(தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம் தொடர்ச்சி)

சட்டம் ஒன்றுதான்

சிறைக் கண்காணிப்பாளரையும் ஏனைய அதிகாரிகளையும் காவலர்களையும் சிறைக்கு வெளியே துரத்தியடித்த பின், ஆர்வக் குரல் எழுப்பிய கைதிகளிடையே ஏ.எம். கே.யின் எச்சரிக்கைக் குரல் ஒலித்தது.

“தோழர்களே! நிதானம் வேண்டும். பகைவனிடம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவனைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. நியாயம் நம் பக்கம்தான் உள்ளது. ஆனால்போராடித்தான் அந்த நியாயத்தை நிலைநாட்ட முடியும். நாம் இன்னும் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மறவாதீர்கள். பகைவனின் அடுத்த தாக்குதலுக்கு நாம் தயாராக வேண்டும்.”

வெளியிலிருந்து ஆயுதக் காவல்படையைக் கொண்டுவந்து அச்சுறுத்தினாலும் கலைய மறுத்துத் தொடர்ந்து போராடுவது, தாக்கினால் திருப்பித் தாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஆயுதங்கள் வேண்டுமே!

தச்சுப் பட்டறை, தறிப் பட்டறை இப்படி ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு குழு சென்று, உடைத்துத் திறந்து, கிடைத்தவற்றைக் கைப்பற்றி வந்தது. மரச் சட்டங்கள், தடிகள், குழாய்கள் என்று ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தியாயிற்று. வேறு ஆயுதம் எதுவும் இல்லாதவர்களுக்குக் கற்களாவது இருந்தன.

ஏ.எம்.கே. சொன்னார் :

“நாம் யாரையும் தாக்கப் போவதில்லை. சிறையை உடைக்கப் போவதில்லை. நமது நியாயத்தை நிலைநாட்டுவதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோம். அமைதியாகத் திரண்டிருக்கிறோம். அவர்கள் அமைதியாகப் பேச வந்தால் நாமும் பேசுவோம். ஆனால் நமது நியாயத்தை மறுப்பதற்காக அவர்கள் நம்மை அடித்து நொறுக்க வந்தால் நாம் நம்மைத் தற்காத்துக் கொண்டாக வேண்டும். அதுவும் முடியாதென்றால் நம் மீதான தாக்குதல் எதிர்ப்பின்றிப் போக விடக் கூடாது. இல்லையென்றால் நாம் என்ன மனிதர்கள்?”

மதியம் 3 மணி அளவில் மாவட்ட மருத்துவ அதிகாரி வந்தார். சிறை மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தவிர, வேறு காவல் எதுவுமின்றி நடு மைதானத்துக்கு வந்து, கூட்டத்துக்கு நடுவில் நின்று ஏ.எம்.கே.யுடன் பேசினார். சிறை நிருவாகத்தின் சார்பில் ஏதோ ஒப்புக்குப் பேசினாரே தவிர, அழுத்தந்திருத்தமாய் அவர் வாதிடுவதற்கு ஒன்றுமில்லை.

அடுத்து வந்தவர் மாவட்ட ஆட்சியர் சருமா. அவர் ஏ.எம்.கே.யும் மற்றக் கைதிகளும் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். பொன் நாடாரை அடித்தவர்களின் பெயர், பதவி முதலான விவரமெல்லாம் கைதிகளால் துல்லியமாகத் தரப்பட்டது. சருமா சொன்னார்:

“எல்லாவற்றையும் நான் அரசுக்குத் தெரியப்படுத்துகிறேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் கலைந்து சென்று சாப்பிடுங்கள்.”

ஒருங்கே பல கைதிகள் அவருக்குப் பதிலளிக்கப் போய் ஒரே கூச்சலாகி விட்டது. போராட்டத்தில் முன்னுக்கு நின்றவர்கள் அவர்களை அமைதிப்படுத்தி “தலைவர் பேசட்டும்” என்றார்கள்.

பிறகு ஏ.எம். கே. பேசினார்:

“சிறையில் பத்து வருடம் கழித்து முடித்த ஒருவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். யார் யாரைக் கொன்றாலும் கொலை தானே? அவர்களில் ஒருவரை நாங்கள் சாகடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? எப்படியும் கொலை வழக்காவது போடுவீர்கள்தானே? அல்லது அரசுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்று உங்கள் அரசே சொல்கிறது. அப்படியானால் அதிகாரியைக் கைதி கொன்றாலும்கைதியை அதிகாரி கொன்றாலும் ஒரே நடவடிக்கைதானே எடுக்க வேண்டும்?”

மாவட்ட ஆட்சியர் வாயடைத்துப் போனார். பிறகு சொன்னார்.

“ஆனால், நீங்கள் இப்படிக் கூடியிருப்பது சட்டவிரோதம் அல்லவா? உங்களைக் கலைப்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.”

ஏ.எம். கே. சொன்னார்:

”நீங்கள் என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை  எடுக்கலாம் எதற்கும் நாங்கள் தயார். உங்களால் அதிகபட்சமாக என்ன செய்து விட முடியும்? அடித்துச் சாகடிக்கலாம், அவ்வளவுதானே? பத்து வருடம் சிறையில் கழித்த பின் அடித்துக் கொல்லப்படுவதை விட இப்படி நீதி கேட்டுப் போராடிச் சாவதே மேல் என்று நினைக்கிறோம். சிறையில் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும். அதற்காகவே இந்தப் போராட்டம். நாங்கள் செத்தாலாவது வருங்காலத்தில் அந்த உத்தரவாதம் கிடைக்கும் என்றால், நாங்கள் சாகத் தயார்”.

“தயார், தயார்” என்று அந்தக் கைதிகள் கூட்டம் எதிரொலித்தது.

“சரி, அமைதியாக இருங்கள்” என்று சொல்லி விட்டு ருமா புறப் பட்டார்.

அவர் போன பின் ஏ.எம்.கே.யிடம் ஒரு கைதி சொன்னார்:

“தோழரே, இனிமே மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தால் பேசாமல் விரட்டியடிக்க வேண்டும்.”

“கூடாது, மாவட்ட ஆட்சித் தலைவர் எத்தனை முறை வந்தாலும் பேசத்தான் வேண்டும். நம் தரப்பு நியாயத்தைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டும்”.

மாவட்ட ஆட்சியருக்கும் சிறைக் கண்காணிப்பாளருக்கும் முரண்பாடு இருப்பதும், அந்த முரண்பாடு அண்மைக் காலத்தில் முற்றிப் போனதும் ஏ.எம்.கே.க்குத் தெரியும்.

வண்டிப்பாளையம், வடுகப்பாளையம் சிற்றூர்களுக்குக் கேப்பர் கற்குடைவு(Quarry) மலையைச் சுற்றிக் கொண்டு போகாமல் நேராகச் சென்றிட மத்திய சிறையை ஒட்டினாற்போல் ஒரு பாதை உண்டு. அந்த ச் சிற்றூர் மக்கள் பல்லாண்டு காலமாக இந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்தார்கள். இந்தப் பாதை அமைந்துள்ள நிலம் சிறைச்சாலைக்குச் சொந்தமானது என்றாலும், அது வரை எந்த சிறைக் கண்காணிப்பாளரும் அந்தப் பாதையைச் சிற்றூர் மக்கள் பயன்படுத்துவதற்கு மறுப்புச் சொன்னதில்லை.

இந்தச் சிறைக் கண்காணிப்பாளர் வந்த பிறகுதான் முதன் முதலாக அந்தப் பாதை மறிக்கப்பட்டது. சிற்றூர் மக்கள் அதைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டது. மக்கள் பல முறை முறையிட்டும் மனுக்கொடுத்தும் பார்த்த பின் போராட்டத்தில் இறங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் ருமா கூறியும் கண்காணிப்பாளர் அந்தப் பாதையைத் தர மறுத்து விட்டார். இது நடந்து மூன்று நான்கு மாதங்கள்தான் இருக்கும். கண்காணிப்பாளர் மீது ருமாவுக்கு இதனால் ஏக வருத்தம். இதை இந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏ.எம். கே. விரும்பினார்.

மாலை ஆறு மணி ஆயிற்று. கொட்டடி அடைப்பு(lock up)  நேரம், கண்காணிப்பாளர் தன்னால் முடிந்த வரை அதிகாரிகளையும் காவலர்களையும் திரட்டிக் கொண்டு உள்ளே வந்தார்.

தொலைவிலிருந்தபடி இரைந்து பேசினார்:

“எல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள். சிறையடைப்பிற்கு நேரமாகி விட்டது. அவரவர்கள் கொட்டடிக்குப் போய் கணக்கு கொடுத்துவிட்டுச் சிறையடைப்பிற்கு உதவுங்கள். தன்மையாகச் சொல்கிறேன்.”

“முடியாது, முடியாது” என்று கைதிகள் தரப்பிலிருந்து கூச்சலாகப் பதில் வந்தது.

கண்காணிப்பாளர் ஆணைப்படி அதிகாரி ஒருவர் விசிலை எடுத்து ஊத, அடுத்து ஒரே ஊதல் சத்தம். ‘அலாரம்’ சங்கு ஒலித்தது. காவலர்கள் சிலர் தடிகளுடன் கைதிகள் பக்கம் ஓடி வர, கைதிகள் தரப்பிலிருந்து கற்கள் பறந்தன. இந்தக் கல்மாரிக்கு ஈடு கொடுக்க முடியாமல் காவலர்கள் பின்வாங்கியதோடு வாயிற்பக்கம் ஓடலாயினர்.

சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் படையெல்லாம் ஓடிப் போய் விடக், கண்காணிப்பாளர் மட்டும் தனித்து நின்றார். பிறகு அவரும் வெளியே போய் விட்டார்.

இரவு 8 மணிக்கு மேல் பெரும்  காவலர் படையுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் (S.P.) வந்து சேர்ந்தார். படையை வெளியே நிறுத்தி விட்டு அவர் மட்டும் உள்ளே வந்து பேசினார்.

ஏ.எம். கே. சொன்னதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு எஸ்.பி. சொன்னார்:

“எல்லாம் சரி, ஆனால் இரவில் உங்களையெல்லாம் கொட்டடியில் அடைத்தாக வேண்டும். வேறு வழியில்லை. சிறையடைப்பிற்குச் சிறைக் காவலர்களை நீங்கள் அடித்து விரட்டி விட்டதால், காவலர் படையை வரவழைத்திருக்கிறார்கள். உங்களை அடைக்க வேண்டிய பொறுப்பு இன்று எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற எனக்கு வேறு வழியில்லை. நான் சட்டப்படி நடந்தாக வேண்டும் சட்டத்தை நிலைநாட்டியாக வேண்டும். நீங்கள் படித்த வழக்கறிஞர் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். புரிந்து கொண்டு ஒத்துழைத்தீர்களானால் எங்களுக்கும் துன்பமில்லை உங்களுக்கும் துன்பமில்லை!”

ஏ.எம்.கே. சிரித்துக் கொண்டே சொன்னார்:

“ஆமாம், ஆமாம். நீங்கள் சட்டப்படி நடக்க வேண்டும். சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். சரி, இந்தச் சிறையிலும் உங்கள் அதிகார எல்லையில் இருப்பதுதான். இங்கு ஒருவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். பிணம் இதோ சவக் கிடங்கில் இருக்கிறது. கொலையை நேரில் பார்த்தவர்கள் இத்தனை பேர் இங்கே இருக்கிறார்கள். கொலை செய்வது சட்டப்படிக் குற்றம்தானே? இந்தியத் தண்டிப்புச் சட்டம்302ஆவது பிரிவின்படி இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அவ்வளவு பெரிய குற்றம், கொடிய குற்றம். இங்கே கொலை நடந்து 24 மணி நேரம் ஆகப் போகிறது. கொலைக் குற்றவாளிகளை நீங்கள் கைது செய்து விட்டீர்களா? நீதி மன்றத்தில் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) அளித்து விட்டீர்களா? சடலத்தைக் கைப்பற்றிப் பிண ஆய்விற்கு அனுப்பி விட்டீர்களா? இதெல்லாம் சட்டப்படி உங்கள் கடமைகள் அல்லவா? இந்தக் கடமைகளைச் செய்து முடித்துச் சட்டத்தை நிலை நாட்டி விட்டு வாருங்கள். பிறகு எங்களிடமும் சட்டத்தை நிலை நாட்டலாம்.”

கா.க.(S.P.) விருட்டென்று வெளியே போய் விட்டார்.

விரைவில் காவலர் படை உள்ளே நுழையும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். பெரும்பாலானவர்கள் அதற்கு அணியமாக இருந்தனர். திருப்பித் தாக்காமல் பணிவதில்லை என்று உறுதியாகவும் இருந்தனர். என்றாலும், ஒரு சிலர் அச்சம் கொள்ளவே செய்தனர். அவர்களுக்கும் துணிவூட்டுகிற முறையில் ஏ.எம். கே. சொன்னார்:

“தோழர்களே! நம்மில் சிலர் அடிபட்டு இரத்தம் சிந்தினால்தான் நியாயம் கிடைக்கும் என்றால், அதற்கு நாம் தயாராக இருப்போம். நம்மில் சிலர் செத்தால்தான் நியாயம் கிடைக்கும் என்றால், அதற்கும் தயாராக இருப்போம். பொன் நாடாருக்கு வந்த கதி இனி நம்மில் யாருக்கும் வரக் கூடாது. அதற்காக நாம் உயிரையே கொடுக்கலாம். ஒன்றும் கெட்டுப் போகாது. என்றைக்கு இருந்தாலும் சாவது நிச்சயம்தானே!”

சற்று நிறுத்தி விட்டு, ஏ.எம்.கே. சொன்னார்:

உங்களுக்கு நான் ஓர் உறுதி கொடுக்க விரும்புகிறேன். தாக்குதல் என்று வந்தால் முதல் அடி என் மீதுதான் விழும். பிணம் என்று விழுந்தால் முதல் பிணம் என்னுடையதாகத்தான் இருக்கும். என்னைத் தாண்டித்தான் அவர்கள் உங்களிடம் வர வேண்டும். இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டா.

ஏஎம்கே. இதை சாதாரணமாகச் சொன்னார். உணர்ச்சி வயப்படாமல் பேசினார். ஆனால் கூட்டம் உணர்ச்சி வயப்பட்டது. வருவது எதுவானாலும் துணிந்து முகங்கொடுக்கும் உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட்டது.

ஏஎம்கே பேசி முடித்து உட்கார்ந்த பிறகு. அவருக்கு அருகிலிருந்த கைதிகளில் ஒருவர் சொன்னார் :

“தோழரே, நீங்கள் ஓர் உறுதி கொடுத்தீர்கள். சரி, ஆனால் எங்களுக்கு நீங்கள் வேறோர் உறுதி கொடுக்க வேண்டும். கொடுப்பீர்களா?”

“சரி, சொல்லுங்கள்.”

ஏஎம்கேயிடம் கோரப்பட்ட அந்த உறுதிமொழி அவரையே ஒரு கணம் திகைக்கச் செய்தது.

(தொடரும்)

தாழி மடல் .17