சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை முன்னுரையும்
(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி)
சுவைத் தமிழின் மூதறிஞர்
மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில்
மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த
நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர்
நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும்
குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள்
கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம்
முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்!
மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்!
உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும்
உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில்
கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக்
களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்!
வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்!
வாழ்வுவளம் எல்லாமுமு் தமிழே என்பார்!
வரலாறு படைத்துள்ள பழனி வேலர்
வளர்தமிழாய் வாழ்வாங்கு வாழ்க! வாழ்க!
– முனைவர் கடவூர் மணிமாறன்
000
திருத்துறைக் கிழார் கட்டுரைகள்
முன்னுரை
திருத்துறைக்கிழார் என்ற புனைபெயருடன் வாழ்ந்த என் அப்பாவும், தனித்தமிழரிமா, தமிழிசைச் செம்மல், செந்தமிழ்க் காவலர் எனப்போற்றப் பெற்றவருமான புலவர் விழல்குடி. பொதியப்பன். பழனிவேலனார் அவர்களுடைய கட்டுரைகளின் முதல் தொகுதி, அவர் இயற்கை எய்திய 19- ஆம் ஆண்டில் வெளிவருகின்றது. பல கட்டுரைகள் முன்னரே இலக்கிய இதழ்களில் இடம்பெற்றவை. இலக்கிய இதழ்களை எல்லாம் அப்பா பத்திரப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்தார். நான் தட்டச்சு செய்ய முனைகையில் பல உளுத்துப் போயிருந்தன. சில கட்டுரைகளைப் படிக்கவே இயலவில்லை. எப்படியோ முழுதாகக் கிடைத்தவற்றை விடாமல் தட்டச்சு செய்தேன். இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்ய எண்ணினேன். எண்ணிக்கையில் அதிகம் இருந்ததால் 2 தொகுதிகளாக வெளியிட முடிவு செய்தேன்.
இத்தொகுதியைத் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு எனப் பாகுபாடு செய்தேன். 42 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. அடுத்த தொகுதிக்கான கட்டுரைகளும், தனித்தமிழ்ப்பாக்களும், ஆங்கிலக்கட்டுரைகளும் உள்ளன. அவற்றையும் தனியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.
அப்பா, தான் வாழ்ந்த காலம் வரையிலும் தமிழையும், பெரியாரியத்தையும் தன் இரு கண்களாகப் பேணினார். எவருக்கும், எதற்கும் தலைவணங்காமல் வாழ்ந்தார். அவர் போல வாழ்வியல் இடர்பட்டவராயின், இப்படியெல்லாம் சிந்தித்து வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். பல்வேறு இயக்கங்களுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொண்டு, உண்மையாகப் பணியாற்றிய தமிழ்மறவர் அவர்.
தன்னலமற்ற, பொய்ம்மையற்ற, தமிழ்ப்பற்றாளர்; பொரியாரியத் தொண்டர். தமிழையும், பெரியாரியத்தையும் தம் வாழ்வியலாகக் கொண்டு மிகவும் இடர்ப்பட்டவர். என்னிரு கரம் பற்றி, என்னைத் தமிழின்வழியும், தன்மானத்தின் வழியும் வாழ வைத்தவர். என் தமிழ் அவர் தந்தது. அவர் இருக்கும் போதே செய்திருக்க வேண்டியதை, இப்போதுதான் செய்ய இயன்றது. இந்தக் குற்ற உணர்வுடன் அவர்தம் மலரடிகளில் இந்நூலை காணிக்கையாக்குகின்றேன்.
உடுமலைப்பேட்டை பெருமகிழ்வுடன்
03.08.2024 முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Leave a Reply