(தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி)

தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர் பெறும் காட்டின் அழிந்த புல் பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச் செடியின் பிறப்பிடம். புதிய கற்காலத்து மனிதன், பருத்தியை நூலாக நூற்கவும், அந்நூலை ஆடையாக நெய்யவும் கற்றுக் கொண்டான்.

தம்முடைய தேவைக்கு மேல் குவிந்துவிட்ட உணவுப் பொருட்களையும், பருத்தி ஆடைகளையும் சேர்த்து வைக்க, மாந்தர், மரத்தாலான வீடுகளை, இப்போது கட்டத் தொடங்கினர். தேவைக்கு மேல் குவிந்துவிட்ட பொருட்களை மருத நிலத்தில் எளிதில் கிடைக்காத பொருட்களுக்காகப் பரதவரிடமிருந்து உப்பு மீன் போன்றவற்றிற்கும் இடையரிடமிருந்து, பால், பால் படுபொருள் சிறப்பாக நெய் போன்றவற்றிற்கும், குறவரிடமிருந்தும், கற்கள், கற்களாலான தொழிற்கருவிகள் (இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரும்பு, இரும்பாலான தொழிற்கருவிகள்) போன்றவற்றிற்கும் விலையாகக் கொடுக்கும் பண்டமாற்று வாணிகம், பொருட்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நிலவழியாகக் கொண்டு செல்லும் வண்டிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. நாகரீக வளர்ச்சிச் சக்கரம் முழுமை பெற்று விட்டது. புதுக்கற்கால நாகரீகக் காலத்திற்குப் பின்னர் உணவுகளும், புதிய மரம், செடி கொடி எவையும் வழக்கத்தில் கொண்டுவரப்படவில்லை, மேனியை மறைத்துக் கொள்ளும் ஆடையை உருவாக்க, புதிய தொழிற்முறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே மருத நிலத்தைச் சார்ந்த புதுக்கற்கால நாகரீகத்தின் முற்ற வளர்ந்த நிலையும் அந்நிலத்துக் கலையும், தொழில்களும், நாகரீகத்தின் கடைசி உண்மையில் மிகப்பெரிய படிக்கட்டைக் காட்டுவ ஆயின.

பழங்காலத்தில் இரும்பு முதல், நம் காலத்தில் அலுமினியம் வரையிலான கனிவளக் கண்டுபிடிப்பும், நீராவி, எண்ணெய் ஆவி ஆகியவற்றால் இயங்கும் இயந்திரங்களும், மின்சாரத்தால் இயங்கும் விசைப் பொறிகளும் பழைய முறையிலான உழவுத்தொழில் உற்பத்திகளை விரைவும் எளிமையும் படுத்திப் போக்குவரத்தை விரைவுபடுத்த உதவு புரிந்தனவே அல்லது, புதிய உணவுப்பொருள் எதையும் உற்பத்தி செய்யவோ, வெயில், மழை, பருவந்தோறும் மாறும் வெப்ப தட்ப நிலைகளிலிருந்து உடலை மூடி மறைக்கும், புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவோ இல்லை.

மனித வாழ்க்கைக்குத் தகுதியுடைய நிலப்பகுதியின் இந்த ஐந்து. உட்பிரிவுகளும் நிலப்பரப்பில் சிறுசிறு அளவில் ஒன்றையொன்று தொடர்ந்தாற்போல், இந்தியாவில், விந்திய மலைக்குத் தெற்கில் இடம் பெற்றுள்ளன. அதனால் மக்கள் தொகைப் பெருக்கமும், உணவுப்பொருட்கள் இயல்பாகக் கிடைத்து வருவதில் நிகழும் மாற்றமும், பல்வேறு கால கட்டத்தில் மக்கள் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்குக் குடிபெயர்ந்தமையும், அதைத் தொடர்ந்து, மாறிய வாழ்க்கைச் சூழ்நிலை வழங்கிய தூண்டுதல் உணர்ச்சிக்கு ஏற்ப, வேடர், நாடோடி, மேய்ப்பாளர், கடலோடி, உழவர் என்ற வேறு வேறுபட்ட மனித நாகரீக வளர்ச்சியையும், இப்பகுதியில் எவ்வாறு உருவாக்கிவிட்டன என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வேறு வகையில் கூறுவதாயின், உலகப் பெருநிலப்பரப்பில் வரையறுக்கப்பட்ட இச்சிறு பகுதியில் மனித வளர்ச்சி பற்றிய ஆய்வு மனித நாகரீக வளர்ச்சியில், நில இயல் கூறுபாடு செலுத்தும் ஆட்சியின் அளவைக் கணக்கிட்டு, வரைபடத்தில் காட்டுவதுபோல் தெளிவாக வரையறுத்துக் காட்டிவிடலாம். இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகள் மிகப் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு, கார்ப்பேத்தியன் முதல், அல்டாய்சு அடிவரையான பரந்து கிடக்கும் பெருநிலப்பரப்பில் முல்லைத்திணையும், பயரினிசு முதல் இமயமும் அதற்கு அப்பாலும் வரையான பெருமலைப்பகுதியில் உலக மாதாவின் இடையைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் ஒட்டியாணம் என்ற அணிபோல் குறிஞ்சித் திணையும், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக்கு பெருங்கடல்களைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் நெய்தல் திணையும், மிகப்பெரிய பாலைவனமாம் சகாராவும், அரேபியா, பர்சியா, மங்கோலியா நாடுகளில் அதன் தொடர்ச்சியுமாகிய பகுதியில் பாலைத் திணையும் இடம் பெற்றுள்ளன.

படிப்படியாகக் கடந்து வந்த நாகரீக வளர்ச்சி, முதன்முதலில் தென் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடங்கி, அங்கிருந்து வெகு தொலைவிற்கு அப்பால் உள்ள பெரிய நிலப்பரப்பிற்கும் பரவிற்றா? அல்லது நிலையெதிர் மாறாக நிகழ்ந்ததா? இப்புதிர், இன்றைய நிலையில் விடுவிக்க மாட்டா ஒன்று என்றாலும் மக்கள் கூட்டம், ஒரு நிலப்பிரிவில் லிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குக் குடிபெயர்வதும் அதன் பயனாய், மேலும் மேலும் உயர்ந்த நாகரிக வளர்ச்சியும், எல்லை காண இயலாப் பரந்த நிலப்பரப்பில் காட்டிலும், , மக்கள் குடி பெயர்ச்சி எளிதில் இடம் பெறத்தக்கதான, குறிப்பிட்ட சிறுநிலப்பகுதிகளில் நிகழ்வதே இயல்பாம் என்பது குறிப்பிடப்படலாம்.

இயற்கையின் ஆய்வுக்கூடமும், தமக்குக் கிடைக்கக்கூடிய நில இயல் ஆற்றல் துணையோடு, மனித நாகரீகம் குறித்து, அவ்வியற்கை நடத்திய முதல் சோதனையும், ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்புகளின், இயற்கை அமைப்பையொட்டி எழுந்த, மிகப்பெரிய நிலப்பிரிவுகளில் அல்லாமல் தட்சிண பாதா என வழங்கும், விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள இந்தியப் பகுதியில்தான் நடைபெற்றன என்று கருத்தில் கொண்டால், மனிதனின் பழைய வரலாற்றினை அறிய அது நமக்குப் பெரிதும் துணை நிற்கும்.

இந்த நாகரீகங்களை இயற்கை அன்னை மிகப்பெரிய அளவில் இந்திய எல்லைக்கு அப்பால் உருவாக்கிப் பின்னர், தென்னிந்தியாவை மனித இன ஆராய்ச்சிப் பொருள்களின் அரும்பொருட்காட்சி சாலையாக நிறைவு செய்வதற்காக, அந்நாகரீகம் ஒவ்வொன்றினுடைய சிறிய அளவிலான வடிவங்களைத் தென்னாட்டில் அரும்பாடுபட்டுப் புகுத்திற்று என்பதினும், பண்டைக்காலத்தைச் சேர்ந்த இப் பல்வேறு நாகரீகங்களும், தம்மில் தோன்றிய தம் இளந்தோன்றல்களை, இந்திய மண்ணில் சிறிய அளவில் பெற, இயற்கை எதில் வெற்றி கண்டதோ, அதை, அவ்வியற்கை பெரிய அளவில் மறுவலும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வகையில், இந்திய நாட்டுக்கு வெளியே, உரிய தகுதி வாய்ந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது என்பதே பெரும்பாலும் ஏற்கக்கூடியதாம். இக்கருத்தும், ஒருவகையில் யூகம்தான். ஒரே இயல்பான நிலை இயல் ஆட்சிபுரியும், உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில், இயற்கை. ஒரே மாதிரியான நாகரீகங்களை, ஒன்றிற் கொன்று தொடர்பில்லா நிலையில் உருவாக்கிற்று என்பதாகும் நிலைமை மாறக்கூடும்.

உணவு ஆக்கலும், ஆடை நெய்தலும் இல்லாமல் மனிதனின் பிறிதொரு பெரிய கண்டுபிடிப்பு சொல்லாடல், உரையாடல், ஓசை ஒழுங்குடையதாகவும் இருக்கலாம். ஓசை ஒழுங்கற்றதாகவும் இருக்கலாம். பெரும்பாலோர் கருதுவது போல், உரைநடை செய்யுள் நடையை முந்தியதா அல்லது பெரும்பாலும் அதுவே உண்மை நிலையாதல் பாதி ஓசையொழுங்குடையதாகவும், பாதி ஓசையொழுங்கற்ற தாகவும் கலந்து இருந்த மூலமுதல் உரையாடலின் பிற்பட்ட காலத்து ஒரு வேறுபட்ட நிலைகள்தாமா, உரைநடையும், செய்யுளும் என்பதைத் துணிந்து முடிவு கூறுவது, அத்துணை எளிதன்று. ஆனால் இலக்கிய வளர்ச்சியில், செய்யுள் நடை உரைநடையை மிகப் பழங்காலத்திலிருந்தே முந்தியுளது என்பது முற்றிலும் உண்மையாம்.

பண், பாண் என்ற இரு சொற்களும் அவற்றிலிருந்து பாடு – வினைச்சொல், பாட்டு – பெயர்ச்சொல் தமிழின் மிகப் பழைய மொழிநிலைக்கு உரியவாகித், தமிழர்களின் தொடக்க காலத்து இன்பப் பொழுதுபோக்குகளில், இசை வழங்கலும் ஒன்று என்பதை உறுதி செய்கின்றன. தொடக்கத்தில், இசைவாணர்களாகவும், பின்னர்க் கால்நடை வளர்ப்பு, நாகரீகப் பருவத்தில், அரசு நிலை இடங்கொண்டபோது, அரசவைக் கலைஞர்களாகவும், அரசன் புகழ்பாடுபவராகவும், வாழ்ந்த பாணர், தமிழர்களில், மிகப் பழைய, நன்கு பாராட்டப்பெற்றது. ஆனால் சிறிய அளவிலேயே பரிசு அளிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தனர். தூய தனித்தமிழ் நாகரீகம் சிறந்து விளங்கிய போது, அப்பழங்காலப் பாணர், அரசர்களின் நண்பர்களாகவும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவோர்களாகவும் விளங்கினர்.

ஆனால், வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய நாகரிகம், தென்னிந்திய நாகரீகத்தோடு கலந்துவிட்ட வரலாற்றுக் காலத்தில், இறைச்சியை அதிலும் மாட்டிறைச்சியை அளவுக்கு மீறி உண்பதிலும், வெறியூட்டு மதுவகைகளைக் குடிப்பதிலும், அப்பாணர்கள் கொண்டுவிட்ட இடையறவு படாத் தீயொழுக்கம், தென் இந்தியாவில் மிகவும் தீண்டத் தகாத, இழிந்த இனத்தவருள் ஒருவராம் சமுதாய இழி நிலையை அவர்க்குத் தந்துவிட்டது. மிகமிகத் தொன்மைக்காலத்துத் தமிழர், வரலாறு என ஏது ஒன்றும் இல்லாமலே, இவ்வகையில் வளர்ச்சி பெற்றனர். நாகரீக வளர்ச்சி குறித்த அளவுகோலில், அவர்கள் சிறது சிறிதாக அடைந்த வளர்ச்சி நிலையை, அவர்களுடைய மொழியிலிருந்தும் வரலாற்றுக்கு முந்திய அவர்களின் நாகரீகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். உலக இலக்கியங்களில், நன்மிகப் பழைய இலக்கியங்களாம் வேதங் களிலும், உலகின் மிகப் பழைய வரலாற்று மூலங்களாம் மெசபடோமியப் பள்ளத்தாக்குக் கல்வெட்டுகளிலும், வட இந்தியாவோடும் அதற்கு அப்பாலும், அவர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம் அறியப்பட்டதும், அவர்கள், வரலாற்றில் முதன்முதலாகத் தெரியவந்தனர்.