சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி)
6/6
இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்?
து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும்.
இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்?
து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான் நாங்கள் நலவாழ்வுத் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டோம்.
இர.சிறீகந்தராசா: தமிழீழத்திலும் சரி, சிங்களப் படைகளின் தடுப்புக் காவலிலும் சரி, பின்னர் வெளியில் வந்த காலப்பகுதியிலும் சரி – உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்ன?
து.வரதராசா: எனக்கு மறக்க முடியாத நிகழ்வுகள் ஓர் ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன. ஏனென்றால், நான் வாகரைக்குப் போனது, ஈச்சிலம்பற்றில் வேலை செய்தது, அதன் பின்னர் சண்டை நடந்த விதங்கள், சிறு பிள்ளைகள் கொல்லப்பட்டமை, முதியவர்கள் கொல்லப்பட்டமை, அவர்கள் இறந்து கிடந்த காட்சிகள், நான் பார்த்துக் கொண்டிருந்தபொழுதே ஆட்கள் இறந்த நிகழ்வுகள் எல்லாம் – அப்படி நிறையவே இருக்கின்றன. மக்களின் இடப்பெயர்வு, பட்டினி, வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் ஆட்கள் சாவது எல்லாம் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். எமது மருத்துவமனைகள் தாக்கப்படுவது, நோயாளர்கள் – ஏற்கெனவே காயமடைந்திருந்தவர்கள் – இறந்தது. மருத்துவமனைக் கட்டடங்கள் எல்லாம் தாக்கப்பட்டமை, இடப்பெயர்வில் மக்கள் பட்ட கொடுமைகள், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயரும்பொழுது அவர்கள் ஓடிய முறைகள், அந்த இடங்களில் விமானத் தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்களால் இறக்கும்பொழுது மக்கள் துடித்துப் பதுங்கு குழிக்குள் போனமை… கனக்கச் சொல்ல முடியாத – எதையுமே மறக்க இயலாது. ஒவ்வொரு சூழலிலும், எந்தவொரு சொல்லை எடுத்தாலும் அந்தச் சொல்லில் மனதைப் பாதிக்கும் நிகழ்வு ஒன்று நடந்திருக்கும். மருந்து என்றால், மருந்து சம்பந்தமான நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கும். மருத்துவமனை என்றால் மருத்துவமனைத் தாக்குதல் நினைவுக்கு வரும்.
நான் பத்து மருத்துவமனைகளில் வேலை செய்திருக்கின்றேன். எல்லா மருத்துவமனைகளும் தாக்கப்பட்டிருந்தன. அப்படித் தாக்கப்படும்பொழுது ஊழியர்கள், காயமடைந்தவர்கள் இறப்பது, மக்கள் அல்லோலகல்லோலப்படுவது எல்லா நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன. கொடுமையான செய்திகள், மிக உச்சமான கொடும் செய்திகள் – கருவுற்ற பெண்கள் வயிற்றில் காயப்படும்பொழுது அவர்களுடைய வயிற்றிலுள்ள கரு கூட இறந்தது. நாங்கள் அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) செய்யும் பொழுது – அந்தப் பிள்ளையை வெளியே எடுக்கும்பொழுது – அந்தப் பிள்ளையுடைய தலைக்குள் ஒரு பக்கத்தில் பட்டு மற்ற பக்கத்தில் வந்து இறந்தது; காயமடைந்த கருவுற்ற பெண்களுடைய வெளியில் வரும் குண்டு(செல்) துண்டுடன், கருவில் இருந்த கை வெளியில் வந்தது; அப்படியான படங்கள் கூட என்னிடம் இருக்கின்றன. இப்படியான நிகழ்வுகள் எல்லாம் நிறையவே நடந்திருக்கின்றன.
மற்றையவை, சில குண்டுகள் – பெரிய ஆர்.பி.சி (RPG) செல் – காலைத் துளைத்துக் கொண்டு போய் வெடிக்காமல் மருத்துவமனைக்கு வந்தது, இரண்டு காலும் இல்லாமல் வந்தது, இப்படி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன. சில காயங்கள் – தலைக் காயங்கள் எல்லாம் பட்டு, அவர்களுடைய மூளை இறந்து, அவர்கள் இறப்பதற்குச் சில மணி நேரங்கள் எடுத்துக் கொண்டு, பண்டுவம் (சிகிச்சை) பார்க்க முடியாமல், அவர்களுடைய சாவுக்கு நேரத்தைக் குறித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வுகள் கூட நிறையவே இருக்கின்றன.
இர.சிறீகந்தராசா: இன்று நீங்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கின்றீர்கள். புலம்பெயர் நாட்டிலிருந்து செனீவா சென்று ஐ.நா., வரை பல இடங்களிலே ஒரு சான்றுரைஞராக (சாட்சியாக) இருக்கின்றீர்கள். இது பற்றியும், நீங்கள் செய்யும் ஏனைய பணிகளைப் பற்றியும் கூறுங்கள்!
து.வரதராசா: நான் முதலில் சொன்னது போல் இலங்கையில் விடுதலை ஆகிய பின்பும் கூட இலங்கை அரசுடைய அழுத்தம், அவர்களுடைய புலனாய்வுப் பிரிவு (military intelligence), அந்த ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றின் அழுத்தங்கள் இருந்தன. அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை மறைப்பதற்காக எங்களைச் சான்றுரைஞர்களாக(சாட்சிகளாக) – திரிவுபடுத்தப்பட்ட சான்றுரைஞர்களாக மாற்றியிருந்தார்கள்.
எடுத்துக்காட்டாக, அலைவரிசை-௪ (Channel-4) ஒரு காணொளி(வீடியோ) வெளியிட்டால், அது நடக்கவில்லை என்கிற தொனியில் எங்களைப் பயன்படுத்தி அதற்கொரு எதிர் காணொளி செய்வார்கள். தருசுமான் அறிக்கை வந்தால் அதில் குறிப்பிட்ட படையினர் குற்றம் செய்ததாகச் சுட்டிக்காட்டப்படும் நிகழ்வுகளை அவர்கள் செய்யவில்லை என்பதாக எங்கள் மூலம் மறுப்பு அறிக்கைகள் செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு எங்களைப் பின்தொடர்வதாகக்கூட எனக்குச் சில இடங்களில் உணர முடிந்தது. இலங்கையில் இருப்பது பொருத்தமில்லை என்ற ஒரு நிலைப்பாட்டின் மூலம் நான் அமெரிக்காவிற்கு வந்திருக்கிறேன். இங்கே வந்த பின்பும், அங்குள்ள எமது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சில நேரங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனாலும் எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும், மக்களுடைய சிக்கல்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து வைத்திருக்கிறேன். அதன் அடிப்படையில் எல்லா நாடுகளிலும் நடக்கின்ற மனித உரிமைகள், இன அழிப்பு போன்ற மாநாடுகளுக்கு அழைக்கின்ற பொழுதெல்லாம் நான் போவேன். போய் அங்கே நடந்த உண்மையான நிகழ்வுகளை நான் அந்தந்த இடங்களிலே தெரியப்படுத்தியிருக்கிறேன். அதன் மூலம் எங்கள் மக்களுக்கு இருக்கின்ற அடிப்படைச் சிக்கலான இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது ஓர் ஆவல். இதற்கு நீண்ட காலம் எடுக்குமோ, அல்லது விரைவாக நடக்குமோ என்று தெரியவில்லை. ஆனால், எங்களுக்கு இதைவிட வேறு வழியும் இல்லை. இப்பொழுது உலக நாடுகளை நம்புவதைத் தவிர எங்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் அங்கு நடந்த கொடுமைகளுக்கும் பன்னாட்டு உசாவல்(விசாரணை) மூலம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதைத் தவிர்த்து உள்ளக உசாவலோ வேறெந்த உசாவல் பொறிமுறைகளோ எங்களுக்குப் பொருத்தமாக இரா.
அதே நேரம் அந்த உள்ளக உசாவலில் நிறைய ஐயங்கள் இருக்கின்றன. மக்கள் போய்ச் சான்றுரைக்க(சாட்சி சொல்ல) முடியாது. இலங்கை அரசினுடைய கட்டமைப்பு, சான்று சொல்பவர்களை மிரட்டுவது, அவர்களை அழிப்பது, அல்லது சான்று கூறப் போக முடியாமல் தடைகளை ஏற்படுத்துவது போன்றவை நிறைய இடங்களில் நடந்திருக்கின்றன. அதனால் இலங்கையில் அந்த உள்ளக உசாவலை மேற்கொள்வதில் எந்தவிதமான பயனும் இருக்காது. அதே நேரம் இங்கே இருக்கின்ற சான்றுரைஞர்கள் நானோ இங்கே இருக்கின்ற மற்றவர்களோ இலங்கைக்குப் போய்ச் சான்று சொல்ல முடியாது. இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு உசாவலைத்தான் மேற்கொள்ள வேண்டும். அதுதான் எங்களுக்குப் பொருத்தமான வழியாக இருக்கும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிடும் இந்தப் பன்னாட்டு நீதி உசாவல் மூலம் என்ன விளைவு ஏற்பட வேண்டும் – அதாவது இதன் விளைவாக என்ன நடக்க வேண்டும் – என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
து.வரதராசா: எங்களுடைய நாட்டுச் சிக்கல் – தமிழருக்கான சிக்கல் – அண்மையில் வந்தது இல்லை. இது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிக்கல். இந்த உசாவலின் மூலம் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற சிக்கலை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் தம் விருப்பப்படி வாழ்வதற்கு அரசியல் சார்ந்த ஒரு தீர்வு, அதற்குரிய ஒரு முடிவு இந்த உசாவலின் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அதே நேரம், தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழித்தவர்களுக்கு – இந்த இன அழிப்பைச் செய்தவர்களுக்கு – ஒரு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்! இந்தப் போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் எல்லோரும் – அதில் தொடர்புடையவர்களும் – இந்த உசாவல் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.
இர.சிறீகந்தராசா: இங்கே புலம்பெயர்ந்து வாழ்பவர் என்கிற வகையில் தமிழர்கள் பலரை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நீங்கள் இன்றைய சூழலில் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
து.வரதராசா: புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் பல இடங்களில் நல்லவகையான பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பங்களிப்புத்தான் எமது இலங்கைத் தமிழ் மக்களுடைய சிக்கலைப் பன்னாட்டு அளவில் இப்பொழுது ஒரு பெரிய, நல்ல முன்னேற்றகரமான கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றது. ஆனால், ஒரு கவலையான விடயம். சில தமிழ் அமைப்புக்களும் புலம்பெயர்ந்த மக்களும் தங்களுக்குள் உள்ள சிறு சிறு கருத்து முரண்பாடுகள் காரணமாக, அல்லது வேறு சில தேவைகள் காரணமாகக் கொள்கை அளவிலோ சிற்சில தேவைகள் அடிப்படையிலோ பிரிந்து இருப்பதைக் காண முடிகிறது. தங்களுடைய கட்சி அல்லது அமைப்பு சார்பான தனிப்பட்ட கொள்கைகளை விடுத்து, தமிழ் மக்களுக்குரிய – அதுவும் இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களுக்குரிய – விடிவை நோக்கி, அந்தத் தேவையை முன்னிறுத்தி எல்லோரும் ஒன்றுபட வேண்டும்; அதன் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து இயங்க வேண்டும் என்பது என்னுடைய ஆவலாக இருக்கின்றது. ஆனாலும் மகிழ்ச்சிக்குரியவை நிறையவே இருக்கின்றன. எல்லோருமே நன்றாகப் பாடுபட்டு, தங்களுடைய சொந்த வேலைகளையும் விடுத்து மிகவும் ஒப்படைப்புணர்வுடன் பலவற்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைப்பாட்டினால்தான் இப்பொழுது இலங்கைச் சிக்கலை உலகம் ஏதோவொரு வழியில் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை!
இர.சிறீகந்தராசா: இன்று புலம்பெயர்ந்த சூழலிலே உங்களுடைய தனிப்பட்ட வாழ்வு எவ்வாறு இருக்கின்றது?
து.வரதராசா: எனக்கு மட்டுமில்லை, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வன்னியில் இருந்து வந்த எல்லோருக்கும் இருக்கின்ற நிலைப்பாடு இதுதான் – இங்கே வந்த எங்கள் ஒருவருக்கும் மன நிறைவு இல்லை. அங்கே இருந்தபொழுது நாங்கள் செய்த வேலைகள், எங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஒரு மனநிறைவையும், அமைதியையும் தந்தன. அஃது ஒன்றுமே இல்லாத ஓர் உணர்வுதான் எங்களுக்கு இப்பொழுது இருக்கின்றது. திரும்பவும் நாம் அந்த இடத்திற்குப் போய் ஒரு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு வந்தால், அஃது ஒரு நிறைவான வாழ்க்கையாக அமையும் என்று நினைக்கின்றேன். அதே நேரம், நாங்கள் இப்பொழுது திடீரென வெளிநாட்டிற்கு வந்தது எங்களுக்குச் சூழல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திற்கு நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதற்குக் கொஞ்ச காலம் எடுக்கின்றது. காலப்போக்கில் இது பொருத்தமாக வரும் என்று நினைக்கின்றேன். ஆனாலும் எங்களுடைய ஊரில் இருக்கின்ற மன நிறைவு கிடைப்பதில்லை.
இர.சிறீகந்தராசா: நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள், புலம்பெயர்ந்த நாட்டிலே?
து.வரதராசா: நான் எனது மருத்துவ வேலையைத் தொடர்வதற்காக அமெரிக்காவில் தேர்வுகளை எழுத வேண்டும். மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றேன். தற்காலிகமாக இன்னொரு வேலையும் செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பம், பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்திருக்கின்றார்கள். மற்றபடி, பெரும்பாலான நேரங்களில் எமது மக்களுக்கான போர்க்குற்ற உசாவல், மனித உரிமைகள் தொடர்பாகச் சான்றுரைத்தல் போன்றவற்றுக்காகப் பல நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றேன்.
இர.சிறீகந்தராசா: நல்லது மருத்துவர் வரதராசா அவர்களே! உங்களுடைய நேரத்தை ஒதுக்கி இந்தச் செவ்வியைத் தந்தமைக்காக நன்றி!
து.வரதராசா: நன்றி! வணக்கம்!
நன்றி: ஈழமுரசு
தரவு: பதிவு
https://it-it.facebook.com/1706337189599614/videos/1789730747926924/
Leave a Reply