செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி
18. சீனாவில் ‘பயங்கரவாதம்’
அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன்.
அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர். 109 பேர் காயமடைந்தனர். அக்குழுவினர் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. விசாரணையில் அக்குழுவினர், அல்கெய்தா அமைப்புடன் தொடர்புடைய கிழக்கு தர்கிசுதான் இசுலாமிய அமைப்பினர்(East Turkestan Islamic Movement – ETIM) என்று தெரியவந்தது. இத்தாக்குதல் காரணமாகவே, சியான் நகரின் பல இடங்களிலும் காவல்துறை பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள (சின்சியாங்கு) (Xinjiang)மாகாணத்தில், உய்கூர் (Uyghur) என்ற பகுதி உள்ளது. தனித்த தேசிய இனமாக விளங்கி வரும் இம்மக்கள் பெரும்பாலும், இசுலாமிய மதத்தைப் பின்பற்றுகின்றனர். எண்ணெய் வளம் மிக்க இப்பகுதியை, கடந்த 1949–ஆம் ஆண்டு, மாவோ தலைமையிலான மக்கள் சீன இராணுவம், இப்பகுதியைப் பலவந்தமாகக் கைப்பற்றிப் புகுந்தது( ஆக்கிரமித்தது). 1955 அக்டோபரில், சின்சியாங்கு மாகாணத்தைச், சின்சியாங்கு உய்கூர் தன்னாட்சிப் பகுதி என மாவோ அறிவித்தார்.
எனினும், தொடர்ந்து உய்கூர் இன மக்கள் தங்கள் தாயக விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். போராடும் இயக்கங்களைச் சீன அரசு கடுமையாக ஒடுக்கினாலும், தாயகக் கனவு அம்மக்களை விட்டு அகலவில்லை. அவர்களுள் சில இளைஞர்கள் அல்கொய்தா முதலான இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, சீனாவின் மீது அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவ்வாறான தாக்குதலின் ஒரு பகுதிதான் அன்றைக்கு கும்மிங் (Kunming) தொடர்வண்டி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு!
வட அமெரிக்க வல்லரசு, ஈராக் – ஆப்கானித்தான் என உலகின் பல பகுதிகளிலும் தன்னுடைய இராணுவத்தை நிலைநிறுத்தி வன்கவர்வு(ஆக்கிரமிப்பு) செய்து வருகிறது. பிரிட்டன் முதலான பல ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்காவிலுள்ள பல நாடுகளில் தங்கள் இராணுவத்தை நிலை நிறுத்திக் கொண்டு, அங்குள்ள வளங்களைக் கொள்ளையிடுகிறது. இந்திய அரசு, காசுமீர் – நாகாலாந்து – மிசோரம் – மணிப்பூர் என பல்வேறு தேசிய இனத்தாயகங்களை இராணுவ வலிமையுடன் இவ்வாறு தான் இணைத்து வைத்துள்ளது.
ஆக, உலகெங்கும் நடைபெறும் தாயக வன்கவர்வு(ஆக்கிரமிப்பு) நடவடிக்கைகளில் வெறுப்பு கொள்ளும் இளைஞர்கள், தவறான வழிநடத்தல் காரணமாக, வன்கவர்வு நாட்டின் மக்களைப் பலி கொள்கின்றனர். இந்தியாவின் மும்பை தொடர்வண்டி நிலையத் தாக்குதல் முதல், சீனாவின் குன்மிங்கு தொடர்வண்டி நிலையத் தாக்குதல் நிகழ்வு வரை, இது தான் விதியாக இருக்கிறது. இந்தப் பயங்கரவாத நிகழ்வுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதோடு, எல்லா சிக்கலும் முடிந்துவிட்டன என வன்கவர்வு நாடுகள் நினைக்கின்றன.
உண்மையில், ஓர் தேசிய இனத்தின் தாயகப் பகுதியை வலுக்கட்டாயமாக எவர் வன்கவர்ந்து வைத்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் இதுபோன்ற மோசமான எதிர்வினைகளைச் சந்தித்தாக வேண்டும். இந்த எதிர்வினைகள் முழுவதமாக ஒழிக்க வேண்டுமெனில், உண்மையில் அந்தத் தேசிய இனங்களின் விடுதலையைத்தான் அறிவிக்க வேண்டும். கையில் கிடைத்தவர்களைக் கொல்வதன் மூலம் யாராலும் எந்தச் சிக்கலையும் தீர்த்துவிட முடியாது என்பதே உலகநாடுகள் இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை!
Leave a Reply