சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி
சட்டச் சொற்கள் விளக்கம் 641-650
641. Action | வழக்கு வழக்கு நடைமுறை செயற்படுமுறை வழக்கு மூலம், செயல், வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி. வீரதீரச் சண்டைப்படங்களை அதிரடிப்படம் (Action film) என்பர். அதிரடிப்பட நாயக, நாயகியரை முறையே அதிரடி நாயகர்(Action hero), அதிரடி நாயகி(Action heroine) என்பர். ஒருவர் அல்லது ஒரு தரப்பு தன் அல்லது தம் உரிமையை நிலைநாட்ட அல்லது பிறரால் ஏற்படும் தீங்கிழைப்பைத் தடுக்க நீதி மன்றத்தின் முன் கொண்டு வரும் நடவடிக்கை. உரிமையியல் குற்றவியல் வழக்கின் சட்ட நடவடிக்கையைக் குறிக்கிறது. |
642. Action Committee | நடவடிக்கைக் குழு கருதிப்பார்க்க அல்லது நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் குழு. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் போராடும் அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் மற்றவர்களை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வையிடவும் ஒன்றிணைந்த மக்கள் குழு. செயற் குழு என்றால் executive committee எனப் பொருள் படும். எனவே அதனை இங்கே பயனபடுத்த வேண்டா. |
643. Action Plan | செயற் திட்டம் குறிப்பிட்ட இலக்கை அடைய, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஆவணம் செயற்திட்டம் எனப்படுகிறது. இலக்கைக் குறித்த காலத்தில் எய்த, மேற்கொண்ட பணிகளைச் சரிபார்க்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிடவும் செயற்திட்டம் உதவுகிறது. |
644. Action. Cause of | வழக்கு மூலம் செயற் காரணம் வழக்கிற்கு அடிப்படையாக அமையும் நிகழ்வு. உரிமை வழக்கு, வழக்கு மூலம் எழுகிற இடங்களில் தொடுக்கப்பட வேண்டும். (பி/20, உ.ந.ச./C.P.Act) |
645. Action, Civil | உரிமை நடவடிக்கை உரிமை வழக்கு உரிமையை நிலைநாட்டுவதற்காக நீதி மன்றத்தின் அல்லது நீதிமன்ற அதிகாரம் கொண்ட அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை. |
646. Action, Criminal | குற்ற நடவடிக்கை குற்ற வழக்கு சட்டத்தால் விலக்கப்பட்ட செயலைப் புரிந்தவர் மீது அதற்குரிய சட்டம் விதித்துள்ள தண்டம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க வேண்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. குற்றம் புரிந்தவர் மீது சட்டச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான வழக்கு நடவடிக்கை. |
647. Action taken or thing done | எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட முடிவைப் பெறுவதற்காக அல்லது விளைவை விரும்பி மேற்கொள்ளும் செயல். |
648.Action, Cause Of | வழக்கு மூலம் செயற்காரணம், வினை முதல் என்பன நேர் பொருள். சட்டத்தில் வழக்கு மூலம் என்பதே பொருத்தமான சொல். வழக்கிற்கு மூலமாக அமையக் கூடிய செயல் அல்லது வழக்கு தொடுப்பதற்குக் காரணமாய் அமையும் மூலம் எனலாம். வழக்கு மூலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பிற்கான நீதி மன்றத்தில் செயல்படுத்தக்கூடிய கோரலுக்கான சட்ட நுட்பப் பெயர். இது, வழக்கு தொடுப்பதற்குரிய உரிமையை உருவாக்கும் சட்டம் சுட்டும் தவறாகும். ஆங்கிலத்தில் It is a legally recognised wrong என்பர். நேர் பொருளாகச் சட்டத்தால் ஏற்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட/ ஏற்பளிக்கப்பட்ட என்பனபோல் கூறுவது தவறாகும். அப்படியானால் சில தவறுகளுக்குச் சட்டம் ஏற்பு அளிக்கிறது எனப் பொருளாகும். சட்டத்தால் அடையாளம் காட்டப்படும் தவறுகளையே இது குறிக்கிறது. எனவே, சட்டம் சுட்டும் தவறு எனக் குறிக்கப்பட்டது. ஒவ்வொரு வழக்கு மூலமும் வாதியால் மெய்ப்பிக்கப்படவேண்டிய குறிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இவையாவும் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். |
649. Action, Civil | உரிமையியல் வழக்கு உரிமையியல் நடவடிக்கை தனிப்பட்ட ஆட்கள், அமைப்புகள் நிறுவனங்கள் இடையே உள்ள பாகப்பிரிவினை, சொத்துரிமை போன்ற உரிமை குறித்த கருத்து வேறுபாடுகள், பிணக்குகள், முரண்பாடுகள் தொடர்பான செயற்பாடுகள், வழக்குகள். உரிமையியல் நடவடிக்கை என்பது, உரிமையியல் வழக்கு நடவடிக்கையையே குறிக்கிறது. எனவே, உரிமையியல் வழக்கு என்கின்றனர். ஒருவரால் அல்லது ஒரு நிறுவனத்தால், மற்றொருவர் மீது அல்லது மற்றொரு நிறுவனத்தின் மீது, உரிமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் / தீங்கிழைத்ததாக அலுவல் முறைப்படி சட்ட நீதி மன்றத்தில் கையாள்வதற்காகத் தரும் முறையீடு/ உரிமை நடவடிக்கை அல்லது வழக்கு தனிப்பட்ட தரப்பினரிடையிலான முறையீட்டுடன் தொடங்கும் குற்றம் சாரா வழக்கு உரிமையியல் நடவடிக்கை எனப்படுகிறது. வாதி அல்லது வழக்காடி என்பவர் நீதிமன்றத்தில் முறையீடு பதிபவர். எதிர்வாதி அல்லது எதிர் வழக்காடி என்பவர் முறையீட்டாளரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் காத்துக் கொள்பவர். இதற்கு நேர்மாறாக, ஒரு குற்றவியல் வழக்கு ஒரு குற்றச்சாட்டுரையுடன் தொடங்குகிறது; ஒரு நிறுவனம் அல்லது தனியருக்கு எதிராக அரசாங்கத்தால் வழக்குத் தொடரப்படுவதை உள்ளடக்கியது. |
650. Action, criminal | குற்ற வழக்கு நடவடிக்கை. தனியரால் அல்லது நிறுவனத்தால் தனக்கு அல்லது தன் நிறுவனத்திற்கு ஊறு அல்லது துன்பம் விளைவிக்கும் வகையில் குற்றம் புரிந்ததாக மற்றவர் அல்லது மற்ற நிறுவனத்தின் மீது சட்ட நீதி மன்றத்தில் மேற்கொள்ளப்படும் குற்றம் தொடர்பான வழக்கு நடவடிக்கை. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply