bhuthaveriyall-rathaveri

புத்த வெறியல்ல… இரத்த வெறி!

  பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.

   எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப் புளுகுமூட்டை அவிழ்ந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருப்பது அம்பலமானது. ‘அப்படியெல்லாம் யாரும் சிறைகளில் இல்லை’ என்று சொன்ன அதே இலங்கை, ‘அவர்களை விடுவிக்கக் கூடாது’ என இப்போது கூசாமல் பேசுகிறது.

  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்த விக்கினேசுவரன் வகுத்த திட்டங்கள் குறித்து இப்போது பேசுவது தேவையற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் சொன்ன மாதிரி, ‘நிறைவாகும் வரை மறைவாக இருப்பதுதான்’ நல்லது.

 தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதியால்தான் நிறுத்தப்பட்டது. மைத்திரிபாலாவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அது தொடர்பாக இந்தக் கிழமை(வாரம்) மைத்திரியுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் பேச இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கிறார்.

 மாவையும் சம்பந்தனும் மைத்திரியிடம் கண்டிப்பாகப் பேசுவார்கள். அதில் நமக்கு ஐயமேயில்லை. மைத்திரியும் கண்டிப்பாக வாக்குறுதி கொடுப்பார். அதிலும் ஐயமில்லை. இந்த அரசியல் விளையாட்டு இரண்டு தரப்புக்குமே கட்டாயம் தேவைப்படும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? இதில்தான் நமக்கு ஐயம் எழுகிறது.

 கூட்டமைப்பின் தலைவர்கள் முதலான அரசியலாளர்களை நம்ப இயலாத நிலைக்குச் சிறையில் வாடுகிற ஒன்றுமறியாத் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களென்றால், கூட்டமைப்புத் தலைவர்களின் குளறுபடிகள்தான் அதற்குக் காரணம். கூட்டமைப்பிலுள்ள அறிவாளி ஒருவர், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எத்தகைய முரண்பாடான கருத்துகளையெல்லாம் வெளியிட்டார் என்பதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை.

  “முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அரசியலாளர்களை எங்களால் நம்ப முடியவில்லை. வட மாகாண அவை முதல்வர் விக்கினேசுவரனைத்தான் நம்புகிறோம். எங்களது விடுதலை தொடர்பாக அரசுடன் முதல்வர் பேசுவதுதான் பொருளுள்ளதாக இருக்கும்” எனத் தங்கள் பெற்றோர் மூலம் அரசியல் கைதிகள் சொல்லி அனுப்பியிருப்பதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

 வீரகேசரியை மாவை படிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குத் தகவல் இல்லை. எனினும், அதைப் படிக்காததால்தான் “ அதிபருடன் பேசப் போகிறோம்” என்று அவர் கூறியிருப்பார் என நான் கருதுகிறேன்.

  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மட்டுமில்லாமல், காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் குடியதிபருடன்(சனாதிபதியுடன்) பேசப் போவதாக மாவை தெரிவித்திருக்கிறார். இப்படிச் சொல்வதற்கான அனைத்து உரிமையும் நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான அவருக்கு இருக்கிறது. அந்த உரிமையோடு, சிக்கல் குறித்த புரிதலும் மாவைக்கு இருக்க வேண்டியது இன்றியமையாதது என நினைக்கிறேன்.

 காணிகள் விடுவிப்பும், தமிழர் தாயகத்திலிருந்து படையினரை(இராணுவத்தை) வெளியேற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது மாவைக்குத் தெரியுமா தெரியாதா? படையினரை வெளியேற்றாமல் படையினர் பிடித்து வைத்திருக்கும் காணிகளை எப்படி விடுவிக்க முடியும்? அந்த நிலங்களின் உரிமையாளர்களான தமிழர்களிடம் அவற்றை எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்?

 “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்” – என்கிறது வள்ளுவம்.

அதுதானே அறிவுடைமை?

 உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர், முதலில் மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும். நோய்க்கான காரணம் என்ன என்பதையே அறியாமல், “காய்ச்சலுக்கு இரண்டு மாத்திரை கொடு” என மருந்துக்கடையில் போய்க் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதைத்தான் செய்கிறார் மாவை. அவருக்கும் விக்னேசுவரனுக்கும் இடையில் இருக்கிற வேறுபாட்டை இதுபோன்ற அணுகுமுறைகள்தாம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி காட்டுகின்றன. தமிழர் தாயகத்தில் நூற்றைம்பதாயிரம் படையினர் நிற்க வேண்டிய தேவையென்ன? போர் முடிந்துவிட்டதாக அவர்களே அறிவித்துவிட்ட பிறகு இந்தப் படைத் திணிப்பு எதற்கு? தொடர்ந்து பாலியல் முறையீடுகளுக்கு உள்ளாகும் ஒரு படையினர் எம் மண்ணில் நிற்பது எம் உடன்பிறந்தாள்களுக்குக் கண்டமா(ஆபத்து) இல்லையா? படையினரை வெளியேற்றாமல் காணிகளை எப்படி விடுவிக்க முடியும் – எனவெல்லாம் அழுத்தந் திருத்தமான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்கிறார் விக்கினேசுவரன்.

   “படையினரை வெளியேற்று!” – என்று மட்டுமே விக்கினேசுவரன் சொல்லவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றைத் துணிவோடு அம்பலப்படுத்தினார். “தமிழர் தாயகத்தில் போதை மருந்துகளைப் பரப்புவது படையினர்தான்… எம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்காக இந்தக் கொடுமையை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.

  விக்கினேசுவரனின் இந்தக் குற்றச்சாட்டு மிக மிகக் கடுமையானது. உலகின் எந்த நாட்டிலும், ஒரு நடுவண் அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாகப் படையினருக்கு எதிராக – ‘போதைப் பொருளைப் படைப்பிரிவு பரப்புகிறது’ என்று யாரும் குற்றம் சாட்டியதாகத் தெரியவில்லை. விக்கினேசுவரன் மாகாண அவை ஒன்றின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவர் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தது, எளிதான செய்தி இல்லை!

 விக்கினேசுவரன் சொன்னது பொய்யாயிருந்தால், இலங்கை நடுவண் அரசு உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். அப்படிச் செய்யத் துணியாததிலிருந்து, விக்கினேசுவரனின் குற்றச்சாட்டு வலுவானது என்பது தெளிவாகிறது. அப்படியொரு குற்றச்சாட்டு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கக் கூடத் துணிவில்லாதிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புதான், ‘படையினரை வெளியேற்று’ – என முழங்காமல், ‘காணிகளை விடுவி’ என மென்று விழுங்குகிறது.

 படை யினரை வெளியேற்று – என்பதை வலியுறுத்தாமல், ‘காணிகளை விடுவித்துவிடுங்கள்’ – என மாவை கோருவது பொருளற்றது. நோய்க்கான காரணம் என்ன என்பதைப் பற்றிக் கவலையேப்படாமல், மருந்துக் கடையில் போய் மாத்திரை கேட்கிறாரா மாவை!

  பல்லாயிரம் மக்கள் வாழ்வதற்குப் போதுமான ஒரு நிலப்பரப்பு, சில நூறு பேரே இருக்கிற ஒரு படைப்பிரிவு முகாமுக்குத் தேவைப்படுகிறது. அதன் பக்கத்தில்கூட எவரும் நெருங்கிவிட முடியாத அளவுக்கு நீண்ட தொலைவுக்குப் பாதுகாப்பு வேலிகள் தேவைப்படுகின்றன. படையினரை வெளியேற்றாமல், அந்தக் காணிகளை மீட்டுவிட முடியும் என மாவை நம்புவது அவரது அறியாமையை மட்டுமே காட்டுகிறதா, ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் அறியாமையையும் காட்டுகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

  உடன்பிறவி தமிழினிக்காகப் பாவலர் ஈழவன் எழுதியிருந்த வெகு அருமையான ஒரு கவிதையை மாவை போன்ற தலைவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

 “விழுபவர் எழுவதும் வீழ்த்தியோர் அழிவதும்

எழுதிய விதியதன் உறுபயன் ஆயினும்

எதையெதை இழந்தோம் எதுவரை இழந்தோம்

அதையெலாம் அறிந்திடும் அருகதை இழந்தோம்”

 என்கிறார் ஈழவன் வேதனையுடன்!

  இந்த இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவை அறிந்திடும் அருகதையை எவர் இழப்பினும், இந்த இனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் இழக்கலாமா? இந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த எமது மக்கள்தானே விக்னேசுவரன் என்கிற புதுவரவை முழு நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்…..! அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற விக்கினேசுவரனால் முடிகிற நிலையில், அதற்கு நேர்மாறாகத் தலைவர்கள் சிலர் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்?

   இனப்படுகொலை எனச் சொல்வது அரசச் சூழ்ச்சி( இராசதந்திரம்) இல்லை…

  பன்னாட்டு உசாவல் கோருவது அரசச் சூழ்ச்சி இல்லை….

  படையினரை வெளியேற்றச் சொல்வது அரசச் சூழ்ச்சி இல்லை…

என மெத்தப் படித்த அறிஞர்கள் சிலர், இந்தத் தலைவர்களின் சார்பில் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே…… வேறெதைத்தான் அரசச் சூழ்ச்சி என்று கருதுகிறார்கள் அவர்கள்

இனப்படுகொலை – என்கிற சொல்லைப் பார்த்து நடுங்குவது இலங்கை அரசு மட்டும்தான்…

பன்னாட்டு உசாவல் கூடவே கூடாது – எனச் சொல்வது, பௌத்த சிங்கள வெறியர்கள்தாம்….

தமிழர் தாயகத்திலிருந்து படையினரை வெளியேற்றவே கூடாது – என வற்புறுத்துவது பௌத்த சமயப் பீடங்கள்தாம்…..

அவர்கள் சொல்வதையேதான் இவர்களும் சொல்வார்கள் எனில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் எதற்கு? தமிழ் – சிங்களக் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!

 அரவணைத்துப் போய் வேண்டியதை வென்றெடுத்துக் கொள்வதுதான் அறிவுடைமை – என எனக்கு மின்னஞ்சல் வழி அறிவுரை சொல்லுகிற நண்பர்களிடம் – ‘அரவணைத்துப் போய் எதைக் கிழித்திருக்கிறார்கள்’ எனக் கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை.

 2009இல் நடந்தது திட்டமிட்ட அந்த இனப்படுகொலை.

ஆறு ஆண்டுகள் முடிந் து போய்விட்டன.

எம் உறவுகளைக் கொன்று குவித்த படையினன் ஒரே ஒருவன் கூடக் கூண்டில் நிறுத்தப்படவில்லை. எம் உடன்பிறந்தாள்களைச் சீரழித்து சின்னபின்னமாக்கிக் கொன்ற ஒரே ஒரு படையினப் பொறுக்கி கூடத் தூக்கிலிடப்படவில்லை. எல்லா விதங்களிலும் அழிக்கப்பட்ட எம் இனத்துக்கு, ஒரே ஒரு முனையில் கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை.

  தமக்கான நீதியை எமது மக்கள் பெறுவதற்கு இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிவைக்க முடியவில்லை, மெத்தப்படித்த அறிஞர்களால்! சிங்களக் கொடும்விலங்குகளுக்குக் கால நீட்டிப்பு வாங்குகிற உள்குத்து வேலையை மட்டும்தான் நன்றியுணர்வோடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

 இதைத்தான் சம்பந்தனிடம் கேட்டிருக்கிறார்கள், சுரேசு பிரேமச்சந்திரனும் மற்றவர்களும்! “நீங்களும் சுமந்திரனும் உங்கள் விருப்பப்படி எடுக்கிற முடிவுகளைக் கூட்டமைப்பின் முடிவாக செனிவாவில் பறைசாற்றியது நியாயமா” என்று கேட்டவர்களிடம் சம்பந்தன் மன்னிப்பு கேட்டதோடு அவை கலைந்துவிட்டது.

 நடந்த தவற்றுக்கு [தவறா அது, பச்சையான இரண்டகம்!(துரோகம்)] சுரேசிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்பு கேட்ட சம்பந்தர், ‘சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல்’ என்கிற பெயரில் மைத்திரி நடத்துகிற திட்டமிட்ட கேடுகெட்டத்தனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே… யாராவது கேட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறாரா?

 செனிவாத் தீர்மானத்தில் ‘பன்னாட்டு உசாவல்’ என்கிற வார்த்தை ‘கொல்லப்பட்ட’போது, அதை வேடிக்கை பார்த்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய உசாவல் – என்று குறிப்பிடப்பட்டதே எங்களால்தான் என்று நீட்டி முழங்கியது. இப்போது, அந்த உசாவல்தானே தொடங்கப்பட வேண்டும்? அதற்கு நேர்மாறாக, ‘என்ன செய்வது’ எனக் கலந்துரையாட சமயத்தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதே, எதற்கு? சமயத் தலைவர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு – எனக் கேட்க வேண்டாமா சம்பந்தர்?

 இலங்கையின் விருப்பப்படியெல்லாம் வரிக்கு வரி மாற்றப்பட்டது, செனிவாத் தீர்மானம். உண்மையில் அது அமெரிக்காவின் தீர்மானமே இல்லை; இலங்கையே எழுதிக்கொடுத்த தீர்மானம். அதைக் கூட மதிக்காதென்றால், இலங்கை வேறெதைத்தான் மதிக்கப் போகிறது?

 செனிவாத் தீர்மானத்தின் எந்த இடத்திலாவது – ‘இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு தொடர்பாக இலங்கையின் சமயத் தலைவர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? ‘எந்த அடிப்படையில், செனிவாத் தீர்மானம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து சமயத் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ – என இலங்கை அரசிடம் கேட்க வேண்டாமா சம்பந்தன்?

 பௌத்த சமய வெறிதான், இலங்கை என்கிற நாடு கேடுகெட்டுப் போனதற்கு மூலக்காரணம். நாட்டு நலனைக் காட்டிலும் பௌத்த நலன்தான் முதன்மை – என்கிற தவறான அணுகுமுறையால்தான் அழிந்திருக்கிறது அந்த அழகிய தீவு.

 அமைதித் தீர்வுக்கு முயன்ற பண்டாரநாயகாவை புத்தபிக்கு ஒருவன்தான் சுட்டுக் கொன்றான். புத்த பிக்குகளின் திருவோடுகள் தமிழரின் குருதியால் நிறைவது, ஒட்டுமொத்த இலங்கையும் அறிந்த கமுக்கம்(இரகசியம்). அந்தப் பௌத்த விலங்குகளை உட்காரவைத்து, நீதி கிடைக்க என்ன செய்யலாம் எனக் கலந்துரையாடுவதை சம்பந்தன் எப்படி ஒப்புக் கொள்கிறார்?

  சிங்களப் பௌத்தர்களால் எடுத்த எடுப்பிலேயே கொன்று குவிக்கப்பட்டது, தமிழினம் இல்லை…..! அதற்கு முன்பே, புத்தன் உரைத்த அன்பையும் இன்னா செய்யாமையையும் (அகிம்சை) துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தவர்கள் அவர்கள். அவர்களது வெறி – புத்த வெறியல்ல, இரத்த வெறி.

 ‘இரத்தப் பிக்குகளை மடியில் வைத்துக்கொண்டே நீதி வழங்குவோம்’ – எனச் சொல்கிற இலங்கையின் ஒழுக்கக்கேட்டைச் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமில்லை, அமெரிக்காவும் இந்தியாவும் கூடப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயலாமல், பாதிக்கப்பட்ட எமது தாயக மக்கள் மீது இரத்தப் பிக்குகளின் தீர்வைத் திணிக்க இவர்கள் யார்?

–திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

pugazenthi thangarasu02

–தமிழக அரசியல் – ஐப்பசி 20, 2046 / 05.11.2015.

attai-thalaippu-thamizhaga arasiyalதரவு : குபேரன்நகர் அறிவொளி