bharathidasan07

  தமிழ் தொன்மையும் தோலாப்புகழும் மிக்கதொரு மொழியாம் இனிமையும் எளிமையும் கொண்ட செந்தமிழ் தனித்தியங்கும் தகைமையும் தகுதியும் பெற்ற பண்பட்ட மொழி என்று கால்டுவேலர் போன்ற மேனாட்டார் ஏற்றிப் போற்றும் கூற்றினை மேற்கொண்டு தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு தமிழ் மாற்றாரின் படை எடுப்பால், வேற்று மொழிகளின் தாக்குதல்களால் புறக்கணிக்கப்பெற்றுப் போற்றுவாரற்றுக் கிடந்த காலத்தில்தான் எழுச்சி கொண்ட இயக்கம் துவண்டெழுந்தது. தனித்தியங்கும் வலிவும் பொலிவும் மிக்க தண்டமிழ் தரணியாளும் பொறுப்பிழந்து தாழ்ந்து கிடப்பதை நீக்கி, அரியணை ஏற்ற ஆட்சி செலுத்துமாறு அணிபெற வைத்தவர்கள் தனித்தமிழ் இயக்கத்தினர், மறைமலை அடிகள் போன்ற தமிழ்ப் பெரும் புலவர்களும் பாரதிதாசனார் போன்ற தமிழ்ப் படையின் தளபதிகளும் தறுகண்மையுடன் முன்னின்று செயல்பட்டனர். எனவேதான், இன்று தமிழ் வென்று நிற்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டது.

  காலவெள்ளத்தில் கனிதமிழில் கலப்பு நிகழ்வது கண்டு மனம் பொறாத மறத் தமிழர் தளபதி ‘தமிழியக்கம்’ கண்டார். அதில் அவர் கூறுவதாவது –

பவன் மண்டல்’ முதலியன இனியேனும்

தமிழகத்தில் பயிலா வண்ணம்

அவண் சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச் சொல்

இந்திமொழி வடசொல் யாவும்

இவண் தமிழிற் கலப்பதுண்டோ? பிராம்மணர்

கள் உண்ணும் இடம் இப்பேச்சில்

உவப்புண்டோ? தமிழ்மானம் ஒழிந்திடுதே

ஐயகோ உணர்வீர் நன்றே!’’

 என்று வீறுசால் உரை நிகழ்த்தி வேங்கையெனத் தமிழர் கூட்டத்தை எழுச்சிக் கொள்ள வைத்தார். தமிழில் தூய்மையுடன் எழுத முடியும்; எழுதினால் அது இனிமையுற இயங்கும். அதனைப் புலவர்கள் செய்ய முன்வர வேண்டுகின்றார் அவர்.

‘தனித்தமிழில் தக்கபுதுக் காப்பியம்

நன்னூல் இயற்ற

நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ

ஆயிரநூல் தமிழகத்தே!’

என்று கூறும் சீரிய கருத்தினை சிந்தையிற்கொண்டு உழைக்க வேண்டும் நாம். மேலும் அவர் குயிலில் எழுதிவந்த ‘வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?’ என்னும் தொடர் கட்டுரையை நூலாக்கித் தர ஆவன செய்ய வேண்டும். வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என வீரமுடன் முழங்கிய தளபதி இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை எண்ணுந்தோறும் நெஞ்சம் துணுக்குறுகின்றது. இருப்பினும் அவர் நமக்கு இட்டுச் சென்ற கட்டளைகளைத் தொடுத்து முடிப்போம் வாரீர்!!!

‘கடல்போலும் எழுக! கடல் முழக்கம் போல்

கழறிடுக தமிழ் வாழ்கென்று!

கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!!’

nellai-chokkalingam01

குறள்நெறி :வைகாசி 19, தி.பி.1994 /  சூன் 1, கி.பி. 1964