(சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

861. Agreement with the crewகப்பல் பணியாட்களுடனான உடன்பாடு

கப்பல் பணியாளர்களுக்கும் உரிமையாளருக்கும் ஏற்படும் வேலை ஒப்பந்தமாகும்.

பொதுவாகப் பன்னிரு திங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே, புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  

crew  என்றால் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுநர் எனப் பொருள். எனவே, குழு என்றாகிறது. crew என்னும் சொல் கப்பல், படகு, வானூர்தி, விண்கலம் அல்லது  தொடரியில் பணிபுரியும், இயக்கும் அதிகாரிகள் நீங்கலான ஒரு குழுவைக் குறிக்கிறது. எனினும் நடைமுறையில் கப்பல் மீகாமர்கள்(மாலுமிகள்) என்னும் பொருளிலேயே பயன்படுத்துகுகிறோம்.
(S. 2(a) SPFA, 1966)
862. Agreement without considerationகருதுகையற்ற உடன்பாடு  

இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் பிரிவு 25 எழுதிப் பதியப்படாத வரையில் கருதுகையற்ற உடன்படிக்கை செல்லாது என்கிறது.

கருத்தில் கொள்ளப்படாத ஓர் ஒப்பந்தம் பொதுவாகச் செல்லாது; சட்டத்தால் செயல்படுத்த முடியாதது. ஏனென்றால், கருத்தில் கொள்ளுதல் என்பது செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் ஒரு முதன்மைப் பகுதியாகும், மேலும் அஃது இல்லாமல், எந்தவொரு தரப்பினரும் அதற்கு ஈடாக மதிப்புமிக்க ஒன்றைப் பெறுவதில்லை. இருப்பினும், இந்த விதிக்குச் சில விதிவிலக்குகள் உள்ளன.
863. Agreement, expressவெளிப்படை உடன்பாடு

express என்றால் தெரிவித்தல், வெளிப்படுத்தல், சொல்லுதல், பேசுதல், இசைதல் எனப் பொருள்கள். விரைவு என்னும் பொருள் இந்த இடத்தில் பொருந்தாது. உடன்பாட்டின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவது. எனவே, வெளிப்படை உடன்பாடு எனப்படுகிறது.

வெளிப்படை ஒப்பந்தம் என்பது சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஆகும், இதில் விதிமுறைகள் வாய்மொழியாகவோ  எழுத்து மூலமாகவோ வெளிப்படையாகக் கூறப்பட்டு, இரு தரப்பினரும் அவற்றை ஒப்புக்கொள்கிறார்கள்.

வெளிப்படை ஒப்பந்தங்கள் உட்கிடை /மறைமுக/உட்கோள் ஒப்பந்தங்களிலிருந்து வேறுபட்டவை. இதில் விதிமுறைகள் செயல்கள் அல்லது சூழ்நிலைகள் மூலம் தீர்மானிக்கப் படுகின்றன.

வெளிப்படை ஒப்பந்தங்கள் பெரும்பாலும் வணிகப் பரிமாற்றங்கள், சட்ட ஒப்பந்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன
864. Agreement, impliedஉட்கிடை உடன்பாடு

ஒப்பந்தப் பொருண்மைகளை உள்ளார்ந்த முறையில் தெரிவிப்பது உட்கிடை உடன்பாடு.

சட்டமுறை அடிப்படையில், உட்கிடை ஒப்பந்தம் என்பது எழுத்து அல்லது வாய்மொழி உறுதிப்படுத்தலுக்கு மாற்றாகத் தொடர்புடைய தரப்பினரின் நடவடிக்கைகள் அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் சட்டமுறையாகப் பிணைக்கப்பட்ட ஒப்பந்தமாகும்.

வெளிப்படையான ஒப்பந்தங்களைப் போலவே உட்கிடை ஒப்பந்தங்களும் சட்டமுறையாகப் பிணைக்கப்படுகின்றன, அவை வாய்மொழியாக அல்லது எழுத்துமுறையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள். வெளிப்படை உடன்பாட்டிற்கு எதிரானது.

காண்க : Agreement, express
865. Alien  அயல்நாட்டவர்‌;
அயலார்;
அயற்கோளர்

தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கு அறிமுகம் இல்லாதவன்; வேற்றாள், அயலார், வெளியார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வெளிவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வெளியிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமை மாற்று.

சட்ட அடிப்படையில், அயற்கோளர் என்பவர் ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாகவோ நாட்டினத்தவனாகவோ  இல்லாத ஒருவர் அல்லது அமைப்பு. வெளிநாட்டில் பிறந்தவர், அல்லது அவர்கள் வசிக்கும் நாட்டின் குடிமகனாக அல்லாமல் வேறொரு நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒருவரை அயல்நாட்டடவர் என்பது குறிக்கிறது.

இச்சொல்லுக்கான வரையறை, அவற்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் சட்ட அமைப்புகளில் மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில், அயலாள் என்பது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லாத ஒருவர். அமெரிக்காவில், அயலாள் 1940 முதல் பதிவு செய்ய வேண்டும், மேலும் வேலைவாய்ப்பு பெறுவதற்குப் பச்சை அட்டைகள்(Green Cards)  எனப்படும் பதிவு அட்டைகள் தேவை.

அயலார் உள்ளூர் சட்டங்களின் கீழ் வரம்புகளுக்கு உட்பட்டிருந்தாலும், அவர்கள் அமெரிக்க அரசியலமைப்பால் பாதுகாக்கப் படுகிறார்கள்.

இதில் உரிமைகள் வரையம்(Bill), 14 ஆவது திருத்தத்தின் சரியான செயல்முறை பிரிவு ஆகியவை அடங்கும்.
866. Alien enemyபகை நாட்டவர்

அயலகப் பகைவர்

 அயல்நாட்டுப்‌ பகைவர்‌;

அயற்கோள் பகைவர்    

போர்க் காலங்களில் ஓர் அயலகப் பகைவர் அவர் வாழும் அல்லது வேலை செய்யும் நாட்டுடன் போரில் ஈடுபடும் வேறு நாட்டின் குடிமகன் அல்லது நாட்டவன். அவர் கட்டுப்பாடுகள் அல்லது தடுப்புக்கு உட்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் 1798 ஆம் ஆண்டின் அயலாள் எதிரிகள் சட்டம்(Alien Enemies Act of 1798) எதிரி நாட்டின் குடிமக்கள் அல்லது பூர்வீகவாசிகளை விசாரணையின்றி தடுத்து வைக்க அல்லது நாடு கடத்துவதற்கான அதிகாரத்தை நாட்டின் தலைவருக்கு வழங்குகிறது. இந்தியாவில், ஒன்றிய அரசின் இசைவின்றி இந்தியாவில் வசிப்பவர் அல்லது இந்தியாவுடன் போரில் ஈடுபடும் வெளிநாட்டில் வசிப்பவர்தான் அயலகப் பகைவர். இத்தகையோர் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர இசைவு இல்லை
867. allegationசாட்டுரை

பழி சுமத்தும் கூற்று

குறை கூறல்

சார்த்துரை

குறைகூறுதல்

பழியுரை

குற்றச்சாட்டு

சாடல், மெய்ப்பிக்கப்படாத குற்றச் சாட்டு

இடுவந்தி, குற்றமில்லாதவர்மேற் குற்றத்தையேற்றுகை ‘பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க’. (சிலப்பதிகாரம் 6.120,அரும்பதவுரை) என இடம் பெற்றுள்ளதை அறிக.

ஒருவர் சட்டமுரணாக  அல்லது தவறு செய்ததாகக் கூறப்படும் ஒரு கூற்று. ஒருவருக்கு எதிரான முறையான குற்றச்சாட்டு. Accusation என்பதற்குப் பொருத்தம். 
868. allocaturஏற்றுக் கோடல்

அனுமதிப்பு
அனுமதிப்பு தமிழ்ச்சொல்லே. ஆனால் permission/ permittee எனக் குழப்பம் கொள்ளக் கூடாது. எனவேதான் ஏற்றுக் கோடல் – ஏற்றுக் கொள்ளுதல்  எனப் படுகிறது.

ஒதுக்கீடு என்பர். நிதி ஒதுக்கீடுபோல் தவறாகக் கருதலாம். 

நீதிமன்றம், முறையீடு, மனு, மேல் முறையீடு, சிறப்பு இசைவு மனு முதலியவற்றை ஏற்பதைக் குறிக்கிறது.


இலத்தீன் தொடர்.
869. arguendoவாதத்திற்காக

வாதத்தின் தொடக்கத்தில் அவற்றின் தாக்கங்களை ஆராயும் உய்த்துரைகளை விவரிக்க சட்ட, கல்வி அமைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

வழக்குரைஞர்கள், நீதிபதிகள் ஒரு புள்ளியின் தாக்கங்களை ஆராய விரும்பும் போது அஃது உண்மை என்பதை ஏற்காமல் வாதத்திற்காக பயன்படுத்து கின்றனர்.

எடுத்துக்காட்டு: “குற்றச்சாட்டுகள் உண்மை என்று கருதி வாதிடவும்” எனச் சொல்லப்படுவது.

இலத்தீன் தொடர்.
870. alter egoமறுபுற தான்மை

‘ஈகோ’ என்பது தான் என்னும் தற்செருக்கால் விளைவது. ஆதலின் தான்மை எனலாம்.


ஒருவருக்குள் இருக்கும் மற்றோர் அடையாளத்தை இத்தொடர் குறிக்கிறது. எனவே, ஆளுமையின் மறுபக்கம் எனலாம். ஆனால் ஆளுமை என்பதை விட அகநிலை, தான் என்னும் எண்ணத்தைக் குறிப்பதால் மறுபுற தான்மை என்று சொல்வது சரியாக இருக்கும்.

முதலில் நான்மை எனக் குறிப்பிட்டிருந்தேன். எனினும் அது quadriplex என்று பொருள்மயக்கத்தைத் தரும் என்பதால் பொருத்தமான தான்மை என்பதைக் குறித்துள்ளேன்.

இலத்தீன் தொடர்.