். அதை மாற்றி இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவது கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து அது உருகி, அதன் பின்னால் கொக்கைப் பிடிப்பது போன்ற அறிவுடைமையே!

3. தமிழனாய்ப் பிறந்தவர்கள் தமிழைக் கற்று, தமிழ்ப் புலமைமிருந்து, தமிழோடு பிற மொழிகளிலும் புலமை மிகுந்து வாழ்வது தவறல்ல. ஆனால் தமிழை மறந்து, ஏன்? அவமதித்து, இந்தியைக் கற்று, இந்தி வித்துவான்களாகத் தமிழ் நாட்டில் பணிபுரிகின்றார்களே! தனி மனிதர்கள்! இவர்கள் தமிழை மறந்து இந்தியை வளர்க்க முற்பட்டதனால், தமிழனாய் வாழ வேண்டிய வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

4. தமிழன் உள்ளத்தில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டும். இந்தி வித்வான்களின் உள்ளத்தில் இந்திக்குத்தானே முதலிடம்! அங்கே தமிழ்மொழி மறைந்திருக்கிறதே!

5. “பிற மொழிகளைக் கற்பதனால்தான் ஒருவனின் தாய்மொழி உலகப் புகழ்பெற முடியும்’’ என்ற கருத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இதே வகையினாலும் தமிழால் ஆகிய திருக்குறள் இன்று உலகப்புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலாது. இந்தியிலும் அதுபோன்ற நூல்கள் தோன்றினாலோ தோன்றியிருந்தாலோ உலகம் தானாக விரும்பி ஏற்றுக்கொள்ளும், கட்டாயப்படுத்தி அல்ல!

6. மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் சிதைவுறாது; சிதைவுறக் கூடாது; வளரவேண்டும்; உரிய நிலையை அடைய வேண்டும். ஆனால் இந்திக்கு இடங்கொடுத்து, தமிழ் பாதிக்கப்படாது என்று சொல்லிக் கொண்டிருந்தால், அது ‘பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தகதைதான்!’ என்பதே நமது மனச்சான்று.

7. வேண்டாத இந்தி மொழி ‘விடயத்தில்’ இறங்கி, இந்தி – தமிழ் என்று பிரித்துப் பேசுவதால், தாய்மொழிப்பற்றுள்ள காட்சிகள், வளர்கின்றன இதனால் இந்திய தேசத்தின் பற்றிலிருந்து சிலரை வெளியேற்றுவதாக அமையவில்லை. ‘இந்திதான் இந்தியாவை ஆளவேண்டும்’ என்ற பற்றிலிருந்து வெளியேற்றுவதாக அமைகிறது என்பதை உணர்கிறோம்.

– குறள்நெறி:  பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964 : பக்கம் 6-7

thamizh-hindi02