(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி)

து.வரதராசா, செவ்வி, சிரீகந்தராசா  : thalaippu - thu.varatharasa_sreekantharaasa

5

இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா?

து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று.

இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்!

து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள். “இப்படி அந்த இடம் இருக்கின்றது. அதில் போனால்தான் உண்மை வரும் என்றால் நாங்கள் அந்த இடத்திற்கும் உன்னைக் கொண்டு போக வேண்டிய வேளை வரும்” என்று.

இர.சிறீகந்தராசா: அங்கே என்ன நடக்கும் என்று கூறுவார்கள்?

து.வரதராசா: விளக்கமாகச் சொல்லவில்லை. ஆனால், மற்ற ஆட்கள் சிலருக்குக் கொண்டுபோய்த் தண்டனை கொடுத்ததைப் பார்த்திருக்கின்றேன். அவர்களுடன் கதைத்ததன்படி, ஒரு பெரிய அறை. அதில் மேசைகள், கம்பிகள், ஆட்களை அடிப்பதற்கான கருவிகள் – இரும்புத் துண்டுகள், எசுலோன் நெகிழிக் குழாய்கள், கட்டித் தூக்குவதற்கு மேலே எல்லாம் கயிறுகள் தொங்கிக் கொண்டிருக்கும். இப்படியான துய்ப்புகளைப் (அனுபவங்களை) பகிர்ந்து கொண்டார்கள். சிலரைக் கொண்டு போய் அடித்துப் போட்டுக் கொண்டு வந்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். உசாவலின் பின்பு அவர்கள் எங்களை முற்று முழுதாகப் புரிந்து கொள்வதற்கு நாள் ஆனது. ஆனால், நாங்கள் – எல்லா மருத்துவர்களுக்கும் இந்த உசாவலில் ஏறத்தாழ ஒரே நிகழ்வு, ஒரே கதை இருந்தது. அவர்களுக்குத் தொடக்கத்தில் ஐயங்கள் கடுமையாக இருந்தாலும் பின்பு நாங்கள் சொல்வது உண்மை என்பதைப் புரிந்து கொண்டார்கள். பின்பு, எமது நலவாழ்வுத் திணைக்களத்திற்குப் போய் நாங்கள் சொன்ன ஆவணங்கள், எங்களுடைய கடிதங்கள் எல்லாம் இருக்கின்றனவா, நாங்கள் சொன்னவையெல்லாம் சரிதானா என்று ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

இர.சிறீகந்தராசா: இறுதியாக நீங்கள் இந்த வதையில் இருந்து – வதைமுகாமில் இருந்து எவ்வாறு வெளியில் வந்தீர்கள்?

து.வரதராசா: உண்மையில் மற்ற கைதிகள் போன்று எங்களுடைய கைதும், நிலைமையும் இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, குற்றப் புலனாய்வுத் துறையினர் எங்களைக் கைது செய்திருந்தால், அவர்களுடைய உசாவலின் பின்பு எங்களுடைய குற்றங்கள் ஒன்றும் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அவர்கள் விட்டிருப்பார்கள். ஆனால், எங்களை உசாவிய குற்றப் புலனாய்வு அலுவலர் சொன்னார்,  எங்களுடைய விடுதலை அவர்களுடைய கையில் இல்லை என்றும், “நீங்கள் அரசியல் கைதிகளாகக் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய விடுதலை மேலிடத்தில் இருந்துதான் வர வேண்டும்” என்றும். ‘மேலிடம்’ என்று அவர் குறிப்பிட்டது குடியரசர் (சனாதிபதி) அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்ச. “அவர்களுடைய ஒப்புதல்தான் வேண்டும் உங்களை விடுவதற்கு” என்றும், “அதற்குரிய காலம் வரை நீங்கள் இருக்க வேண்டும்” என்றும் கூறினார். பின்பு, குற்றப் புலனாய்வு ஆட்களுக்கு ஒரு நிலைப்பாடு இருந்தது. மருத்துவர்களைக் கைது செய்து வைத்திருந்து நியாயமே இல்லாமல் எங்களுடைய வாழ்க்கை கெடுவதோடு, அதே நேரம் நாங்கள் வெளியில் இருந்தால் மக்கள் பலருக்குப் பண்டுவம்(சிகிச்சை) அளிக்க முடியும் என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்களுடைய கையில் எங்களுடைய விடுதலை இல்லை என்பதைப் பல தடவைகள் சொல்லியிருந்தார்கள்.

 பின்பு, படையினருடைய புலனாய்வு அலுவலர் (military intelligence) ஒருவர் எங்களுடைய விடுதலையை ஒருங்கிணைக்கப் பணியமர்த்தப்பட்டிருந்தார் – அல்லது அவர் வந்தாரா தெரியவில்லை. அவர் வந்து தொடக்கத்தில் எங்களுடைய கைதுபற்றித் தங்களுடைய – குற்றப்புலனாய்வினுடைய – சட்ட திட்டங்களைப் பற்றி விளங்கப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவருடைய கருத்து, ஏறத்தாழ எங்களை வன்கொடுமை(பயங்கரவாத)த் தடுப்புச் சட்டம் மூலம் ஓர் ஆண்டும், அதற்குப் பின்பு நீதிமன்றத்தில் எங்களை நிறுத்தி, நீதிமன்றச் சட்டங்கள் மூலம் மேற்கொண்டு எங்களுக்கு மூன்று நான்கு ஆண்டுகளுக்குத் தண்டனையும் தர முடியும் என்ற வகையில் ஏறத்தாழ நான்கு ஐந்து ஆண்டுகள் எங்களைச் சிறையில் வைத்திருக்க முடியும் என்று சொல்லி விளங்கப்படுத்தினார். அதே நேரம், நாங்கள் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், குடியரசர் (சனாதிபதி) அல்லது கோத்தபாய இராசபக்சவின் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில் உண்மையாக இந்த இலங்கை அரசு வாகரையிலும் சரி, முள்ளிவாய்க்காலிலும் சரி, அந்தப் போரை ஓர் இருண்ட உலகத்திற்குள் செய்யத்தான் வெளிக்கிட்டிருந்தார்கள். பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் வெளியில் அனுப்பிவிட்டு, செய்தியாளர்களும் இல்லாமல் – ங்கே நடக்கின்ற இறப்புகள், அழிவுகள் ஒன்றும் வெளியில் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆனால் நாங்களும், மற்ற மருத்துவர்களும்தான் அந்த உண்மையை வெளியில் கொண்டு வந்தோம். அந்த அடிப்படையில் குடியரசர், கோத்தபாய இராசபக்ச ஆகியோர் எங்களிடம் சினத்தில் இருந்ததாக அவர் எங்களுக்கு விளங்கப்படுத்தினார். “ஆகவே, நான் போய் உங்களுடைய விடுதலையைப்பற்றி இந்த நேரத்தில் கதைக்க முடியாது. நீங்கள் அவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய மாதிரி ஏதாவது செய்தால்தான் நான் உங்கள் விடுதலையைப் பற்றிக் கதைக்க முடியும்” என்று கூறினார். அதற்காக அவர்கள் இதற்கெனவே ஊடகச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், முன்பு சொன்ன செய்திகள் எல்லாம் புலிகளுடைய அழுத்தம் காரணமாகச் சொன்னதாக அதில் சொல்ல வேண்டும் என்றார். அதற்குரிய சில விளக்கங்களையும் அவர் கொண்டு வந்தார். குடிமக்கள் யாரும் இறக்கவில்லை (zero causalities), மருத்துவமனையில் தாக்குதல் நடக்கவில்லை. இன்னின்ன மாதிரித்தான் அது நடந்திருக்கும் எனத் தங்களுடைய கண்காணிப்புப்படி என்று ஒரு பொய்யை நேரே சொல்லுங்கள் என்று நேரே அழுத்தம் தராமல், ஒரு புதிய விளக்கத்தைக் கொண்டு வந்து, “நீங்கள் இதைச் சொன்னால்தான் வெளியில் போகலாம்” என்ற ஒரு கட்டம். அல்லது, “நீங்கள் நான்கைந்து ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்” என்ற ஒரு முடிவு சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் போனால்தான் நாங்கள் வெளியில் வரலாம் அல்லது உள்ளுக்குள் இருக்க வேண்டும் என்று சுருக்கமாக எங்களுக்குச் சொல்லியிருந்தார். அதிலும், அந்தச் செய்தியாளர் சந்திப்புக்கு வருகின்ற செய்தியாளர்கள் பெரும்பாலும் அரச ஊடகங்களில் இருந்துதான் வருவார்கள்.

  குறிப்பிட்ட கேள்விகளும் – பெரும்பாலும் ஆட்கள் என்ன கேட்பார்கள் என்பதும் – எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி அந்தச் செய்தியாளர் சந்திப்பு நடந்து மூன்று நான்கு கிழமைக்குள் எங்களை விடுதலை செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இர.சிறீகந்தராசா: உங்களை அவர்கள் மிரட்டிய பொழுது ஓர் ஆண்டு வன்கொடுமைத் (பயங்கரவாத) தடைச்சட்டத்தின் கீழும், பின் நீதிமன்றப் பிரிவின் கீழும் உங்களை அடைத்து வைக்கலாம் என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில், வன்கொடுமைத் (பயங்கரவாத) தடைச்சட்டத்தின் பிரிவுகள் ஏதாவது குறிப்பிட்டுக் கூறினார்களா, அல்லது மேலெழுந்தவாரியான ஒரு மிரட்டலா?

து.வரதராசா:  மேலெழுந்தவாரியாகத்தான் எங்களுக்குக் கூறியிருந்தார்கள். தொடக்கத்தில் – அந்த ஓராண்டு வைத்திருக்கலாம் என்பது – வன்கொடுமைத் தடைச்சட்டத்தில் இருக்கின்றது. உசாவல் இல்லாமல், நீதிமன்றத்திற்குக் கொண்டு போகாமல் ஓராண்டுக்கு வைத்திருக்கலாம். அதற்குப் பிறகு எத்தனை ஆண்டுகள் – எங்களுக்கு மூன்று நான்கு ஆண்டுகள் தண்டனை தரப்படலாம் – என்பதை எழுந்தமானமாகத்தான் அவர் சொன்னார்.

இர.சிறீகந்தராசா: இந்தக் காலப் பகுதியில் உங்களுடைய உறவினர்கள் எவராவது உங்களை வந்து பார்ப்பதற்கு விடப்பட்டார்களா?

து.வரதராசா: ஆம். எங்களுக்கு மட்டுமில்லை, கைதிகள் எல்லாரையும் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களுடைய உறவினர்கள் இரண்டு பேர் வந்து பார்க்கலாம். அது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. அப்படி என்னுடைய மனைவி, பெற்றோர், உறவினர்கள் வந்து பார்க்கக்கூடியதாக இருந்தது.

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

 

 

நன்றி: ஈழமுரசு

https://it-it.facebook.com/1706337189599614/videos/1789730747926924/

தரவு: பதிவு

http://www.tamilarul.com/?p=23541

பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan