74thittacheri

பள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள்!

பொதுச்சொத்து கொள்ளை!

 

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

  இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத் தேர்தல் நடக்கும். இடத்திற்கு வக்பு வாரியக் கண்காணிப்பாளர், பிற அலுவலர்கள் வருவார்கள். தேர்தல் அறிவிப்பு அறிவித்தவுடன் பள்ளிவாசலில் தேர்தல் நாள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பற்றிய விவரம் அனைத்தும் வெளியிடப்படும். அதன்பின்னர் உரிய தேர்தல் நாள் வந்தவுடன் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் தங்களுக்கு யார் விருப்பமோ அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் கடந்த 3 முறை அதாவது 9 ஆண்டுகளாகத் தேர்தல் வைக்காமல் உட்கூட்டணி அமைத்துப் போலித் தேர்தல் நடத்தி வருகிறார்கள். இதனைத் தட்டிக்கேட்டால் ஊர்விலக்கம் அல்லது ஊரிலிருந்து விலகிக்கொண்டவர்கள் என அறிவிப்பு செய்வார்கள். இவ்வாறு அறிவிப்பு செய்தபின்னர் யாரும் ஊரிலிருந்து விலக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும், திருமணம் மற்றும் பலவித சடங்குகளுக்கும், இறந்தால் இறந்தவர்களை புதைப்பதற்கு மயானம்(கபர்சுதான்) போன்றவற்றிற்கும் இடம் தரமாட்டார்கள். இறந்த பிணத்தைப் புதைப்பதற்கு நீதிமன்றம் வரை சென்று அதன்பின்னர்க் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் இறந்தவர் பிணம் புதைக்கப்படும். இதற்குப் பயந்து பலர் ஒதுங்கிவிடுவது உண்டு.

  இவ்வாறாக உட்கூட்டணி அமைத்துத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களைத் தங்களுக்கும், தங்கள் உறவினருக்கும் தாரை வார்த்துவிடுவார்கள். ஒரு சிலர் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி நீண்ட காலக் குத்தகைக்கு அதாவது 99 வருட குத்தகைக்கு எடுத்துக்கொள்வார்கள். அதன்பின்னர் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் உடந்தையுடன் அந்த சொத்துக்களைப் பட்டாமாறுதல் செய்து வைத்துக்கொள்வார்கள். இவ்வாறாகப் பல சொத்துகள் தனியர் கவர்வில்(ஆக்கிரமிப்பில்) உள்ளது. திட்டச்சேரி பள்ளிவாசலில் முன்னாள் இருந்த தலைவர் கோசி என்பவர் வக்பு சொத்தைக் கபளீகரம் செய்துள்ளார். இதன் தொடர்பான வழக்கு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உள்ளது. இதே போல மரைக்கான்சாவடியில் பல இலட்சம் உரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்தை 15,000 உரூபாய்க்கு நீண்ட காலக் குத்தகையின்பேரில் அடமானம் வைத்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  ஏற்கெனவே பதவி வகித்தவர்கள் தங்களுடைய பொறுப்பை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து விடுவர். தேர்தலில் நிற்பவர்களுக்குப் பலவித நிபந்தனைகள் உள்ளன. அதன்பின்னர்த் தேர்தலில் நிற்பவர்கள் வக்பு வாரியத்தில் பணம் கட்டவேண்டும். அதன்பின்னர் வாக்குப்பெட்டி மறைமுகமாக வைத்து அவர்களுக்குரிய சின்னங்களில் வாக்களிக்கலாம். அதில் அதிக எண்ணிக்கையில் வாக்குரிமை பெற்றவர்கள் அவையின் (சமாஅத்து) தலைவர், செயலர், பொருளாளர் என அறிவிப்பு செய்வார்கள். இதுதான் நடைமுறை.

  இந்த நடைமுறைகளை விட்டுவிட்டுச் சில பள்ளிவாசல்களில் பரம்பரையாகக் குடும்ப ஆட்சி நடக்கும் வகையில் பரம்பரை பரம்பரையாகத் தலைவரை நியமித்து வருகிறா்கள். இதில் பலர் கூட்டணி அமைத்துச் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலுக்கு இணையாகப் பணத்தை வாரியிறைத்துத் தலைவராக அறிவிக்கச் செய்து, அதன்பின்னர் அந்தக்கோப்பை வக்பு வாரிய கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிடுவார்கள். இவற்றைத்தவிர சில பள்ளிவாசல்களில்   தேர்தல் மற்றும் தெரிவு (election and selection) என   அமைப்பு விதி உருவாக்கி வைத்துள்ளார்கள். தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை. தெரிவு என்பது உட்கூட்டணி அமைத்துப் பரம்பரை மிக்கக் குடும்பம் என்று அச்சுறுத்தி பொய்யான தேர்தல் நடத்துவது. இது மக்களாட்சிக்கு எதிரானது. மேலும் இசுலாமியர் சட்டத்தின்படி மன்னராட்சியோ பரம்பரை ஆட்சியோ கூடாது.

 இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி வக்பு வாரியத்திற்கு 31.3.2015 அன்று பதவிக் காலம் முடிவடைந்தது. மறுபடியும் அந்த பதவிகளைத் தக்க வைக்க மறைமுகமான முறையில் “11.10.1923 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட திட்டச்சேரி முசலிம் ஊர் உறவின் முறை வக்பு நிருவாகச் சபை” என அச்சிடப்பட்ட மடலேட்டில் வக்பு நிருவாகச் சபைக்கான தேர்தல் நடப்பதாக அறிவித்தனர்; மேலும், அதில் தேர்தல் அறிவிப்பு தகவல், உறவின்முறை தெரு பட்டியல், நிருவாகத்தில் இணைந்தோர் பட்டியல் என பட்டியலிட்டுத் தேர்தல் கால அட்டவைணையை அறிவித்து முறைப்படி தேர்தல் நடந்ததுபோல் காட்டித் தங்களைத் தலைவர், செயலர், பொருளாளராகத் தேர்ந்தெடுத்ததுபோன்று அறிவித்துக் கொண்டனர். தேர்தல் சுற்றறிக்கையில் வக்பு வாரியத்திடம் இசைவு பெற்றதாகவோ வக்பு வாரியக் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் என்ற நடைமுறையோ குறிப்பு இல்லை. மேலும் மன்னர் ஆட்சிபோன்று உள்கூட்டணி அமைத்துத் தேர்தலை நடத்தியுள்ளார்கள். நிருவாகச் சபை தேர்தல் வக்பு வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதா? வக்பு வாரியத்திற்குக் கட்டக்கூடிய வைப்புத் தொகை கட்டாமல் உட்கூட்டணி முறையில் பணத்தைக் கொடுத்து   முறையான போட்டியின்றி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது எப்படி? இவ்வளவு பணம் செலவழித்துப் பள்ளிவாசல் பொறுப்பிற்கு வந்தால் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடங்கள், கட்டப்பஞ்சாயத்து, வெள்ளிக்கிழமை உண்டியல் பணம், வெளிநாட்டில் இருந்து வரும் பணம் இவையெல்லாம் யாருக்குப் போகிறது என்ற கேள்விகளை முன்வைத்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, “நாங்கள் சமாஅத்தை எதிர்த்து ஒன்னும் செய்யமுடியாது. காரணம் ஊரிலிருந்து விலக்கம் செய்து விடுவார்கள். நல்லது கெட்டதுக்கு ஊரைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. இருப்பினும் நிலப்பறிப்பு, அடுத்தவர் வீட்டில் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல், வக்பு சொத்தை விற்பனை செய்வது, வக்பு சொத்தை அபகரித்தவர்கள் என அனைத்துக் குற்றவாளிகளையும் நியமனம் செய்துள்ளார்கள்” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

  இதன் தொடர்பாக அப்பகுதியைச்சேர்ந்த சிலர் இதனை எதிர்த்து சனநாயக முறையில் தேர்தல் நடத்தவேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு எண் 8582. இதன் தொடர்பாக வழக்கு தொடுத்த வழக்குரைஞர் மணியிடம் பேசினோம். “திட்டச்சேரியில் முறையான தேர்தல் நடத்தாமல் உட்கூட்டணி முறையில் உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்கு இணையாகப் பணம் விளையாடுகிறது. பணத்தைக்கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். வக்பு சொத்து என்பது ஏழைகளுக்கும், பள்ளிவாசலுக்கும் பயன்படுத்தக்கூடிய சொத்து. அந்தச்சொத்தைக் கவரும் நோக்கத்தில் பலர் இலட்சங்களை செலவு செய்து பதவிக்கு வருகின்றனர். இவ்வாறாக வருபவர்கள் சமாஅத்து என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து, வீடு காலி செய்தல், வக்பு நிலங்களை விற்பனை செய்வது, வக்பு சொத்துக்களைகங குறைவான மதிப்பீட்டில் நீண்ட நாள் குத்தகைக்கு விடுவது போன்ற செயலைச் செய்து மக்களையும், வக்பு வாரியத்தையும் ஏமாற்றி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் வக்பு கண்காணிப்பாளர், வக்பு வாரியம், தேர்தல் ஆணையம், தமிழக முதல்வர் எனப் பல இடங்களுக்கு புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் வக்பு கண்காணிப்பாளர் உமர்பாரூக் என்பவர் இவ்வாறாக நடைபெறும் தேர்தல் செல்லாது எனவும் வக்பு அதிகாரிகள் முன்னிலையில்தான் தேர்தல் நடத்தவேண்டும் எனவும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தச்சுற்றறிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆளும் கட்சியைச்சேர்ந்த சையது இபுராகிமின் தூண்டுதலின் பேரில் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளேன்” என்றார்.

  ஏற்கெனவே திட்டச்சேரி பள்ளிவாசலில் நடைபெறும் ஊழல்களைக் கண்டித்துத் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் இவர் கேள்வி கேட்டுள்ளார். முறையான பதில் தராத பொதுத் தகவல் அலுவலருக்கு 25,000 உரூபாய் அபராதம் செலுத்தத் தகவல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னிலையில் மக்களாட்சி முறையில் வெளிப்படையாகத் தேர்தல் நடத்தவேண்டும் என்றார். இதன் தொடர்பாக வக்பு வாரிய ஆய்வாளர்ரை 9750558349 எண்ணில் தொடர்பு கொண்டோம். திட்டச்சேரியில் நடந்த தேர்தல் பற்றி வக்பு வாரியத்திற்குத் தகவல் இல்லை. அப்படியே தேர்தல் நடத்தினால் அது செல்லாது என்றார். இந்நிலையில் வக்பு வாரிய அலுவலக அறிவிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு

1. பசீர் அகமது(தலைவர்)

முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்

மேலத்தெரு

திட்டச்சேரி-609 703

2.அம்தாசுஅலி(செயலாளர்)

தெற்குத்தெரு

திட்டச்சேரி

3.மாலிக்(பொருளாளர்)

பட்டகால்தெரு

திட்டச்சேரி

நியமன உறுப்பினர்கள்

அப்துல் மாலிக்(கு),

அக்பர் அலி,

அன்வர்தீன்

முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல்

திட்டச்சேரி-609 703.

ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதே நிலைமைதான் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன. இதனைத் தவிர்க்கவேண்டும் எனப் பல அமைப்புகள் போராடி வருகின்றன. அரசு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது. ஊர்மக்களும் போராடி இழந்த வக்பு சொத்துக்களை மீட்கவேண்டும். இல்லையெனில் வருங்காலத் தலைமுறையினருக்கு வக்பு என்ற பெயர்மட்டும்தான் நினைவில் இருக்கும்.

 vaikai aneesu74