செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி
(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி)
3. இந்தியப்பணத்தாளில் காந்தி …
சீனப் பணத்தாளில் மாவோ!
சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.
நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற இருக்கைக்கு முன் சிறு சிறு கடவுள் சிலைகளை வைத்திருப்போமோ, அதே போல சீனர்கள் பலரும், தங்களுடைய வாகனங்களின் முகப்பில் மாவோவின் சிலையை வைத்திருக்கின்றனர். எளிமையான சில கடைகளில், மாவோவின் படம் இருப்பதைக் கண்டேன். ஆனால், சீனத் தகவல் தொழில்நுட்ப நண்பர்கள் பலரிடம் பேசியபோது, அவர்கள் மாவோ-வை வெறும் ‘தேசத்தந்தை’யாக மட்டுமே அறிந்து வைத்துள்ளனர் என்று புரிந்து கொண்டேன்.
இந்தியாவில் எப்படி உரூபாய்த் தாள்களில் மட்டும் காந்தி வாழ்கிறாரோ, அதே போலத்தான் சீனாவில் யுவான் பணத்தாள்களில்(yuan notes) மட்டுமே மாவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார். காந்தியத்துக்கு இந்தியாவில் என்ன கதியோ, அதேதான் சீனாவில் மார்க்சியத்திற்கும் நேர்ந்துள்ள கதி!
வானளாவிய உயர்ந்து நிற்கும் கட்டடங்கள் – தெருவுக்குத் தெரு – கே.எப்.சி. – மெக்டொனால்டு நிறுவனங்கள் என ஒரு குட்டி வட அமெரிக்காவாகவே காட்சியளித்தது, சீனா. அவ் வகையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த வட அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் சான் பிரான்சிசுகோ நகரம் போலவே, தெற்குச் சீனாவில் அமைந்துள்ள சியான் நகரம் காட்சியளித்தது. ஏனெனில், இந்த நகரத்தில் மட்டும் சற்றொப்ப 800க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைவிரித்திருந்தன.
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 7.2 கோடி என்றால், சியான் மக்கள் தொகை மட்டும் 8.4 கோடி. சென்னையைவிட 57 மடங்கு அளவிற்கான பரப்பளவைக் கொண்ட நகரம் இது! பண்டைய சீனாவின் முதன்மையான மன்னர்கள் பலர், இந்நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் ஏற்படுத்தப்பட்ட பல கட்டடக் கட்டமைப்புகள் இங்கு தொடர்ந்து காணக் கிடைக்கின்றன. அதை சுற்றிப்பார்க்க, கணிசமான அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சியான் நகரத்திற்கு வருகின்றனர்.
அதேவேளையில், கடுங்குளிர் காரணமாக வேளாண்மை மிகவும் குறைவாக நடக்கின்றது. பல இடங்களில் பயிர்களுக்கென்று தனித்த கூரைகள் அமைக்கப்பட்டு, அதில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அந்தக் கூரையின் கீழுள்ள பயிர்கள் அதிகளவிலான குளிரிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. அப்பயிர் வளர்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலை செயற்கையாக அக்கருவியில் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு, பல இடங்களில் கூரைகள் அமைக்கப்பட்டு அதில் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. விறகுக்காக அதிகஅளவிலான மரங்கள் வளர்க்கப்படுவதும் நடக்கிறது.
வேளாண்மை குறைவாக நடக்கும் இப்பகுதியில் காலப்போக்கில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்திறங்கின. சுற்றுலா-தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, இங்கு சின்சியாங்கு(Xinjiang) என்ற பெயரிலான மிகப்பெரும் விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
(தொடரும்)
Leave a Reply