(சனாதனம் – பொய்யும் மெய்யும் 81 தொடர்ச்சி)

  • இதற்குப் பேரறிஞர் அண்ணாவின் உரைகளைக் காண்போம். (மே பதினேழு இயக்கம், வினவு,18.09.2023)

“ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாகக் கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் எனக் கருதி, சென்னை நீதிமன்ற நீதிபதிகள் 1941-இல் கொடுத்த தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறோம்” – எனப் பேரறிஞர் அண்ணா மனுதருமப் பிரிவுகளையும், அதன்படி அமைந்த தீர்ப்பையும் விளக்குகிறார்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை என்கிறது மனுதருமம்”. பிராமணர் உருவாக்கிய சாத்திரத்தின் மேல் இந்துச் சட்டம் கட்டப்பட்டிருந்தது என்பதற்கு  1941-இல் நடந்த வழக்கை எடுத்துக் கையாள்கிறார் பேரறிஞர் அண்ணா.

 வழக்குரைஞராக இருந்த சானகி இராமமூர்த்தி என்னும் பார்ப்பனருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பிராமணப் பெண். இரண்டாம் மனைவி சூத்திரப் பெண். அவர் இறந்து விடுகிறார். அதனால் இரண்டாவது மனைவி, தன் இரண்டு குழந்தைகளுக்கும், தனக்கும் லாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கொடுக்குமாறு முதல் மனைவி மீது வழக்குத் தொடர்ந்தார். மாவட்ட நீதிபதி சூத்திர மனைவிக்கு உரூ 20 வாழ்க்கைப்படி கொடுக்கவும் தீர்ப்பளிக்கிறார். முதல் மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். பிராமண நீதிபதிகள் விசாரித்து இந்தத் திருமணம் செல்லாது என மனுதருமப்படி தீர்ப்பு கூறுகின்றனர்.

 “பிராமணனால் சூத்திரப் பெண்ணிடத்தில் பிள்ளை பிறந்தால், அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை” என்பது மனுதரும சாத்திரம். இந்த மனுசாத்திரத்தின் மேல் கட்டப்பட்டதே அப்போதைய நீதியாக இருந்தது என்பதைச்  சுட்டிக் காட்டுகின்றார்.

பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகம் ஆகாததால், அந்தப் பிள்ளை உயிரோடிந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” இதனால் தந்தையின் கருமத்தில் சூத்திர மகனால் பங்கு பெற இயலாது. அதனால் அவனால் சொத்து பெற இயலாது. நான்கு பிரிவுகளிலே பெண்களையும் சேர்க்காததால் பெண்களினமும் சொத்து பெற முடியாத நிலையை விளக்கிக் கூறுகிறார் அண்ணா. நம் பெண் சமூகம் சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடந்ததற்குக் காரணம் ஆரியக் கொடுமையே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பேரறிஞர் அண்ணா.

மனுதருமம் நிகழ்த்திய அநீதியை இன்னொரு வழக்கின் மூலமாகவும் சுட்டிக் காட்டுகிறார். ஒரு சூத்திர ஆணை ஒரு சூத்திரப் பெண் மூன்று மாதக் கருவை சுமக்கும் போதே ஏமாற்றி மணந்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்ததும் திருமண விடுதலைக்கு அந்த ஆண் வழக்கு தொடுக்கிறார். ஆனால் நீதிபதி, ஒரு சூத்திரர் பரத்தமை(விபச்சார)க் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமை இல்லை என்று தீர்ப்பளித்து விடுகிறார். இவ்வாறு சூத்திரனுக்கு ஒரு நீதி, பிராமணனுக்கு ஒரு நீதி என்பதையே மனுதருமம் நிலைநாட்டி வைத்திருந்ததை, அண்ணா இரண்டு வழக்குகளின் ஊடாகவும் மெய்ப்பிக்கிறார்.

இதுவே வினாவிற்கான விடையாகும்.

எனினும் இக்காலத்திற்கேற்ற மற்றொன்றையும் பார்க்கலாம்.

பசுக்கொலை புரிவோருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர்வேதம் கூறுகிறது. ஆனால், திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு உணவாகப் படைக்கப்பட்டதாக இரிக்கு வேதம் கூறுகிறது. இந்திரனுக்குக் காளைகள் படைக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உணவாக அளிக்கப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன. அப்படியானால் மரணத்தண்டனை என்பது பிராமணர் அல்லாதாருக்கு மட்டுமே என்பதைப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காகவும் விற்பனைக்காகவும் கொண்டு செல்லும் பசுமாடுகளை வதை செய்வதாகக் கூறி அப்பாவி மக்களைக் குறிப்பாக இசுலாமியர்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் செய்கின்றனர் இந்துப் பயங்கரக் கட்சியினர். அதே சமயம் அவர்களின் இந்திய அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே  முதலிடத்தில் உள்ளது. அஃதாவது பிற வருணத்தார் பசுவை என்ன செய்தாலும் தண்டனை. அதே நேரம் பாசக அரசு மாட்டிறைச்சியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போற்றுதற்குரியது. மாடுகளைக் கொல்லாமலா இறைச்சி கிடைக்கிறது?. காலங்கள் மாறினாலும் சனாதனம் மாறவில்லை என்பதற்கு இதுவே சான்று. எனவே, அப்பொழுது அப்படி இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை என்றெல்லாம் சொல்வதில் பயனில்லை. தங்களுக்கொரு நீதி. பிற வருணத்தாருக்கொரு நீதி என்னும் அநீதிதான் வருணாசிரமம்.

சனாதனம் இப்போதும் உள்ளது என்பதற்கான உண்மை நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்.

குசராத்து மாநிலத்தின் தகோத்து (Dahod or Dohad) வட்டத்தைச் சேர்ந்தவர் பில்கிசு பானு(Bilkis Bano) இப்பெண்மணி தன் 3 அகவைக் குழந்தையுடனும் குடும்பத்தினருமாக 16 பேர், சபர்வாத்து என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, 03.03.2002 அன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கும்பல், பில்கிசு பானுவின் 3 வயது குழந்தை சலீகா முதலான  14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. பால்மணம் மாறா 3 அகவைக் குழந்தை சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கருவைச் சுமந்திருந்த பில்கிசு பானுவை, 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது .

இது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்திருந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குசராத்தில் உள்ள கோத்துரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சனாதன அரசால் சனாதன வாதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது பாசக சனாதன வாதிகள் அவர்களுக்கு  மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே “அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று பாசக ச.ம.உ. ஒருவர் அறிக்கை வெளியிட்டார்.

இவையாவும் சனாதனம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு அடையாளங்களே.

  • (தொடரும்)