‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக!
முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார்.
பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார்.
அவர் தமிழ்ச்சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டில் ‘தமிழ்ப்பொழில்’ எனும் மாத இதழை வெளிக் கொணர்ந்தார். அந்த இதழில் தமிழறிஞர் சதாசிவப் பண்டாரத்தாருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் எழுதிய தமிழ் மன்னர்கள் வரலாறு, தமிழ் கல்வெட்டுச் சான்று குறித்து கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார்.
தமிழ் படிக்கும் மாணவர்கள் ஆய்வுக்கென்று ‘நூல் நிலையம்’ ஒன்றை உருவாக்கி பல்லாயிரக்கணக்கில் நூல்கள் இடம் பெறச் செய்தார். தமிழ்க்கல்விக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட திருவையாற்று அரசர் கல்லூரியில் சமற்கிருதம் மட்டும் கற்பிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்மொழியையும் கற்பிக்க வேண்டி வெற்றியும் பெற்றார். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் முதன்முதலில் அறிமுகம் செய்த வைத்த பெருமை உமா மகேசுவரனாருக்கே உரியதாகும்.
‘எழுத்துச்சீர்திருத்தம்’ எனும் பெயரில் தமிழை அழிக்க முயலும் தமிழினப் பகைவர் செயலைக் கண்டித்து அவர் 11.6.1934 இல் நெல்லை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ‘சென்னை மாநிலத் தமிழர்’ முதல் மாநாட்டில் பேசினார். அது பின் வருமாறு:
“அச்சுக் கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர் தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்புகின்றனர். வேறு சிலர் ‘ f ‘ என்ற ஆங்கில எழுத்தையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை. வீரமாமுனிவர், சி.யு. போப்பு போன்ற அயல்நாட்டார் கூட இவ்வாறு சொல்லத் துணிய வில்லை. வடகலை, தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் வடநூலாற் கொள்கையில் அடிப்பட்டிருந்தும், தமிழ் மரபு இழுக்கா வண்ணம் உரைநூல்கள் இயற்றினார்களே! ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாத போது தமிழ்மொழியை திருத்தலாமென்பது பேதைமையாகும்.”
1937ஆம் ஆண்டு இராசாசி அரசு கொண்டு வந்த பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை கண்டித்து 27.8.37 அன்று முதன் முறையாக கரந்தை தமிழ்ச்சங்கத்தில் கண்டனக் கூட்டத்தை உமா மகேசுவரனார் நடத்திக் காட்டினார்.
அதற்கு அடுத்த மாதம் சென்னை செளந்தர்ய மகாலில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு தமிழர் கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும் நாவலர் சோம சுந்தர பாரதியாருடன் இணைந்து போர் முரசு கொட்டினார். அதன் பிறகே இந்தி எதிர்ப்புப் போர் தீவிரமடைந்தது.
26.12.1937 அன்று திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது. முன்னதாக, பத்தாயிரம் பேர் பங்கேற்ற எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது. மாநாட்டிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை வகித்தார். உமா மகேசுவரனார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் தான் தந்தை பெரியார் தமிழறிஞர்களோடு முதன் முறையாக, தன்னை இணைத்துக் கொண்டு இந்தித்திணிப்பைக் கண்டித்துப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அந்நாளில் ஒருவரது பெயருக்கு முன் மரியாதை தரும் பொருட்டு ‘சிரீமான்(ஸ்ரீமான்)’ என்றும், ‘சிரீமதி(ஸ்ரீமதி)’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சமற்கிருத எதிர்ப்பில் என்றும் உறுதி காட்டி வந்த உமா மகேசுவரனார் இதிலும் உறுதியாய் நின்று திருமகன், திருவாட்டி என்று தனித்தமிழில் மாற்றிக் காட்டினார்.
15.4.1938 நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவில் உமா மகேசுவரனாருக்கு ‘தமிழவேள்’ பட்டத்தை நாவலர் சோம சுந்தர பாரதியார் வழங்கினார். அது முதல் ‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் என்று அனைவரும் அன்போடு அழைக்கத் தொடங்கினர்.
1939ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த அகில இந்தியத் தமிழர் மாநாடு நடைபெற்றது. நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., மறைமலையடிகள், பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரோடு உமா மகேசுவரனாரும் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது முழுமனதோடு ஆதரித்துப் பேசினார்.
கல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் நடத்தி வரும் சாந்திநிகேதனைப் போல் கரந்தை தமிழ்ச்சங்கம் மாற வேண்டுமென்று விரும்பினார். அதனைப் பார்வையிட்டு கல்கத்தாவை விட்டு திரும்பும் போது உடல்நலம் குன்றியே காணப்பட்டார். பிறகு அயோத்தி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 9.5.1941 அன்று தனது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
– கதிர் நிலவன்
Leave a Reply