படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி
சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி
இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது தெரிகிறது. அதுவும் ஒரு சமூக விமர்சனந்தான். எது இலக்கியத்திற்கு ஆதாரச் சுருதி என்று படைப்பு எழுத்தாளரே தீர்மானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியம் நெடுகிலும் காண முடிகிறது என்பது சிறப்பான அம்சம். அதுதான் மனித சரித்திரம், குடும்ப சரித்திரம் என்பது. அது எதிலும் அதிகமாக அகப்பட்டுக் கொள்ளாமல், வாழ்க்கையை நடத்துவது; சிறப்பாக, சௌசன்னியமாக தன்ளைவில் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்துவது.
அது படிப்பின் வழியாக இல்லாமல் பாரம்பரியமாக, குடும்பத்தின் சொத்தாக தொடர்ந்து வருகிற போது, தன்னளவில் அதிகமாக மதிப்புப் பெறுகிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் கதை, குடும்பத்தினர்களின் கதையைத் தனித் தன்மையோடு சொல்வது சமீப காலங்களில், தமிழ்ச் சிறுகதைகளில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைச் சிறப்பு அம்சம் என்று கொண்டாட வேண்டும். அதனை புத்திபூர்வமாக அறிந்து எழுதினாலும் சரி; உணர்வுப்பூர்வமாகக் கொண்டு எழுதினாலும் சரி, எழுத்து என்பதற்கும் படைப்பு என்பதற்கும் சிறப்பான பொருள் கொடுக்கிறது. அதன் காரணமாகப் படைப்பின் வசீகரம் வளம் பெறுகிறது. இப்படி வசீகரம் பெற்று வந்துள்ள சிறுகதைத் தொகுதி பாரதிபாலனின் ‘உயிர்ச் சுழி’, சுமார் ஏழெட்டு ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு.
இடைவெளி என்பது படைப்பில் காணவில்லை என்பதை ஒரு சிறப்பு அம்சமாகச் சொல்ல வேண்டும். அதாவது கருத்திலும் சரி, கதை சொல்லும் பாங்கிலும் சரி, திட்டமில்லாதது மாதிரியான ஒரு திட்டத்தில் வளமென்னும் மொழி வளத்தில், அலங்காரம் என்பதை அகற்றி, சொல்லப்படும் வாழ்க்கையோடு, இணைந்து போகும் மொழியோடு கதைகள் எழுதிஇருக்கிறார். இலக்கியம் என்பது மொழியால் எழுதப்பட்டு, மொழியால் படிக்கப்பட்டு உணரப்படுகிறது என்றாலும் – அது மொழிக்குள் இல்லை என்கிற போது – மொழியின் வெளிப்பாட்டுத் தன்மை இன்னும் கூடுதலாக அர்த்தம் பெறுகிறது. அதாவது சொல்லப் பட்டதின் வழியாக அறியப்படுவது இன்னும் கூடுதலாக இருக்கிறது என்பதுதான்.
பாரதிபாலன் சிறுகதைகளில் சொல்லப்படுகிற கதையும் – பேசப்படுகின்ற பேச்சும் உணர்த்தும் பொருள் ஒன்றாக இல்லாமல் போய்விடுகிறது. தனிமனிதனின் பட்டறிவு என்கிற ஒற்றைப்பரிமாணத்தில் இருந்து, பொது அனுபவம் என்கிற ஒன்றோடு இணைந்து போகிறது. அது காரணமாகக் கதையென்பது பொதுத்தன்மை பெறுகிறது. பலரின் அனுபவமாக அறியப்படுகிறது. குறிப்பாக மாறுதடம் யாருடைய கதை அப்பச்சியின் கதையா? முத்துக்காளையின் கதையா? போன கதையா?
“குடியானவங்களுக்கு இருக்கிறது மாதிரி நமக்கும் ஒரு கழிவறை கட்டச் சொல்லணும், இராவுல பொம்பளைப் பிள்ளைங்க வெளியில் போறதுக்கு சிரமப்படுதுங்க” என்று சொல்லும் அப்பச்சியின் நம்பிக்கைச் சிதைவு என்பது சமூகத்தின் சிதைவா?
சமூக மேம்பாடு என்பது தனிமனிதன் வளாச்சி, தன்னுடைய சுய அடையாளம் என்பதை அழித்து விட்டு, நகரத்தில் முகமில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாகப் போவதுதானா? அது சதாசிரியரின் சமூக விமரிசனமா? யார் மீது குற்றம்?
இலக்கியம் குற்றம் சாட்டுவதில்லை. நிகழ்வுகளைச் சொல்லி யோசிக்க வைக்கிறது. இந்த மாறுதல்களுக்கு முத்துக்காணையை மட்டும் பொறுப்பாக்கி தப்பித்துக் கொள்ள முடியுமா?
இப்படி ஒன்றோடு ஒன்றாக கேள்விகளைக் கேட்கவைக்கிறது. அதுதான் முக்கியம். கேள்விகளே முக்கியமாகிறபோது, சமூகத்தில் படைப்பு என்பதும் உயிர் வாழ்தலாக இருக்கிறது கதையின் வெற்றி கடைசியில், கதாபாத்திரத்தின் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்பது அதன் காரணமாக அர்த்தம் கொள்கிறது. அதோடு மொழியைக் கையாள்வதில் எளிமையும், வளமும் கூடுதலாக உள்ளது. எளிமையின் ஊடாக தென்படும் செழுமை கதைக்கு ஒரு பரிணாமம் கொடுக்கிறது.
பாரதிபாலன் சிறுகதைகளில் சிற்றூர்த்தன்மை என்பது அதன் சொல்லப்படுகின்ற விதத்திலேயே பேச்சின் தொனியில், அதன் மூலமாக அவர்கள் வெளிப்படுத்துகின்ற நேசத்தில் அதிகமாக உணரப்படுகிறது. அதுதான் சிறப்பு அம்சம்!
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வாழ்ந்தவன் நொடித்துப் போகிறான். இருப்பதையெல்லாம் இழந்து தெருவிற்கு வந்து விடுகிறான். ஆனாலும் அவன் மனிதநேயம் என்பது மாசு மருவற்று இருக்கிறது. அங்கு அது ஒருதடையாகவே இல்லை. நெகிழவைக்கிறது. படைப்பு என்பதற்கு ஒரு புதிய அர்த்தம் கொடுப்பது போலவும் – அன்பையும் பண்பையும் பிரசாரம் செய்வதையே குறியாக தனது கதைகளை எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியும் என்றாலும், அஃது இலக்கியமாக வந்திருக்கிறது என்கிறபோது மற்றதெல்லாம் அடிபட்டுப் போய்விடுகிறது!
Leave a Reply