தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி

சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் புது மொழிகள் தோன்றும் நிலை வந்தது. இந்நிலையின் வீச்சைத் தடுத்துக் காப்பாற்றி வருபவர்களில் தனித்தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் செயல்படும் தனித்தமிழ் அன்பர்களை நாம் பாராட்டுதலுடன் குறிப்பிடலாம்.

தமிழ்ப்பற்று மிக்க தனித்தமிழ் அன்பர்களில் ஒரு பகுதியினர்  எளிமையாகத் தமிழ்ச்சொற்கள் என மெய்ப்பிக்க வாய்ப்பிருப்பினும் தங்கள் நுண்மாண் நுழைபுலத்தைப் பயன்படுத்தித் தமிழ்ச்சொற்களைப் பெரிதும் சமற்கிருதத்திலிருந்து வந்ததாக எழுதுகின்றனர். சிறுபான்மை பிற மொழிகளிலிருந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

இவற்றை விரிப்பின் பெருகும். ஆதலின் எடுத்துக்காட்டிற்காக முனைவர் ப.அருளியின் ‘அயற்சொல் அகராதி (இவை தமிழல்ல ..)’ நூலை எடுத்துக் கொள்வோம். இந்நூல் 4 தொகுதிகளாக வந்துள்ளதாக அறிகிறேன். எனினும் முதலில் வெளிவந்த 2022 / 1991 ஆம் ஆண்டு பதிப்புதான் இப்போதைய ஆய்விற்கு உட்படுகிறது.

பொதுவாகத் தமிழ்ச்சொற்களின் மூலமாகச் சம சுகிருதச் சொற்களைக் காட்டுவோரிடம் முரண்பாடான போக்கும் உள்ளது. அஃதாவது ஒரு சொல்லைச் சமசுகிருதச் சொல் என்பவர்கள் அதன் அடிப்படையில் பிறந்த பிற சொற்களைத் தமிழ்ச்சொற்களாகக் காட்டுவர். அல்லது ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அதனடிப்படையில் பிறந்த பிற சொற்களின் மூலமாகச் சமற்கிருதச் சொற்களைக் காட்டுவர்.

சான்றாக இந்நூலாசிரியர் ‘ஆதி’ என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொண்டு நூல் தலைப்பில் ‘அகராதி’ எனக் கையாண்டுள்ளார். ஆனால் நூலில், ஆதியின் அடிப்படையில் உருவான ஆதிக்கம், ஆதித்தன் ஆகிய சொற்களைச் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகக் குறித்துள்ளார்.

இந்நூலில் உள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழர் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்கள் எனத் தனியாகப் பகுத்து வெளியிட்டு இருக்கலாம். அயல்மொழி அகராதியில் இடம் பெறவேண்டியவற்றை எல்லாம் இதில் சேர்த்திருக்க வேண்டா.

நூலாசிரியர் நோக்கம் தமிழின் தூய்மைதான். எனினும் தூசு படிந்த பொற்கலத்தைப் பொன் அல்ல எனக்கருதித் தூர எறியும் அறியாமைபோல் தவறான சொல் ஒலிப்பு போன்றவற்றால் தமிழ்ச் சொற்களையும் அயற் சொற்களாகக் காட்டி உள்ளார்.

அறிவியல் நோக்கில் பார்க்க வேண்டியவற்றையும் ஒலிப்பு முறையில் பார்க்கக்கூடாது. எடுத்துக்காட்டாகச் சித்திரையில் வருடை ஓரையில் ஆண்டு பிறக்கிறது. எனவே, இது வருடம் என அழைக்கப் பெற்றது. வருடம் வருசமானது. இதனை அறியாமல் வருசத்திலிருந்து வருடம் வந்ததாகத் தவறாகக் கருதி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் குடும்பத்திலுள்ள பிற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழில் இருந்தால் அவற்றை அம்மொழிச்சொற்களாகக் காட்டும் தவற்றினையும் தனித்தமிழன்பர்கள் செய்கின்றனர். சான்றாகக் ‘கெக்கலி’ என்பது ஒலிக்குறிப்பு அடிப்படையில் உருவான வாய்விட்டுச் சிரிப்பதைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாகும். தாய்த்தமிழில் இருந்த அங்கே நிலைத்துவிட்ட தமிழ்ச் சொல், தெலுங்குச் சொல்லாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்ச்சொல் வெள்ளம் என்பது மலையாளத்தில் உள்ளதால், தமிழ்ச்சொல் நீர் என்பது தெலுங்கில் உள்ளதால் இவற்றை அவ்வம் மொழிச்சொற்களாகக் கூறுவது முறையில்லை யல்லவா? இப்படித்தான் பல  சொற்களைக் கூறுகின்றனர்.

இந்நூலில் முழுமையாக நான் குறிப்பெடுத்து வைத்திருந்தாலும் பக்க அளவு கருதி அகரச் சொற்களை மட்டும் இங்கே காணலாம்.

1. அக்காரடலை

சருக்கரை என்னும் பொருள் தரும் – சருக்காரம் > சக்காரம் > அக்காரம்  எனச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி(பக். 22)  விளக்குகிறது.

அடு  > அடல் > அடலை = சமைத்த சோறு.

இதன்படி அக்கார அடலை தமிழ்ச்சொல்லே.

 • 2. அக்காரவடிசில்

அதே பக்கத்தில் அடிசில் என்பது பொங்கலைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என விளக்கப்பட்டுள்ளது. அக்கார அடிசில்,  ஊன்துவை அடிசில் என உணவுப்பெயர்கள் தமிழில் உள்ளன.

அக்காரம் தமிழ் என முதலில் பார்த்தோம். எனவே, அக்கார அடிசில் என்னும் சொல் தமிழே!

 • 3 . அகாலம்

‘அ’ என்பது எதிர்மறை முன்னொட்டு.  இதன் அடிப்படையில் அகாலம் என்பது தமிழ்ச்சொல் எனச் செ.சொ.பி. பேரகரமுதலியில் (பக்.60) குறிக்கப் பெற்றுள்ளது.

 • 4. அசலம்

‘சலம்’ என்பது அசைவையும் ஓட்டத்தையும் குறிக்கும் . நீர் சலசலத்துச் செல்வதால் சலம் எனப்பட்டது.

அதற்கு எதிர்மறை அசலம். எனவே, எதிர்மறை முன்னொட்டு ‘அ’ இணைந்த ‘சலம்’, ‘அசலம்’ என்றானது.

 • 5. அட்டவணை

அட்டவணை, அட்டவணைக் கணக்கன், அட்டவணைக்காரன், அட்டவணைச்சாலை, அட்டவணைப்பிள்ளை எனப்பல சொற்களைப் பேரகரமுதலியில் (பக்கம் 101; 102)காணலாம். அட்டவணை தமிழ்ச்சொல் என்பதற்கான விளக்கத்தை அங்கேயே காணலாம்.

 • 6. அட்டவளை

எட்டம் = உயரம்;  எட்டம் > அட்டம்  = உயரமான கட்டடம். அட்டம் +ஆலை(சாலை) = அட்டாலை >அட்டாளை (பேரகரமுதலி-பக்கம் 103)

 • 7. அத்து

அத்து,  உருது  எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

அத்து என்பதன் பொருள்கள் பலவற்றுள் ஒன்று எல்லை. (பே.மு.200). அத்து மீறிப் போகாதே, அத்து மீறிப் பேசாதே என் இப்பொழுதும் எல்லை என்னும் பொருளில் மக்கள் கையாண்டு வரும் தமிழ்ச்சொல் இது.

அற்றம் என்பது முடிவைக் குறிக்கும். முடிவைக் குறிப்பது எல்லைதானே! அற்றம் > அத்தம் > அத்தம்.

 • 8. அதம்

அதம்பம் என்பது கனிம நஞ்சு(பே.மு.203). கொல்வதும் அழிப்பதும்தானே நஞ்சு.

அதம் = நசிப்பு, அழிப்பு, கொல்லுகை எனப் பொருள்தரும் சமற்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் திரிப்பதைவிட இப்பொருள் உடைய தமிழ்ச்சொல் என எளிமையாகக் கூறலாமே.

 • 9. அதருமம்

இல்லாதார்க்குத் தருவது தருமம். வழியுரை இல்லாதவர்க்குத் தரும் நெறியுரையும் தருமமே.  தருமத்திற்கு எதிரான தமிழ்ச்சொல் அதருமம்.

 • 10. அதரம் = உதடு

அதர் என்றால் வழி எனப் பொருள் (பே.மு. 204) வயிற்றுக்குள் செல்வதற்கு வழியாக இருக்கும் உதடு அதரம் எனப்பெறுகிறது. எனவே, அதரம் தமிழ்ச்சொல்லே!

 • 11. அதிபதி

தமிழினின்று கொண்டசொற்களைக் (அதி+பதி) கூட்டி வழங்கியுள்ள வகைமையால் இக்கூட்டுச் சொல் சமற்கிருதமாகக் கொள்ளப்பெற்றுள்ளது என்கிறார் (பக்.17) நூலாசிரியர்.

            இரு தமிழ்ச்சொற்கள் இணைந்தால் வரும் கூட்டுச்சொல்லும் தமிழாகத்தானே இருக்க இயலும்? எங்ஙனம் சமற்கிருதமாகும்?  சமற்கிருதம் என்ற தவறான முடிவிற்கு வந்து விட்டு அதற்கேற்ப வலிந்து பொருள் கொள்கிறார்.

 • 12. அதி மதுரம்

‘அதி’ தமிழ்ச்சொல் என்பதை ஏற்றுக் கொண்டார். இனிய மதுவிலிருந்து உருவான சொல் ‘மதுரம்’ என்பதும் தமிழ்தான்.

 • 13. அந்தப்புரம்  (= உவளகம்)

உவளகம் தமிழ்தான். ஆனால், அந்த, இந்த, சுட்டுச்சொற்கள் தமிழல்லவா? அப்படியானால் அந்தப்புரம் தமிழ்தானே!

 • 14. அபாக்கியம்

பாக்கியம் தமிழ் எனப் பாவேந்தர் பாரதிதாசனே கட்டுரை எழுதியுள்ளார். எதிர்ப்பொருள் உணர்த்தும் ‘அ’ முன்னொட்டு இணைந்து அபாக்கியம்  என ஆனது.

 • 15. அமிர்தம்

அமிழ்தம் என்பதும் தமிழ்தான், அமிர்தம் என்பதும் தமிழ்தான். (பே.மு.276)

இவ்வாறு தமிழ்ச்சொற்கள் பலவும் சமற்கிதம் முதலான பிற மொழிகளிலிருந்து வந்ததாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளன. வேர்ச்சொல்லாய்வில் திறப்பாடு மிக்க அருளியார் மீண்டும் தன் நூற்றொகுதிகளை ஆராய்ந்து ‘இவை யாவும் தமிழே’ என நூல் வெளியிட வேண்டும். தமிழாய்வாளர்கள் பிறரும் தவறான எடுகோள்கள் அடிப்படையில் அல்லாமல் உண்மையான ஆய்வின் அடிப்படையில் பிற மொழிச்சொற்கள் என நாம் கருதுவன தமிழே என்பதை நிறுவ வேண்டும்.

தமிழுக்குப் பெருமை தமிழ்ச்சொற்களைத் தாரை வார்ப்பது அல்ல!

தமிழ்ச்சொற்களை மீட்டெடுத்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே!

– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 07.11.2019