(ஆவணி 15, 2045 /ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி)

12.        சியான் நகரின் ஆற்றில் நாகப்புள்(Dragons)!

43dragon02

     பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே! அதுபோலச் சீனாவிலும் பல இடங்கள் சீன இலக்கியங்களின் ஊடாக இன்றைக்கும் மதிக்கப்பட்டு வருகின்றன.

     சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் தமிழகத்தின் அரசுச் சின்னமாக வழங்கப்படுவதைப் போல், சியான நகரின் அடையாளமாக இந்தக் கோபுரமே பல இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.

     மன்னர் காலத்தில் 5000 பொற்கொல்லர்கள் இணைந்து, சற்றொப்ப 6500 அயிரைக்கல் (கிலோ) எடை கொண்ட ஒரு மிகப்பெரும் மணியை இங்கு உருவாக்கியுள்ளனர். நகரத்திற்கு வெளியிலுள்ள ஓர் ஆற்றில் நாகப்புள்(dragon) ஒன்று படுத்து உறங்குவதாகவும், அதன் காரணமாகச் சியான் நகரில் பலமுறை நிலநடுக்கம் ஏற்படுவதாகவும், அதைப் போக்கவே இந்த மணி உருவாக்கப்பட்டதாகவும் இந்த மணிக் கோபுரத்திற்குப் பின்னணியில் ஒரு கதை வழங்கப்படுகின்றது.

     இன்னொரு குறிப்பிடத்தகுந்த செய்தி. இந்த மணிக்கோபுரம் அமைந்துள்ள பகுதிதான் சியான் நகரின் முதன்மையான வணிகப்பகுதியாகும் நிறைய கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதியில்தான் வெளிநாட்டவர் முதல் சீனாவின் பிற மாகாண மக்கள் வரை எனச் சுற்றுலா வரும் பலரும் பொருட்கள் வாங்குகின்றனர்.

 43Wei-River01

    சீன இலக்கியங்கள் குறிப்பிடுவதுபோல, சியான் நகருக்கு வெளியில் ஓர் ஆறு ஓடுவது உண்மைதான்! வெய்யாறு(Wei River) எனப்படும் அந்த ஆற்றை நானும் பார்த்தேன். சீனாவின் புகழ்பெற்ற மஞ்சள் நதியிலிருந்து பிரிந்து வரும் கிளை ஆறு இது! ஆனால், அது ஆறாக மட்டும் இல்லையென்பதைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். தொழிற்சாலைக் கழிவுகளுடன் செம்மண் கலந்து ஓடும் அந்த ஆறு, சென்னை நகரின் கூவம் போலவே சீனத்துக் கழிவுநீர் ஆறாகக் காட்சியளித்தது.

 Wei River meets the Yellow River

     ஆற்றங்கரைகளில்தான் நாகரிகம் தழைத்தோங்கியது என்பார்கள். ஆனால், இன்றைய உலகமயக் காலகட்டத்தில், நாகரிகம் மிகவும் வளர்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் நகரங்களில் ஓடும் ஆறுகள்தான் இருப்பதிலேயே மிகவும் மாசுபடுத்தப்பட்டு, அந்த நகரத்து மக்களின் ‘நாகரிக’த்தை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன.

  முதலாளியம் கோலோச்சும் உலகின் புகழ்பெற்ற நகரங்களில் ஓடுகின்ற ஆறுகள் எல்லாம் பெரிய அளவிலான திறந்தவெளிச் சாக்கடைகளாகவே காட்சியளிக்கின்றன. ‘பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறி!’ என உலகமயம் புகுத்துகின்ற நுகர்வியம், அதன் பொருட்களுக்கு மட்டுமல்ல இயற்கை வளங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தும்! இதுதான் உலகமயத்தின் விதி! ஆகச், சீன இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல் சியான் நகரின் ஆற்றில் நாகப்புள் ஓடுவது உண்மைதான்! அது உலகமய நாகப்புள்!

 43dragon03

  சீனாவில் திரும்பியப் பக்கமெல்லாம் புத்தர் சிலைகளும், சிற்பங்களும் இருக்கின்றன. ஆனால், நான் கேட்டறிந்தவரை யாரிடமும் கடவுள் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இன்னொரு வேடிக்கையான பழக்கம் இருக்கிறது!

  இந்தக் கோபுரத்தை சுற்றிப் பார்க்கும்போதே, ஒருவர் கையில் புத்தர் உருவுள்ள தொங்கட்டான்(நpendant) ஒன்றை  ஒரு சிவப்புக் கயிற்றில் கட்டிக் கொண்டு வந்தார். அதை கட்டிக்கொண்டால், உங்களுக்கு நல்லூழ் என ஆங்கிலச் சொற்களைக் கொண்டு சொல்ல முயன்றார். என்னுடன் வந்திருந்த நண்பரும், தோழியும் அதை கையில் வாங்கி அணிந்து கொண்டார்கள்.  அவர்கள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்களோ என நம்பி அவர்களிடன் வினவினேன், அதற்கு அவர்கள் சொன்னார்கள்,  “எங்களுக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது. ஆனால், நல்லூழில் நம்பிக்கை இருக்கிறது” என. எனக்கு வேடிக்கையாக இருந்தது. பூங்காக்களில் பல இடங்களில் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டுள்ள சிங்கம் போன்ற சிலைகளுக்கு, அக்கண்ணாடியின் துளை வழியே பலரும் பணம் போட்டு விட்டுச் செல்கின்றனர். விவரம் கேட்டால், அந்தப் பணம் நல்லூழால் திரும்பி வரும் என்றனர்.

 43dragon01

  சீன அரசு, எந்த மதத்தையும் ஏற்கவில்லை. அதே நேரத்தில், வழிபாட்டுரிமையில் பெரிதாகத் தலையிடுவதில்லை. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் சீன மக்களுக்கு, மதம் என்ற கதவை எப்பொழுதும் திறந்துவைத்திருப்பது நல்லதுதான் எனச் சீன அரசு கருதுகிறது. அந்த வழியையும் அடைத்து வைத்து விட்டால், மக்கள் தம் துன்பங்களுக்கு உண்மையான காரணம் அரசுதான் எனக் கருதக்கூடும். அது தமக்கே பேரிடராகவும் முடியக்கூடும். எனவே, மத வழிபாடுகளில் சீன அரசு குறுக்கிடுவதில்லை.

aruna

 (தொடரும்)