[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) தொடர்ச்சி]

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே)

பயிற்று‌ ‌மொழி குறித்த அரசின் வஞ்சகச் ‌செயல்பாடுபற்றிய ‌பேரா.இலக்குவனாரின் கருத்து வருமாறு:

 தமிழ்ப் பயிற்று மொழியை விரும்பாத ஒருவரைத் தலைவராகக் கொண்ட வல்லுநர்க் குழுவை நியமித்தது. அதன் பயனாகப்  பயிற்று மொழி உரிமை கொடுத்து விட்டோம் என்று கூறி விட்டது.

 எந்த நாட்டிலும் இந்த உரிமை கிடையாது. அங்கெல்லாம் இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி, நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செவோரும் தோன்றுவர். பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி தொடங்கக் கூடும்.

 கல்லூரியில் இவ்வுரிமை கிடைத்தவுடன் உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் இவ் வுரிமை வேண்டும் என முழங்கத் தொடங்கி விட்டனர். உயர்நிலைக்கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள உரிமை யளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாவதற்கு ஒரு நாளும் இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற ஆவன செய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும். ஒதுக்கப்படும்.

 மதுவிலக்குச் சட்டத்தைப் புறக்கணித்து மது அருந்த உரிமை கேட்டால், மறுக்கப்படுவதுபோல், தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை வெறுத்து அயல்மொழி வழியாகப் படித்தலுக்கு உரிமை கேட்பதையும் மறுக்கும் துணிவு அரசுக்கு வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்தான் எல்லா நிலைகளிலும் பயிற்றுமொழி என்பதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை உறுதியாக்குவது தமிழக அரசின் தவிர்க்கலாகாக் கடமையாகும்.

 அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வேண்டாத கிளர்ச்சி வென்றதனால், தமிழ் உரிமை பறி போயிற்று; கல்வி நிலை யங்களில் இருந்து தமிழ் விலகும் நிலை வந்து விட்டது. தமிழ்ப் பற்றாளர்களே விழிமின்! எழுமின்! தமிழைக் காக்க விரைந்து செயல்படுமின்! ஊர்கள்தோறும் தமிழ்க்காப்புத் தொண்டர்படை அமையுமின்! உயிர் கொடுத்தேனும் உயிரனைய தமிழைக் காக்க வம்மின்!

குறள்நெறி (மலர் 4: இதழ் 3): தை 18, 2002: 31.1.71

 

   மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ஒழிவிடமாயிற்று. பேராசிரியர்தான் அடுத்த துணைவேந்தர் என அனைத்துத் தரப்பாரும் எதிர்பார்த்தனர். துணைவேந்தர் பணியமர்த்தத்திற்கான பெயர்ப்பட்டிப்பில்(panel) பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரும் இடம் பெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பெயர் துணைவேந்தராக அறிவிக்கப்பட்டதாகச் செய்தி வந்து பல தரப்புகளிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. ஆனால், செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கு இரையானதால் பேராசிரியர் இலக்குவனார் துணைவேந்தராக அமர்த்தப்படவில்லை. முதல் பட்டிப்பில் அவர் பெயர் இருந்ததாகவும் இரண்டாவது பட்டிப்பில் அவர் பெயர் இல்லை என்பதால் பணியமர்த்த இயலவில்லை என்றும் மழுப்பலான கருத்து தெரிவிக்கப்பட்டது. இத்தகைய மற்றொரு பட்டிப்பு (panel) என்பது முதலும் கடைசியுமாக அப்பொழுது மட்டும்தான் இடம் பெற்றது. பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலான தமிழறிஞர்கள்  அரசிற்குக் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்கள், தமிழன்பர்கள் என அணி அணியாக வந்து பேராசிரியரைச் சந்தித்துத் தங்கள் குமுறலைக் கொட்டினர். பேராசிரியர் அமைதியாகத் தமிழ்ப்பேராசிரியரைத்தானே அரசு துணைவேந்தராக அமர்த்தி உள்ளது. மகிழ்ச்சி கொள்வோம் என அமைதிப்படுத்தினார்.

  முதலில் வந்த செய்தியால் பேராசிரியரே மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்னும் கருத்து பலரின் உள்ளங்களில் பதிந்து விட்டது. இன்றும் கூட அவரைப்பற்றிப் பேசுபவர்கள் மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார் என்று கூறும் அளவிற்கு ஆழமான கருத்துப் பதிவாக அமைந்து விட்டது. தமிழுக்காக வாழும் போராளி, பல்வேறு போராட்டங்களுக்கிடையே தமிழ்க்கனவுகளை நிறைவேற்றும் போராளி, துணைவேந்தரானால், பயிற்சி மொழிக்கனவை நிறைவேற்றித் தமிழக மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருப்பார் எனக் கருத வேண்டிய அவர் மாணவரே, யார் துணைவேந்தராக இருந்தால் என்ன என்று தடுமாறியதன் விளைவே தமிழுக்குப்பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. எல்லாம் தமிழில், கல்வியின் உச்ச நிலை வரை தமிழில் என்றெல்லாம் நடைமுறைப்படுத்த கனவு கண்ட பேராசிரியருக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் வருத்தம் வந்தது. ஆனால், பதவியை எதிர்நோக்கி வாழ்பவரல்லரே அவர். எனவே, இதனை மறந்து விட்டுத் தம் போர்ப்பணியில் மீண்டும் ஈடுபட்டு விட்டார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்